இடிந்து விழுவது போல பயங்கர சத்தம் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்: 41 தொழிலாளர்களை மீட்க முடியாமல் தவிப்பு
- சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
- 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.
அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனா். முன்னதாக இடிபாடுகளில் துளையிட்டு பெரிய இரும்புக் குழாக்களைச் செலுத்தி, அவற்றின் வழியே தொழிலாளா்களை வெளியே மீட்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் துளையிடும் எந்திரம் சரிவர வேலை செய்யவில்லை.
இதையடுத்து வேறு எந்திரம் மூலம் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள பாறை சரிவை துளையிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப் படையின் சி-130 ஹொ்குலிஸ் விமானத்தின் மூலமாக விபத்துப் பகுதிக்கு 25 டன் அளவிலான அமெரிக்காவில் தயாரான அதி நவீன கனரக எந்திரம் கடந்த 15-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது.
இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 6 மீட்டர் தூரத்துக்கு பாறைகளில் துளையிடும் ஆற்றல் கொண்டது. இந்த நவீன எந்திரம் மூலம் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் சரிந்து விழுந்துள்ள பாறை கலந்த மண் பகுதி சுமார் 70 மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அந்த 70 மீட்டர் தூரத்தையும் நவீன எந்திரம் மூலம் துளையிட்டு சென்றால்தான் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும்.
தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே நவீன எந்திரம் மூலம் நேற்று காலை தொடங்கிய துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் 24 மீட்டர் தூரத்துக்கு அந்த எந்திரம் துளையிட்டு இருந்தது.
அதன் பிறகு பாறைகளில் மிகவும் வலுவான பகுதி இருந்ததால் துளையிடும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இன்னும் பாதிக்கு மேற்பட்ட தொலைவுக்கு துளையிட வேண்டியது உள்ளது.
இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில் உலோகப்பகுதி ஒன்று உள்ளது. இந்த உலோகப் பகுதியை வெட்டி அகற்றினால் தான் சுரங்கப் பாதையில் துளையிடும் பணியை தொடர முடியும். எனவே அந்த உலோக பகுதியை கட்டர் மூலம் வெட்டி அகற்றுவதற்காக பணிகள் நடந்தன.
நேற்று அந்த பணிகள் நடந்து கொண்டிருந்த போது சுரங்க பாதை இடிந்து விழுவதை போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் மீட்பு குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மீட்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நேற்று மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் இன்று மதியம் வரை தொடங்கவில்லை.
சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதைக்குள் இடிபாடுகளை நவீன எந்திரங்கள் மூலம் அகற்றும்போது கடுமையாக அதிர்வு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
இந்த அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை ஓட்டுமொத்தமாக இடிந்து விழுந்துவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதையின் மேல் இருந்து துளைபோட்டு 41 தொழிலாளர்களை மீட்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் அடுத்தடுத்து இடையூறு ஏற்படுவதால் 41 பேரையும் திட்டமிட்டப் படி மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி நடக்குமா? என்று கேள்விக்குறி நீடிக்கிறது.
சுமார் 150 மணி நேரம் கடந்துவிட்டதால் சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.