ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் ஓட்டல்கள் நடத்த அனுமதி
- திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
- தனியார் அறக்கட்டளை மூலம் ரூ 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஓட்டல்கள் நிறுவப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநில அரசு திருநங்கைகளை வறுமையில் இருந்து மீட்பதற்காகவும் பாகுபாடுகளில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது.
இதற்காக தேசிய விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர்கள் மூலம் திருநங்கைகளுக்கு 3 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா நேற்று நல்கொண்டாவில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரி கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி கலந்து கொண்டு பயிற்சி முடித்த திருநங்கைகள் ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல்கள் நடத்துவதற்கான ஆணையை வழங்கினார்.
மேலும் தன்னுடைய அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். தனியார் அறக்கட்டளை மூலம் ரூ 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஓட்டல்கள் நிறுவப்பட்டு உள்ளது.
சமையல் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது, நிர்வகிப்பது என முழுக்க திருநங்கைகள் மட்டுமே இந்த ஓட்டல்களை நடத்த உள்ளனர்.