வருகிற 15-ந்தேதி வரை சிக்கமகளூருவுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
- கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
- போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குடகு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சிவமொக்கா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் துங்கா மற்றும் பத்ரா அணைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. துங்கா மற்றும் பத்ரா ஆறுகள் சங்கமிக்கும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அதுபோல் கபிலா ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் மைசூரு-நஞ்சன்கூடு இடையேயான சாலைகள் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. இதனால் மைசூரு-நஞ்சன்கூடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் கபிலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பசவேஸ்வரா கோவில், லிங்கபட்டர குடி, காசி விஸ்வநாதசுவாமி கோவில், சாமுண்டீஸ்வரி கோவில், அய்யப்பசாமி கோவில், தத்தாத்ரேயாசாமி கோவில், பரசுராமா கோவில் உள்ளிட்ட கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா ஆனேகுந்தி அருகே சொல்லாப்புரா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவமொக்கா-சிருங்கேரி, மங்களூரு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் வருகிற 15-ந் தேதி வரை சிக்கமகளூரு மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று கலெக்டர் மீனா நாகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஹாசன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்த சிராடி மலைப்பாதை வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று மதியம் மீண்டும் சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓடும் நேத்ராவதி ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடுகிறது. நேத்ராவதி ஆறு, அரபிக்கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரம் பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் காவிரி ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் குஷால்நகர் சாய் படாவனே, குவெம்பு படாவனே, பசப்பா படாவனே, கந்ததகோட்டே உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இதனால் அங்குள்ள வீடுகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். துபாரே மற்றும் ஹாரங்கி யானைகள் முகாம்கள் நேற்று மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தொடர் கனமழையால் துங்கபத்ரா அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் துங்கபத்ரா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனால் ஆற்றின் கரையில் அமைந்துள்ள விஜயநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட புராதன நகரமான ஹம்பியில் 12 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மூழ்கி உள்ளன.