இந்தியா

பவன் கல்யாண்


நான் தான் அடுத்த முதல்வர்- பவன் கல்யாண் பேச்சால் பா.ஜ.க.- தெலுங்கு தேசம் கூட்டணியில் குழப்பம்

Published On 2023-06-16 04:07 GMT   |   Update On 2023-06-16 04:07 GMT
  • அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.
  • பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

திருமலை:

ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடும் என தெரிகிறது.

அதற்கேற்ப அக்கட்சியின் தலைவரான நடிகர் பவன்கல்யாண் நேற்று முன்தினம் தனது வாராஹி யாத்திரை தொடங்கினார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கிநாடா அருகே உள்ள கத்திப்புடி பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவரது 'வராஹி' எனப்படும் பிரத்யேக நவீன வசதியுடன் கூடிய வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நானும் ஒருவன். சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் வெறும் நடிகனாக மட்டுமே இருக்க முடியும்.

ஆனால் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். எனது பிள்ளைகளுக்காக சேர்த்த சொத்துக்களை விற்று கட்சி தொடங்கி நடத்தி வருகிறேன்.

தற்போதைய ஆந்திர முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் எனது தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து விமர்சிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.

தேவைப்பட்டால் முதல்வராக அமர்வேன். கூட்டணியுடன் வருவேனோ அல்லது தனித்து வருவேனோ என சில மாதங்களில் தெரிந்து கொள்வீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பவன்கல்யாண் மற்றும் பாஜக கூட்டணியுடன் ஆட்சியை பிடிக்க சந்திரபாபு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அந்த கட்சிகளுக்கு 80 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இதுபோன்ற பிரசாரத்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News