மதுப்பழக்கத்தை கைவிட கூறியதால் தொழிலாளி எரித்து கொலை- மனைவி, மகள் கவலைக்கிடம்?
- தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார்.
- நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வெமுலா பள்ளியை சேர்ந்தவர் நல்லப்ப ரெட்டி (வயது 47). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் தனியார் கிரானைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.
கிருஷ்ணவேணியின் தங்கை சுனிதாவுக்கும், நந்தியாலா மாவட்டம் ராவணூரை சேர்ந்த ரமேஷ் ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானார்.
இதனால் ரமேஷ் ரெட்டியையும், சுனிதாவையும், நல்லப்பரெட்டி தான் வேலை செய்யும் கிரானைட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்து, தங்களுடனே தங்க வைத்துக் கொண்டார்.
ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானது மட்டும் இன்றி, தான் சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்திலும் இழந்து வந்தார்.
தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார். மதுப்பழக்கத்தை கைவிடும் படி நல்லப்ப ரெட்டி, ரமேஷ் ரெட்டியிடம் வற்புறுத்தி வந்தார்.
இதனால் நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் வீட்டுக்கு வந்த ரமேஷ் ரெட்டி அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லப்ப ரெட்டி, அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகள் பூஜிதா ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் 3 பேரின் உடல்களும் தீப்பற்றி எரிய தொடங்கியது. 3 பேரும் அலறியபடி ஓடினர்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைக்காக கர்னூல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நல்லப்பரெட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் கிருஷ்ணவேணி, பூஜிதா ஆகியோர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.