என்.டி.ராமராவ் சிலையின் தலை துண்டிப்பு- தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்
- தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி. ராமராவ் உருவ சிலைகள் மாநிலம் முழுவதும் உள்ளன.
இந்த நிலையில் பாபட்லா மாவட்டம் பர்திபுடி சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த என்.டி. ராமராவ் சிலையின் தலையை இரவு மர்ம நபர்கள் துண்டித்து கீழே வீசி சென்றனர்.
இதனை கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். என்.டி. ராமராவ் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது வெட்கக்கேடான செயல். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
சிலையின் தலையை துண்டித்தவர்களை கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கூறுகையில்:-
வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற கவலையில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதுபோன்ற செயல்களால் என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்