இந்தியா

தமிழிசை சவுந்தரராஜன்

அவமதிக்கும் தெலுங்கானா அரசு- தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

Published On 2022-09-09 04:19 GMT   |   Update On 2022-09-09 04:19 GMT
  • சட்டசபையில் கவர்னர் உரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • குடியரசு தினத்தன்று கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று நேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையொட்டி, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தெலுங்கானா மாநில அரசு மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நான் பதவி ஏற்றபோது, இந்த மாநிலத்துக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று உறுதி பூண்டேன். ஆனால் அதை சாத்தியமாக்க நான் எந்த முயற்சி எடுத்தாலும், அது எளிதான காரியமாக இல்லை.

மாநிலத்தின் உயர்ந்த பதவிக்கு கூட நிறைய முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது. உதாரணமாக, 'சம்மக்கா-சரக்கா ஜதாரா' என்ற பழங்குடியின திருவிழாவுக்கு செல்ல எனது அலுவலகம் ஹெலிகாப்டர் கேட்டது.

ஆனால், ஹெலிகாப்டர் தரப்படுமா, இல்லையா என்பது பற்றி மாநில அரசு எதுவுமே கூறவில்லை. பின்னர், 8 மணி நேரம் நான் சாலைமார்க்கமாக செல்ல வேண்டி இருந்தது. நான் மக்களை சந்திக்க விரும்பும்போதெல்லாம் நிறைய முட்டுக்கட்டைகளை சந்தித்தேன். ஒவ்வொரு மாநிலமும் தனது வரலாறை எழுதும். பெண் கவர்னர் என்பதால் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவர் எப்படி பாகுபாட்டுடன் நடத்தப்பட்டார் என்பதை இந்த மாநிலம் வரலாறாக எழுதும்.

கவர்னர் மோசமாக நடத்தப்பட்டார் என்று எதிர்மறையாக வரலாறு எழுதப்படுவதை நான் விரும்பவில்லை பெண் என்பதற்காக மட்டும் எனது உரிமைகளை கோர விரும்பவில்லை.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குடியரசு தினத்தன்று கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை. எனது அரசுமுறை பயணங்களின்போது மரபுகள் பின்பற்றப்படவில்லை.

கவர்னர் பதவி அவமதிக்கப்படுகிறது. உதாரணமாக, கவர்னர் மாளிகையில் நான் விருந்து அளித்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த பதவியில் இருப்பவர் வரமாட்டார் என்ற தகவலை என்னிடம் தெரிவித்து இருக்க வேண்டும்.

முதலில், வருவதாக சொன்னார்கள். பிறகு தகவலே இல்லை. உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News