இந்தியா

கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டால்... ரஜினிக்கு மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்

Published On 2023-09-28 04:09 GMT   |   Update On 2023-09-28 05:51 GMT
  • எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.
  • கர்நாடகத்தின் நிலையை ரஜினிகாந்த் எடுத்துக் கூற வேண்டும்.

பெங்களூரு:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த முழு அடைப்புக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. இதனால் தலைநகர் பெங்களூரு மீண்டும் முடங்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்-மந்திரி சித்தராமையாவின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், 'எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து 29-ந்தேதி (நாளை) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்துகிறோம். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்துகிறோம். நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு வந்து செல்கிறார். அவா் இங்கு இருந்தபோது காவிரி நீர் குடித்துள்ளார். அதனால் அவர் காவிரி பிரச்சனையில், கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்' என்றார்.

Tags:    

Similar News