உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் பலி- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
- ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தினால் உடல்கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
இந்நிலையில், தீ விபத்தினால் உடல்கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்தார்