முதல்முறையாக கற்பழிப்பு வழக்கில் திருநங்கைக்கு 7 ஆண்டு ஜெயில்- திருவனந்தபுரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்தனர்.
- வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சிறயின்கீழ் பகுதியை சேர்ந்தவர் சச்சு சாம்சன் (வயது 34). திருநங்கை.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரெயில் பயணத்தின் போது ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இதையடுத்து சிறுவனை சச்சு சாம்சன் திருவனந்தபுரம் தம்பானூர் பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதன்பின்பு சச்சுசாம்சனை சந்திக்க சிறுவன் மறுத்தான். இதனால் அவர் செல்போன் மூலம் சிறுவனை தன்னுடன் வருமாறு அழைத்தார்.
இதனால் பயந்து போன சிறுவன் இதுபற்றி பெற்றோரிடம் கூறினான். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு திருநங்கை சச்சு சாம்சனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டாவிட்டால் கூடுதலாக ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
திருநங்கை ஒருவருக்கு கற்பழிப்பு வழக்கில் கோர்ட்டு தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.