இந்தியா

சீதாதேவிக்கு பிரமாண்ட கோவில் கட்டுவோம்-அமித்ஷா வாக்குறுதி

Published On 2024-05-17 05:18 GMT   |   Update On 2024-05-17 05:18 GMT
  • வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
  • பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

பாட்னா:

பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.

வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.

லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.

பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News