இந்தியா

வங்கியில் லாக்கரை உடைத்து ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

Published On 2024-02-09 04:44 GMT   |   Update On 2024-02-09 04:44 GMT
  • கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றது பதிவாகி இருந்தது.
  • கேமரா பதிவுகளை வைத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிரதிபாடு அடுத்த உத்தரகாஞ்சியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வங்கி இயங்கி வரும் கட்டிடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை கியாஸ் கட்டர் மூலம் வெட்டி எடுத்தனர்.

பின்னர் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் வங்கியில் இருந்த 2 லாக்கர்களை கியாஸ் கட்டர் மூலம் வெட்டி எடுத்தனர். அதிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்தனர். கைரேகைகள் பதிவாகாமல் இருக்க வங்கி லாக்கரை கியாஸ் கட்டர் மூலம் எரித்தனர்.

பின்னர் கியாஸ் சிலிண்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். வங்கிக்கு வந்த அதிகாரிகள் லாக்கர் எரிக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை.

கொள்ளையர்களின் உருவம் பதிவாகவில்லை. இதையடுத்து அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டனர் . அதில் கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றது பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமரா மூலம் 5 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கேமரா பதிவுகளை வைத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News