திருப்பதியில் ரூ.1000 தரிசன டிக்கெட்டை ரூ.28 ஆயிரத்துக்கு விற்ற கும்பல்
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது.
- பக்தர்கள் குறுக்கு வழியில் தரிசனம் செய்வதற்காக புரோக்கர்களிடம் சிக்கி பணத்தை இழந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பவன்குமார் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர்களிடம் தரிசன டிக்கெட் இல்லாததால் தேவஸ்தான ஊழியர் நாகபூஷணம் என்பவரை நாடினர்.
அவரது பரிந்துரை கடிதத்தின் மூலம் புரோக்கர் சுரேஷ் என்பவர் இரண்டு கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை பெற்று பவன்குமாரிடம் ரூ.28,500க்கு விற்பனை செய்தார்.
ஆயிரம் ரூபாய் கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை ரூ.28,500 கொடுத்து ஏமாந்ததை அறிந்த பவன்குமார் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பத்மநாபனிடம் புகார் செய்தார்.
இது குறித்து பவன் குமார் மற்றும் விஜிலன்ஸ் அதிகாரி பத்மநாபன் திருமலையில் உள்ள போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள திருப்பதி தேவஸ்தான ஊழியர் நாகபூஷணம் மற்றும் புரோக்கர் சுரேஷை தேடி வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது.எனவே பக்தர்கள் யாரும் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அடிக்கடி அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இருப்பினும் பக்தர்கள் குறுக்கு வழியில் தரிசனம் செய்வதற்காக புரோக்கர்களிடம் சிக்கி பணத்தை இழந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்வதற்காக வரும் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தினமும் 1000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 7000 தரிசன டிக்கெட்களை தேவஸ்தானம் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது.
திருப்பதியில் நேற்று 71,434 பேர் தரிசனம் செய்தனர். 24,212 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.