நிலத்தகராறில் சமரசம் செய்ய வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த பழங்குடியின மக்கள்
- நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
- இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி மண்டலம் ராய பாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்.
நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.
இதனை அறிந்த சத்து பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த பழங்குடியினரின் ஒரு தரப்பினர் கம்புகளால் போலீசாரை தாக்கினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவரை பைக்கில் இருந்து கீழே இழுத்து தள்ளினர். அவரை கம்பு மற்றும் கைகளால் புரட்டி எடுத்தனர். அங்கிருந்த போலீசாரால் இதை தடுக்க முடியவில்லை.
இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.
இதனால் போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட மேலும் சில போலீசார் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பழங்குடியினர் குறிப்பாக ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் குறிவைத்து அதிக அளவில் தாக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்ல. இன்ஸ்பெக்டரை குறி வைத்து தாக்கியதில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டரை பழங்குடியினர் விரட்டி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.