ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி: ரேவந்த் ரெட்டி
- ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
- இதற்கான 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது- தெலுங்கானா முதல்வர்.
ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகள் பயிர்க்கடன்கள் நாளை தள்ளுபடி செய்யப்படும் என தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். காங்கிரஸ் அரசின் வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள், எம்.பி.க்கள் மற்றும் மற்ற அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டத்தின்போது மாநில அரசின் இரண்டு லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வாக்குறுதியின் ஒரு பகுதியாக நாளை முதல் படிப்படியாக விவசாயிகளின் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட இருக்கிறது. ஜூலை மாதம் இறுதியில் ஒன்றரை லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆகஸ்ட் மாதத்துடன் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விவசாயியையும் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதே காங்கிரஸ் அரசின் நோக்கம். கடந்த சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் அரசு செய்ததைப் போல, கடன் தள்ளுபடி என்ற பெயரில், தனது அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றவில்லை என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
2 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி ஒரே தவணையில் விவசாயிகள் கணக்கில் செலுத்தப்படும். மொத்தமாக 31 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ளது.
2022 தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுவது அரசின் கடமை எனவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.