திருப்பதி கோவிலுக்கு நடைபாதையில் சென்ற புது மாப்பிள்ளை உயிரிழப்பு
- நவீன் திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்றார்.
- பரிசோதித்த டாக்டர்கள் நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் நவீன் (வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு நவீனுக்கு திருமணம் நடந்தது.
நேற்று காலை தனது குடும்பத்தினருடன் நவீன் திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்றார். 2350 வது படியில் ஏறும் போது நவீனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் நவீனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கண்ட அவரது புது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த புது மாப்பிள்ளை மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.