பிளாட்பாரத்தில் தூங்கிய கர்ப்பிணியை பலாத்காரம் செய்த 2 பேருக்கு 20 ஆண்டு ஜெயில்
- கர்ப்பிணி பெண்ணின் கணவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்து ரூ. 750-ஐ பறித்தனர்.
- கர்ப்பிணி பெண்ணை வலுக்கட்டாயமாக நடைபாதைக்கு பின்புறம் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்டா பாலம் மண்டலத்தை சேர்ந்தவர் 30 வயது கர்ப்பிணிப் பெண்.
இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி இரவு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கிருஷ்ணா மாவட்டம், நாகயலங்கா என்ற இடத்திற்கு கூலி வேலைக்கு செல்வதற்காக பாபட்லா மாவட்டம், ரேப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
இரவு நேரம் என்பதால் அங்குள்ள ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த 2 வாலிபர்கள் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை தட்டி எழுப்பினர்.
கர்ப்பிணி பெண்ணின் கணவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்து ரூ. 750-ஐ பறித்தனர்.
பின்னர் கர்ப்பிணி பெண்ணை வலுக்கட்டாயமாக நடைபாதைக்கு பின்புறம் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
வாலிபர்களிடம் இருந்து தப்பிச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது குறித்து ரேப்பள்ளி ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவனை பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விஜய கிருஷ்ணா (வயது 25), நிகில் (20) என தெரியவந்தது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு குண்டூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சரத் பாபு முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிந்து பாலியல் பலாத்கார வழக்கில் நீதிபதி சரத் பாபு நேற்று தீர்ப்பு வழங்கினார்.
கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விஜய கிருஷ்ணா மற்றும் நிகிலுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.