மத்தியபிரதேசத்தில் நடுரோட்டில் இளம் பெண்ணை சுட்டுக்கொன்ற வாலிபர்
- கடந்த 2 ஆண்டுகளாக தீபக் அவரை தினமும் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தார்.
- தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் ரத்தோர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து பூஜாவை நோக்கி சரமாரியாக சுட்டார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் தர் பகுதியை சேர்ந்தவர் பூஜா (வயது 22)இவர் அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்தார்.
பூஜா வேலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் அதே பகுதியை சேர்ந்த தீபக் ரத்தோர் என்ற வாலிபர் பூஜாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனை பூஜா ஏற்கவில்லை. ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளாக தீபக் அவரை தினமும் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். பொறுமை இழந்த பூஜா இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.
இதனால் தீபக் ரத்தோர் அவரது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் நேற்று பூஜா வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த தீபக் என் கோரிக்கையை ஏற்கிறாயா? இல்லையா? என சண்டை போட்டார். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் ரத்தோர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து பூஜாவை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் நடுரோட்டில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் தீபக்கை தேடி வந்தனர். அவர் தர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை நோக்கி தீபக் துப்பாக்கியால் சுட்டான். சுதாரித்துக்கொண்ட போலீசார் திருப்பி சுட்டனர். இதில் தீபக் காலில் குண்டு பாய்ந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.