விமானத்தில் கொடிய விஷமுள்ள 70 பாம்புகள், இறந்த 6 குட்டி குரங்குகளை கடத்தி வந்த தமிழக வாலிபர்
- கொடிய விஷம் கொண்ட 20 ராஜநாக பாம்பு குட்டிகள் உள்பட 70-க்கும் மேற்பட்ட பாம்புகள் உயிரோடு இருந்தது.
- பயணி சூட்கேசில் விஷ பாம்புகள் கடத்தி வரப்பட்டதால் விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஹாங்காங்கில் இருந்து இரவு 10.30 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் டெர்மினல் 1 வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வாலிபர் சுட்கேசுடன் வந்தார். அவரை பார்த்ததும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொண்டு வந்த சூட்கேசை திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.
அப்போது அதில் கொடிய விஷம் கொண்ட 20 ராஜநாக பாம்பு குட்டிகள் உள்பட 70-க்கும் மேற்பட்ட பாம்புகள் உயிரோடு இருந்தது. மேலும் ஒவ்வொரு பாம்பையும் சிறிய சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த சூட்கேசில் இறந்த நிலையில் 6 குட்டி குரங்குகளும் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
எதற்காக கொடிய விஷமுள்ள இந்த பாம்புகள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது என்றும், இறந்த குரங்கு குட்டிகள் எதற்காக கொண்டு வரப்பட்டது என்றும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் உயிரோடு இருந்த பாம்புகள் அனைத்தும் ஹாங்காங்கிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த நிலையில் இருந்த 6 குட்டி குரங்குகள் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த வாலிபரிடம் சுங்க இலாகா துறையினர் மற்றும் கர்நாடக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணி சூட்கேசில் விஷ பாம்புகள் கடத்தி வரப்பட்டதால் விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.