இந்தியா

காஷ்மீரில் என்கவுண்டர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2024-06-17 04:30 GMT   |   Update On 2024-06-17 04:30 GMT
  • பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
  • துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 4 இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ஜம்மு காஷ்மீர்துணை நிலை கவர்னர் மனோஜ்சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலை அமித்ஷா வழங்கினார்.

இந்நிலையில் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள அரகம் பகுதியில் நேற்றிரவு 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News