இந்தியா

மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதிராக உள்ளது- தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு

Published On 2024-11-08 08:33 GMT   |   Update On 2024-11-08 08:33 GMT
  • கடந்த 2½ ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மகாராஷ்டிராவின் வளர்ச்சி வேகம் தொடரும்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அது போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதி 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் மாறி உள்ளது.

பிரதமர் மோடி மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள துலே நகரில் பிரசாரம் செய்தார்.

அப்போது அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்துடன் எனக்குள்ள தொடர்பு உங்களுக்குத் தெரியும். நான் மகாராஷ்டிராவிடம் ஏதாவது கேட்ட போதெல்லாம், அம்மாநில மக்கள் எனக்கு முழு மனதுடன் ஆசிர்வாதம் அளித்துள்ளனர்.

கடந்த 2½ ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மகாராஷ்டிராவின் வளர்ச்சி வேகம் தொடரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.

மக்களை நாங்கள் கடவுளின் மற்றொரு வடிவமாக கருதுகிறோம். ஆனால் சிலர் மக்களை கொள்ளையடிப்பதற்காக அரசியலில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி, மகாராஷ்டிரா மக்களை கொள்ளையடிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கிறது. காங்கிரஸ், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி.

அரசியலில் இவர்களின் ஒரே நோக்கம் மக்களைக் கொள்ளையடிப்பதுதான். அந்த கூட்டணி கட்சியினர் அரசாங்கத்தை அமைக்கும் போது, அவர்கள் ஒவ்வொரு அரசாங்க கொள்கையிலும் வளர்ச்சியிலும் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அதை நீங்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தின் 2½ ஆண்டு காலத்தில் பார்த்து உள்ளீர்கள். மகா விகாஸ் அகாடி என்பது சக்கரங்கள் மற்றும் பிரேக்குகள் இல்லாத வாகனம், அங்குள்ள அனைவரும் ஓட்டுநர் இருக்கையில் அமர சண்டை போடுகிறார்கள்.

பா.ஜ.க. கூட்டணி மக்கள், மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது.

பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி மட்டுமே மகாராஷ்டிராவின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்யும். மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம் முக்கியம். அதற்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

எதிர்க்கட்சியினர் கண்ணிய குறைவான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அவர்கள் பெண்களை அவமதித்தும், துஷ்பிரயோகமும் செய்கிறார்கள்.

எங்களது அரசாங்கம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்காக பணியாற்றி வருகிறது. ஆனால் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. அனைத்து சாதிகளும் பிரிந்து இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News