சர்க்கரை, புற்றுநோயை குணப்படுத்தும் நித்திய கல்யாணி
- நித்திய கல்யாணி செடி கார்பன்-டை-ஆக்சைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது.
- நித்திய கல்யாணி பூவில் சிறந்த ரத்த சர்க்கரை குறைவு பண்பு இருப்பதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நித்திய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதனை நயனதாரா, பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி, சுடுகாட்டுப்பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
நித்திய கல்யாணியை ஆங்கிலத்தில் Periwinkle Flower என அழைப்பார்கள்.
இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடு, மாடுகள் இதனை உட்கொள்வதில்லை.
இதை பெரும்பாலும் அழகுக்காக தோட்ட செடியாக மட்டுமே பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் உள்ளது.
நித்திய கல்யாணி செடி கார்பன்-டை-ஆக்சைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது. ஆகவே இதனை தாராளமாக நாம் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.
வெறும் இரண்டு சென்டிமீட்டர் அளவு இருக்கும் இந்த மலர்கள் புற்றுநோய்க்கு தீர்வைக் கொடுக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
குறிப்பாக இதற்கு சித்த மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் உள்ளது. இதன் பயன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
புற்றுநோயைத் தடுக்கிறது:
இதன் இலைகள் மற்றும் பூக்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் இது புற்றுநோய் நிலைகளுக்கு சக்தி வாய்ந்தவையாக உள்ளது. புற்றுநோய் கட்டியின் அளவை குறைக்க உதவுகிறது.
இதில் உள்ள வின்கிரிஸ்டைன் மற்றும் வின்பிளாஸ்டைன் லுகேமியாவுக்கு பயனுள்ளதாக உள்ளது.
இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும்.
நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம். இது நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது.
இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
வெள்ளை நிறத்தில் இருக்கும் நித்திய கல்யாணி பூ மற்றும் இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த இலைகளின் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 மில்லி அளவு எடுத்து வரலாம்.
நீரிழிவு கட்டுப்படும்:
இது சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
நீரிழிவு நோய் கப தோஷங்களின் அதிகரிப்பால் உண்டாக கூடியது.
இதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேர்த்து வைக்கவும்.
1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை எடுத்து கொள்ளவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து எடுக்கலாம்.
நித்திய கல்யாணி பூவில் சிறந்த ரத்த சர்க்கரை குறைவு பண்பு இருப்பதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
இந்த பூவின் சாறு எடுப்பதன் முலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியானது தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோசாக உடைப்பதை தடுக்கிறது.
நித்திய கல்யாணியின் 5-6 பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.
நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.
ரத்த கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது:
நித்திய கல்யாணி ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, டிரைகிளிசரைடுகள், எல்.டி.எல்., வி.எல்.டி.எல். போன்ற அளவுகளைக் குறைக்கிறது. இது நித்திய கல்யாணி இலைச் சாற்றில் உள்ள பிளாவனாய்டு, வின்போசெடின் ஏற்படுத்தும் ஆர்திரோஸ்க்லெரோடிக் எதிர்ப்பு நடவடிக்கையாகும்.
சுவாச கோளாறுகளை தீர்க்கிறது:
இது சுவாச குழாயில் இருந்து சளி படிவுகளை அகற்ற உதவுகிறது. அனைத்து வித கபத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த மலரில் இருக்கும் பெரும்பாலான உட்பொருள்கள் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி, சி.ஓ.பி.டி. இருமல் மற்றும் சளி அறிகுறிகள் போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான இறுதி தீர்வை அளிக்கிறது.
சரும ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கிறது:
சருமத்தை மேம்படுத்தும் பண்புகள் இதில் உள்ளது. சூரியக்கதிர்களால் ஏற்படும் ஆக்சிஜனேற்ற பிரீ ரேடிக்கல் சேதங்களுக்கு சிகிச்சையளிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் சருமத்தில் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள், புள்ளிகள், கருவளையங்கள் போன்ற முதுமையின் பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. சரும பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. நித்திய கல்யாணி இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் எடுத்து மசித்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து மென்மையாக குழைத்து எடுக்கவும்.
இதை முகத்தில் தடவி உலரவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
முகப்பரு மற்றும் தோல் பிரச்சனை இருப்பவர்கள் மாற்றுநாளில் இதை செய்து வந்தால் தீவிரமாகாமல் தடுப்பதுடன் நோய்த்தொற்றை எதிர்த்து போராடவும் உதவும்.
காயங்களை குணப்படுத்தும்:
இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் நிறைந்தவை.
இது காயத்தை திறம்பட குணப்படுத்துகிறது. தோல் தொற்றுகளை தடுக்கிறது. அரிப்பு மற்றும் எரியும் உணர்வை தடுக்க செய்வதோடு தொற்று பரவாமலும் தடுக்கிறது. காயம் ஆற்றலை எளிதாக்குகிறது.
மஞ்சள் மற்றும் நித்திய கல்யாணி இலைகளை பேஸ்ட் செய்து காயங்கள் மீது 2-3 முறை தடவினால் வேகமாக குணமாகும்.
நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.
இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீழ் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
மாதவிடாயை ஒழுங்குப்படுத்துகிறது:
பெண்கள் பெரும்பாலும் மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நித்திய கல்யாணி பூக்கள் இதை சரி செய்வதில் முதலிடத்தில் உள்ளது.
மாதவிடாய் வயிறு வலி, ரத்தப்போக்கு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் சூதக வலியையும்
குறைக்க செய்கிறது.
காய்ச்சல் குறைய:
காய்ச்சல் மற்றும் குளிர் சுரம் போன்றவற்றை உடனடியாக சரிசெய்யும் ஆற்றல் நித்திய கல்யாணி மலருக்கு உண்டு.
நித்திய கல்யாணி இலைகளை அதன் தண்டோடு சேர்த்து கழுவி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு பின் காலை, மாலை என இரண்டு வேளை குடித்து வர, காய்ச்சல் குறையும்.
மூக்கில் வரும் ரத்தப்போக்கு மற்றும் வாய்ப்புண்களுக்கு:
இந்த இலைகளை மாதுளை மொட்டுக்களுடன் சேர்த்து அரைத்து சாறு எடுத்து மூக்கில் செலுத்தப்படுகிறது.
மூக்கில் ரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க, ஈறுகளில் ஏற்படும் ரத்தப்போக்குக்கும் இதை பயன்படுத்தலாம்.
அறிவாற்றலை மேம்படுத்துகிறது:
இந்த தாவரத்தில் உள்ள கூறுகள் மூளை செல்களின் ஆரம்ப வயதை குறைப்பதன் மூலம் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது.
மூளை திசுக்களில் சரியான ரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது. மூளையின் பதற்றத்தை நீக்குவதால் இது மூளையின் பணியை மேம்படுத்துகிறது.
வயிற்றுப்போக்கு:
நித்திய கல்யாணி இலைச் சாறு வயிற்றுப்போக்கு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
இரைப்பை குடல் உந்துவிசையைத் தடுக்கிறது. எனவே, இது வயிற்றுப்போக்கு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நித்திய கல்யாணியின் முரண்பாடுகள்:
அதிக அளவுகள் பயன்படுத்தினால் மிகக் குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதனை கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அருமருந்தான இதனை சிகிச்சைக்காக பயன்படுத்துவதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தவும்.