தெலுங்கானா தேர்தலில் 10 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் போட்டி
- மேடக் நிஜாமாபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மட்டுமே ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
- அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கிய பதவிகளை வழங்காததால் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி வாக்கு பதிவு நடக்கிறது.
இங்கு மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 49 பேர் மட்டுமே பெண்கள்.
மொத்த போட்டியாளர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர். கம்மம் தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் கூட களத்தில் இல்லை. செவெல்லா, மேடக் நிஜாமாபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மட்டுமே ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதிகபட்சமாக செகந்திராபாத் மற்றும் வாரங்கல் தொகுதியில் தலா 8 பேர் போட்டியிடுகின்றனர்.
குறைந்த அளவில் பெண்கள் போட்டியிடுவது அந்த மாநிலத்தில் உள்ள பெண் சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண்ணை தலைவராக ஏற்க மக்கள் தயங்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கிய பதவிகளை வழங்காததால் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.
பெண்கள் போட்டியிட தயங்கினால் அவர்களுக்காக போராட யாரும் இருக்க மாட்டார்கள். இதனை மாநிலத்தில் உள்ள பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.