குழந்தை பாக்கியத்திற்காக சுடுகாட்டில் மனித எலும்பு பவுடரை சாப்பிட சொல்லி இளம்பெண் சித்ரவதை
- சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை பெண்ணை சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள்.
- போலீசார் பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனே:
குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக செல்லும் தம்பதிகளை தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கருத்தரிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று மனித எலும்பு பவுடரை சாப்பிட சொல்லி உறவினர்கள் வற்புறுத்தி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அம்மாநிலத்தின் தொழில் நகரமாக திகழும் புனே நகரை சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடந்தது.
கல்யாணத்தின் போது வரதட்சணையாக ஏராளமான நகைகள், பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த அந்த பெண்ணின் வாழ்க்கை வரதட்சணை கொடுமையால் தலைகீழாக மாறியது. கணவர், மாமியார் மற்றும் உறவினர்கள் அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இது குறித்து அந்த பெண் புனே போலீசில் புகார் செய்தார்.
இந்த சூழ்நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாததால் கணவர் குடும்பத்தார் மந்திரவாதி ஒருவரை சந்தித்தனர்.
அப்போது அந்த மந்திரவாதி அமாவாசை நாளில் வீட்டில் சில பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் சுடுகாட்டுக்கு சென்று மனித எலும்புகளை சாப்பிட்டால் விரைவில் கரு உருவாகும் எனவும் கூறினார். இதனை உண்மை என நம்பிய பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
அதன்படி சம்பவத்தன்று மந்திரவாதி வீட்டுக்கு வந்து சில பரிகார பூஜைகளை செய்தார். பின்னர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கும் அந்த மந்திரவாதி பூஜை நடத்தினார்.
பின்னர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை அந்த பெண்ணை சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி புனே போலீஸ் துணை சூப்பிரெண்டு சுனில் சர்மா கூறும் போது நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.