கேரளாவில் 17 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
- கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- மாணவ-மாணவிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து மாணவ-மாணவிகளை குறி வைத்து ஒரு கும்பல் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்பின் தாமஸ் வர்க்கி தலைமையிலான போலீசார் ரெயில் நிலையப் பகுதியில் ரோந்து வந்த போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த 8 பிளாஸ்டிக் பைகளில் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் அஜிபர் ஷேக் (வயது 26) என்பதும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அங்கமாலியில் உள்ள கறி மசாலா தயாரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்த அஜிபர் ஷேக், அங்கிருந்து விலகி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து கேரளா கொண்டு வந்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளார். இவர் பள்ளி, கல்லூரி மற்றும் பஸ் நிலையம் பகுதிகளில் மாணவ-மாணவிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.