சிறப்புக் கட்டுரைகள்

கற்கண்டு சூரியன் கலைஞர் கருணாநிதி!

Published On 2023-06-03 05:21 GMT   |   Update On 2023-06-03 05:21 GMT
  • கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன.
  • என் மீதும், என் செயல்மீதும், வகிக்கும் பொறுப்பு மக்கள் சேவைக்கு எனும் என் உளப்பாங்கின் மீதும் கொண்ட நம்பிக்கையினால் இந்த வரலாற்றுச் சிறப்பைக் கருணாநிதி அன்று செய்தார்.

தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள் எனும் தத்துவச் சொற்றொடர் உண்மைதான் என்று என் உள்ளம் உணர்த்துகிறது. திராவிட வரலாற்றின் திசைகளை வென்ற சூரியன், காவியம் போற்றும் நாயகர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியை நினைக்கிற போதெல்லாம் என் நெஞ்சம் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்குகிறது.

தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாகவும் வாய்க்கப்பெற்று, வளர்ந்து, திராவிடப் புரட்சியின் சித்தாந்தமாக நிலைபெற்றிருக்கிற கருணாநிதியின் சாதனைகளையும், தமிழ்ச்சமூகத்திற்காய் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற சரித்திர சட்டங்களையும் ஏட்டில் உரைக்க முடியாது. அவரது இமயச் செயல்திட்டங்களை எண்ணிக்கையில் அளக்க முடியாது.

எழுத்தையும், பேச்சையும், திராவிடத் திசைகள் எங்கும் கந்தக வெடிமருந்தாய் காட்சிப்படுத்தியவர். அடிமையின் கயிற்றை அறுத்து, தமிழினத்தை ஒரு குடையின்கீழ் ஆட்சிப்படுத்தியவர். அவரால் நான் கற்ற, பெற்ற அனுபவப் புதையல்களும், பொதுவாழ்வின் லட்சியக் கனவுகளும் ஏராளம், ஏராளம். அவர் பல்கலைக்கழகமாய் இருந்தார். அதை தூரத்தில் நின்றே தரிசிக்கும் ஒரு ஏழைச் சிறுவனாய் நான் இருந்தேன். அவர் சூரிய விளக்காய் சுடர்விட்டு ஒளிர்ந்தார். அந்த வெளிச்சக் கதிரில் ஒரு விதைபோல் நான் கண்விழித்தேன். அவர் வானமாய் இருந்தார். ஒரு துண்டுமேகம் போல் நான் அவர் தோள்பற்றிக் கொண்டேன்.

கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன. அவர் ஒரு வேட்டிகட்டிய தாய்போல் எம்மை அரவணைத்தார். கண்டிப்பு நிறைந்த தந்தைபோல் நான் அரசியல் தொண்டாற்ற தடம் அமைத்தார். 1974-ம் ஆண்டு சைதாப்பேட்டை தியாகி அரங்கநாதன் சுரங்கப்பாதையை திறந்து வைப்பதற்காக கருணாநிதி வருகை தந்திருந்தார். 15 வயது சிறுவனாக இருந்த நான் என் அன்பு தந்தையுடன் அந்த நிகழ்வைக் கண்டுகளிக்கச் சென்றிருந்தேன். கட்டுக்கடங்காத கூட்டம் கடல்போல் ஆர்ப்பரித்தது.

தந்தையின் விரல்பிடித்து ஒரு ஓரமாய் நெரிசலில் நின்றபடி, கருணாநிதியின் திருமுகம் காண ஆவலாய் நின்றிருந்தேன். என் கண்கள் கருணாநிதியை கண்டது. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினேன். கருணாநிதி கையசைத்த காட்சி என் கருத்தில் பதிந்து மீண்டும் மீண்டும் கண்முன் தோன்றியது. அவரின் அந்த 'கையசைப்பு' கழகப் பணி செய்ய வா! தம்பி! என்று என்னை கட்டளை இட்டதாய் அந்த சிறுவயதிலேயே நான் எண்ணிக்கொண்டேன். அந்த மாமேதையின் புன்முறுவல் என்னை மக்கள் பணி செய்ய வா! என்று அழைத்ததாய் நான் உள்வாங்கிக்கொண்டேன்.

பிஞ்சு வயதில் பசுமரத்தாணிபோல் என் நெஞ்சில் பதிந்த இந்த நிகழ்வுதான் கருணாநிதியின்பால், இன்றைய தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின்பால் ஈர்க்கப்பட்டு அரசியல் தொண்டுக்கு என்னை அணியமாக்கியது என்றால் அதில் மிகையொன்றுமில்லை.

சமத்துவமும், சமூகநீதியும் இரு கண்களாய் ஏற்று, ஏழை எளியவர் ஏற்றம் பெற, இன்னலுற்ற தமிழ்நாடு மாற்றம் பெற, நொடிதோறும் உழைத்தவர் நம் கருணாநிதி. தம்பிகளைத் தாயாகத் தாங்கவும், தடந்தோள் கொண்ட கழக வீரர்களை மேன்மை பெற வைத்து அவர்தம் துயர்கள் நீங்கவும், நெடுங்காலம் பாடாற்றிய நெஞ்சுக்கு நீதியின் நிறைகுடம் கருணாநிதி.

கருணாநிதியின் விந்தைமிகு ஆற்றலுக்கு என்னளவில் நிகழ்ந்த மற்றொரு சம்பவமும் என் மனதில் நிழலாடுகிறது. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான ஓர் அற்புதக் காவியம் 'கண்ணம்மா' என்கிற திரைப்படம். அப்படத்தை இயக்கியவர் பாபாவிக்ரம். 'கண்ணம்மா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இளைஞனே இளைஞனே எழுந்து வா...' எனும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும் பாடல் காட்சியில் வெண்சீருடை அணிந்த 200 இளைஞர்களை அதில் பங்கேற்க செய்ய சென்ற நேரத்தில், நம்மையும் இறுதியாக வில்லன் கதாபாத்திரத்தை கைது செய்யும் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்டுக்கொண்டபடி நான் ஒப்புக்கொண்டேன்.

மறுநாள் பொங்கல் திருநாளில் கருணாநிதியை பார்த்து வாழ்த்து பெற அவர் இல்லம் சென்றபோது, நான் திரைப்படத்தில் நடித்த செய்தியறிந்த அவர் நான் பேசி நடித்த வசனங்களைச் சொல்லச் சொன்னார். நானும் வசனங்களை ஒப்பித்தேன். ஒப்பித்து முடித்தவுடன் 'இடையில் ஒரு வரியை விட்டுட்டியே' என்று சொல்லி விடுபட்ட வரியைச் சொன்னார். நான் ஆச்சரியத்தில் உரைந்து போனேன். 4, 5 மாதங்களுக்கு முன் தன்னால் எழுதி வழங்கப்பட்ட வசனத்தில் விட்டுப்போன வரியைக்கூட இன்னமும் நினைவில் வைத்து திருத்தும் அவரது நினைவாற்றல் கண்டு நெஞ்சம் வியந்து போனேன்.

அதுமட்டுமன்று அப்படத்தின் வசனத்தையும் நானே 'டப்பிங்' பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நான் ஒப்புக்கொண்டு விடைபெற்று என் வாகனத்தை நோக்கி நடந்து சென்றபோதே, இயக்குனர் பாபாவிக்ரம் என்னை அலைபேசியில் அழைத்து, 'வசனத்தை தாங்களே பேசி விட வேண்டும்' என கருணாநிதி சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்து, ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வரச்சொன்னார். அப்போது வியப்பில் திகைத்துப் போனேன். அவருக்கு கிடைக்கும் கணங்களிலும் செயலையும், எடுத்த காரியத்தையும் முடிக்கும் கருணாநிதியின் ஆற்றலை எண்ணி பெருமிதம் அடைந்தேன். அதுவே எனக்கான தாரக மந்திரமாகவும் இன்றுவரை ஏற்று முடிந்தவரை செயலாற்றி வருகிறேன். கருணாநிதியின் உறுதிக்கும், ஒப்பிலா ஆற்றலுக்கும், தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்புக்கும் இன்னொரு நிகழ்வையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருள் பொதிந்ததாய் இருக்கும் எனக் கருதுகிறேன்.

'நான் மேயராக பொறுப்பேற்று 2, 3 மாதம் முடிந்திருந்த நிலையில் 99 கவுன்சிலர்கள் புகாருக்கு உட்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் ஜெயலலிதா அன்று ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை மாநகராட்சி மன்றத்தில் முக்கிய தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றாமல் இருப்பது நல்லது என்று எடுத்துரைத்திருந்தனர்.

இது சம்பந்தமாக பா.ஜ.க.வின் அன்றைய மாநில தலைவர் இல.கணேசன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் வரதராஜன் அறிக்கை விடுத்திருந்தனர். அதைக் கண்ட கருணாநிதி உடனடியாக 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்ய அறிவுறுத்தினார். அதன்படி நான் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்துவிட்டு, அன்று மாலை கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது எனக்கு ஆறுதல் சொன்ன அவர், மீண்டும் அப்பொறுப்புக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை தாய் உள்ளத்தோடு கூறினார். அப்போது அங்கிருந்த வக்கீல் 'இல்லை, இல்லை அது சாத்தியமில்லை அய்யா. ஏற்கெனவே தளபதி மு.க.ஸ்டாலினை மனதில் வைத்து இரு சட்ட மசோதாக்களை ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார். அதில் ஒன்று, ஒருவர் 2 முறை பதவி வகிக்க முடியாது என்றும், இன்னொன்று இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்கின்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

உடனடியாக குறுக்கிட்ட கருணாநிதி, அதனால் என்ன?, நாமும் சட்டத்தை திருத்தலாம் என்றுக்கூறி உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து நான் இரண்டாவது முறை மேயர் பொறுப்புக்கு நிற்பதற்கான வாய்ப்பை அளித்து, தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றி பெற்றபின், எம்மை இரண்டாம் முறையாய் 'மேயர் பொறுப்பில்' நியமித்து அழகுப் பார்த்தார்.

என் மீதும், என் செயல்மீதும், வகிக்கும் பொறுப்பு மக்கள் சேவைக்கு எனும் என் உளப்பாங்கின் மீதும் கொண்ட நம்பிக்கையினால் இந்த வரலாற்றுச் சிறப்பைக் கருணாநிதி அன்று செய்தார். எந்த வசதி வாய்ப்பும், அரசியல் பின்புலமும் இல்லாத வறுமைப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகக் கட்டமைப்பைச் சார்ந்த எனக்காக அவர் செய்த இந்த சரித்திர நிகழ்வு என் வாழ்நாள் எல்லாம் நினைத்துப் பெருமை கொள்ளத்தக்கதாகும்.

இவை மட்டுமன்று கருணாநிதியோடும், இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடும் நான் கற்றறிந்த சேதிகளும், நிகழ்வுகளும் ஆயிரம், ஆயிரம் உண்டு. அவை எல்லாம் இன்னும் எம்மை களப்பணியாற்ற, மக்கள் பணி செய்ய முடுக்கி விடும் கருவிகளாய் எண்ணி செயல்படுவேன்.

14 வயதில் தந்தை பெரியாரின் கோட்பாட்டுக் கோட்டைக்குள் அடியெடுத்து வைத்து, திருவாரூர் தெருக்களில் கொடியேந்தி கொள்கைக் களமாடிய ஓய்வறியாச் சூரியன் கருணாநிதிக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு சாதனைகளை போற்றும் வண்ணம் அமைந்திருக்கிறது.

5 முறை நாடாண்ட அருந்தமிழ்ச் சூரியன் கலைஞர் கருணாநிதியின் அளப்பரிய செயல்களை, அரசியல் மேன்மையை, ஆளுமையை, எழுத்தாற்றலை, இதிகாசம் போற்றும் சாதனைகளை, வரலாற்று முன்னெடுப்புகளை நினைவுகூரும் இந்த ஆண்டில், அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதிலும், அவர் அமைத்துத் தந்த 'திராவிட இயல்' பாதையில் பார் போற்றப் பயணிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்திட்டங்களை நிறைவேற்றவும் எப்போதும் உறுதுணையாகவும், சிறு துரும்பாகவும் இருப்பேன் என இந்த நூற்றாண்டு தொடக்க நாளில் சூளுரைக்கிறேன். வாழ்க கலைஞர் கருணாநிதி புகழ்! வெல்க சமூகநீதி!! ஓங்குக என்றென்றும் திராவிட மாடல் ஆட்சி!!!

- மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

Tags:    

Similar News