இந்தியா

'சிறார் ஆபாச படங்கள் பார்ப்பது தவறல்ல': நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Published On 2024-03-11 11:38 GMT   |   Update On 2024-03-11 11:38 GMT
  • இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
  • ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்

குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ‛‛குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும், பதில் மனுதாரருக்கும் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்திற்கு பின்னர் மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Tags:    

Similar News