இந்தியா

எருமை மாடு வளர்க்கும் பெண் வேட்பாளருக்கு மவுசு அதிகரிப்பு

Published On 2023-11-27 05:39 GMT   |   Update On 2023-11-27 05:39 GMT
  • கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார்.
  • எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், மஹபூப் நகரை சேர்ந்தவர் சிரிஷா என்ற பரெலக்கா. பட்டதாரி பெண்ணான இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சிரிஷா தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு மத்தியில் வீடியோ எடுத்து, எருமை மாடுகளால் எப்படி வருமானம் கிடைக்கிறது, தன்னால் எப்படி படிப்பை தொடர முடிகிறது என விவரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

ஆயிரகணக்கான வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சிரிஷாவின் வீடியோவை பார்த்து அவருடன் சமூக வலைத்தளத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில் கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முதலில் சிரிஷாவின் தேர்தல் பிரசாரத்தை கண்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அலட்சியம் காட்டினர்.

நாளுக்கு நாள் சிரிஷாவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வந்தது. ஆதரவு பெருகி வருவதால் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை தொலைத்தனர்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த சிரிஷா மற்றும் அவரது சகோதரரை சரமாரியாக தாக்கினர். சிரிஷா ரத்த காயங்களுடன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் மேலும் அவருக்கு ஆதரவு பெருகியது.

தனக்கு அரசியல் கட்சிகளால் ஆபத்து உள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பெற்றார்.

பல்வேறு தரப்பில் இருந்து சிரிசாவுக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

தற்போது சிரிஷாவிற்கு சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அவருக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News