இந்தியா

55 பயணிகளை ஏற்ற மறந்த விவகாரம்: விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது

Published On 2023-01-10 14:28 GMT   |   Update On 2023-01-10 14:28 GMT
  • சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், விமான நிறுவனத்திடம் அறிக்கை கேட்டு உள்ளது.
  • 55 பயணிகளுக்கு தலா ஒரு டிக்கெட்டை இலவசமாக வழங்குவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. ஆனால் விமானத்தில் ஏற வேண்டிய 55 பயணிகள் வருவதற்கு முன்பே அவர்களை ஏற்றாமல் விமானம் புறப்பட்டு சென்றது. பயணிகளை ஏற்றுவதற்கு மறந்துவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திடம் அறிக்கை கேட்டு உள்ளது.

இந்த நிலையில் பயணிகளை ஏற்றாமல் விமானம் சென்ற விவகாரம் தொடர்பாக 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தும் விமான நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

மேலும், பெங்களூரு-டெல்லி விமானத்தில் ஏற்றிச் செல்ல மறந்த 55 பயணிகளுக்கு தலா ஒரு டிக்கெட்டை இலவசமாக வழங்குவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இலவச டிக்கெட்டை அடுத்த 12 மாதத்திற்குள் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறி உள்ளது.

Tags:    

Similar News