உத்தரகாண்ட் சுரங்க விபத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை- அதானி குழுமம் விளக்கம்
- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
- எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கித்தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 18-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், "இந்த உத்தரகாண்ட் சுரங்கப்பாதை எந்த தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டது? அதன் பங்குதாரர்கள் யார்? அதில் ஒன்று அதானி குழுமமா?" என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், உத்தரகாண்டில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்க கட்டுமான பணியில் ஈடுபடவில்லை என்றும் கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனத்தில் பங்கு இல்லை எனவும் அதானி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சரிவு விவகாரத்துடன் எங்களை இணைக்க சில கூறுகள் மோசமான முயற்சிகளை மேற்கொள்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முயற்சிகளையும் அதன் பின்னணியில் இருப்பவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதானி குழுமத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறோம். சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் எங்களிடம் எந்தப் பங்குகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இந்த நேரத்தில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.