இந்தியா

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை வழங்கும் மசோதா இன்று நிறைவேற்றம்.. அமலாக சாத்தியம் உண்டா?

Published On 2024-09-03 08:13 IST   |   Update On 2024-09-03 08:13:00 IST
  • பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா இன்று மேற்கு வங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
  • குற்றவியல் சட்டமானது பொதுப் பட்டியலில் உள்ளதால் மாநில அரசுகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது

தூக்கு  தண்டனை 

மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா இன்று [செவ்வாய்க்கிழமை] மேற்கு வங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த இந்த மசோதாவுக்குக் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பேசிய முதல்வர் மம்தா, மாநிலத்துக்கு உரிமை இருந்திருந்தால், பெண் டாக்டர் கொலை நடந்த 7 நாட்களுக்குள்ளாகவே குற்றவாளிக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருப்போம் என்று தெரிவித்திருந்தார்.

மசோதா 

இந்நிலையில் நேற்று மேற்கு வங்க சட்டமன்றம் கூடிய நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றைய தினம் மசோதா மீது விவாதம் நடத்திய பின் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால் மாநில அரசுகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளதா என்று பல தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்துவருகின்றன.

கேள்வி 

இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் கூறியதாவது, குற்றவியல் சட்டமானது பொதுப் பட்டியலில் உள்ளதால் மாநில அரசுகளுக்கும் , மத்திய அரசுக்கும் ஒரே மாதிரியாக சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. ஆனால் மாநில அரசு, Article 254 படி தாங்கள் கொண்டுவந்த மசோதாவுக்கு ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் வாங்க வேண்டும். இதற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மத்திய அரசின் அறிவுரைப்படியே செயல்பாடுவார். மேலும் இதுகுறித்து பதிலளிக்க காலவரையறை என்பதும் கிடையாது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வனி தூபே, மேற்கு வங்க அரசுக்குச் சட்டத்திருத்தம் கொண்டுவர உரிமை உள்ளது. ஆனால் தற்போது இதை நிறைவேற்ற சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. Article 174 சட்டப்பிரிவு படி மாநிலத்தின் ஆளுநர் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட முடியும் என்ற விதி இருக்கும் நிலையில் தற்போது ஆளுநர் அல்லாமல் மாநில அரசே தன்னிச்சையாகச் சட்டமன்றத்தைக் கூட்டியுள்ளது. இது நிச்சயம் அவர்கள் கொண்டுவரும் மசோதா ஒப்புதல் பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்யம் சிங் ராஜ்புத், இந்த மசோதா குற்றவியல் சட்டத்தின் பாற்பட்டுள்ளதால் இதற்கு மத்திய அரசின் ஒப்புதலும் நிச்சயம் வேண்டும். நாட்டின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை இந்த மசோதா பூர்த்தி செய்கிறதா என்பதை ஆராய்ந்த பின்னரே மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளிக்கும். அப்படி மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தலும் ஜனாதிபதி ஒப்புதலும் கிடைத்த பின்னரே மசோதா சட்டமாக அமலாகும் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News