ராஜ்பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
- போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்:
பெங்களூர் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதைதொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் உடனடியாக ராஜ்பவனுக்கு விரைந்து சென்று அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெங்களூரு விதான் சவுதா போலீஸ் நிலைய போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதில் அந்த தொலைபேசி எண் கோலார் மாவட்டம் கோலார் டவுன் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், விளையாட்டாக இதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.