யானை மிதித்து பெண் பலி: கிராம மக்கள் 5 மணி நேரம் சாலை மறியல்
- உயிரிழந்த மீனாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்து உடனடியாக காசோலை வழங்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிக்கமகளூரு:
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் ஆல்தூர் அருகே உள்ள ஹெடதால் கிராமத்தை சேர்ந்தவர் மீனா (25). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 7 மணியளவில் ஹெடதால் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை மீனாவை தாக்கி மிதித்து கொன்றது. அவரை காப்பாற்ற சென்ற மற்றொரு பெண்ணையும் தாக்கி காயப்படுத்தியது.
மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் இது 2-வது சம்பவம் என்பதால் ஆத்திரமடைந்த ஹெடதால் கிராம மக்கள் அங்கு முகாமிட்டு யானைக் கூட்டத்தை மீண்டும் ஆல்தூர் வனப்பகுதிக்கு விரட்டக் கோரி பலேஹொன்னூர்-சிக்கமகளூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால் இதுகுறித்து தகவல் அறிந்த முடிகெரே எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
இதனிடையே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்-மந்திரி சித்தராமையா இந்த விவகாரத்தில் தலையிட்டு போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டார். மனித-விலங்கு மோதலைத் தடுக்க விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தார். மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்து உடனடியாக காசோலை வழங்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் உடனடி கூட்டம் நடத்தப்பட்டது. அதில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறுகையில், யானைகள் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கும், காடுகளை ஒட்டிய காபி எஸ்டேட்டுகளுக்கும் வழி தவறி வருகின்றன என்றார்.