- வாழ்வின் உண்மையை அறிந்தவர்களின் வாய்மொழியைக் கேட்டு வாழ்க்கையை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும்.
- செவிக்குப் பெருமை நல்லவற்றை கேட்பதே ஆகும்
அதிகாரம்: கேள்வி
இந்த அதிகாரத்தில்,
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
என்ற குறளில் தொடங்கி
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
கேள்வி எனும் இந்த அதிகாரம் செவியினால் கேட்கக்கூடிய செய்திகளைப் பற்றி கூறுவதாகும். ஐம்புலன்கள், எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. பார்த்தல் என்பது கண். கேட்டல் என்பது காது. சுவைத்தல் என்பது வாய், மூக்கு என்பது வாசனையை அறிதல். ஸ்பரிசித்தல் என்பது மெய். ஆடு, மாடு போன்ற விலங்கினங்களுக்கும் கேட்டல் என்பது உண்டு.
ஆனால் மனிதன் மட்டும் இனம் பிரித்து கேட்கின்றான். கவிகளைக் கேட்கலாம். பாடல்களைக் கேட்கலாம். இசையைக் கேட்கலாம். இப்படியாக மனிதன் மனதை லயப்படுத்தும் எல்லாவற்றையும் கேட்டு ரசிக்கலாம்.
திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களில், ஞானிகள் கூறுகின்ற கருத்துக்களைக் கேட்டால் அது பிறவிப்பிணிக்கு மருந்தாக அமையும். சான்றோர்களின் உபதேசம் என்பது இனிப் பிறவாமல் இருப்பதற்காகப் பெறக்கூடியது. சொர்க்க நிலை அடைவதற்காக கொடுக்கப்படுவது. ஞானிகளின் உபதேசம் இனி பிறவாமல் இருப்பதற்கான மார்க்கத்தை அறியக்கூடியதாக இருக்கும்.
சுட்டிக்காட்ட முடியாத பூரண நிலையை சொல்லுவதே "சும்மா இரு" என்பது ஆகும். அத்தகைய ஓர் உயர்ந்த உபதேசத்தை குருநாதர் சுட்டிக்காட்ட வேண்டும். 'சும்மாஇரு' ரகசியத்தை ஆசான் சொல்ல வேண்டும். அதனை தலைவன் உள்ளூர உணர்த்த வேண்டும்.
அதனைப் படித்து தெரிந்து கொள்வதைவிட கேட்டுத் தெரிந்து கொள்வது உயர்ந்தது. சான்றோர்களிடம் சென்று உண்மையை அறிந்துகொள்கின்ற வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே உண்டு. ஆறாவது அறிவான சிறப்பறிவைப் பெற்றவன் மனிதன். ஒவ்வொரு புலன்களைப் பற்றி அறிகின்ற அறிவு ஆறாவது அறிவு. அவை மற்ற ஜீவராசிகளுக்கு கிடையாது.
கல்வி என்பது கணக்கிலடங்காது. எனவே ஞானிகள் சொல்வதை கேட்க வேண்டும். அதனையே ஆசான் திருவள்ளுவர் கேள்விச் செல்வம் உயர்ந்தது எனக்கூறுகின்றார். சான்றோர் சொல்படி கேட்டு அதன்படி நடந்தாலே பிறவியை அறுக்கலாம். முன்செய்த புண்ணியம் இருந்தால் சிறுவயதிலேயே குருகுல வாசம் கிடைக்கும்.
குருகுல வாசத்தில் இருந்தவர்கள் சிறுவயதிலிருந்து உலகியல் வாழ்க்கையில் எத்தகைய தவறும் செய்யாமல் சமுதாயத்திற்கு நல்லது மட்டுமே செய்திருப்பார்கள். இதற்கு குருநாதரிடம் கேட்ட கேள்வி ஞானமே காரணமாகும்.
அத்தகையவர்கள் பிறவி ஞானியாக இருப்பார்கள். அவர்கள் சான்றோர்கள் அல்லது குருநாதர்களின் அருகில் இருப்பதால் உயிர்க்கொலை செய்யாதிருத்தல், பொய் பேசாதிருத்தல், அழியக்கூடிய பொருள்கள் மீது பற்று வைக்காமலிருத்தல் போன்ற குணப்பண்புகளைப் பெற்று அறத்தை நிலைநாட்டுபவர்களாக இருப்பார்கள். இதுபோன்ற குணப்பண்புகளைத்தான் சான்றோர்கள் வலியுறுத்துவார்கள்.
மேலும் நடந்து போகும்போது நமது ஆணவத் தன்மை வெளிப்படும். அப்போது பிறரின் எண்ண அலைகள் நம்மை பாதிக்கும். கொடுமையான பேச்சுக்களை பேசக்கூடாது. ஏளனமாக பிறரைப் பார்த்து சிரிக்கக் கூடாது. அவமானப்படுத்தி சிரித்தல் கூடாது. தூய்மையான இடங்களில் பொதுமக்கள் நடக்கும் இடங்களில் எச்சில் துப்பியோ மற்ற காரணத்தினாலோ அசுத்தப்படுத்துதல் கூடாது.
கொடூரமான பார்வை பார்த்தல் கூடாது. இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் பிறருக்குத் துன்பம் கொடுக்கக் கூடிய செயல்களையும் அருவெறுக்கத்தக்க செயல்களையும் செய்தல் கூடாது. இதனை சான்றோர்கள் நமக்கு உணர்த்துவார்கள்.
ஐம்புலன்களில் உயர்ந்த செல்வமாக செவிச்செல்வம் கூறப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கல்வி என்பது எல்லோரும் கற்கக்கூடிய அளவில் பொதுவானதாக இல்லை. ஆனால் அந்த காலக்கட்டத்திலும் பலநூறு ஞானிகள் உருவாகினார்கள். அவர்கள் தங்கள் குருநாதரின் செவி உபதேசம் பெற்றே உருவானார்கள்.
கல்வி இல்லாதவர்களும் கடவுள் தன்மை அடையலாம் என்பதை இவ்வதிகாரத்தின் மூலம் திருவள்ளுவர் நமக்கு உணர்த்துகின்றார். கற்றுத் தெரிந்தவர்கள் கூறுவதை நாம் கேட்டுத் தெரிந்து கொண்டாலே ஞானம் பெற வாய்ப்புண்டு.
சிலருக்கு பல விஷயங்களை கேட்டு, அதனை தக்க வைக்கின்ற சக்தியும், அதன்படி நடக்கின்ற தன்மையும் இல்லாது போய்விடும். நல்ல செய்திகளை சேகரித்து வைத்துக் கொள்வதற்கு முன்செய்த புண்ணிய பலமே துணையாக இருக்கும். எவ்வளவுதான் உயர்ந்த விஷயங்களை கற்றிருந்தாலும் நல்வினை இருந்தால்தான் புரியும். சான்றோர்கள் அத்தகைய உயர்ந்தநிலையை கூறும் மேலான கவிகளுக்கு விளக்கம் சொல்வார்கள். அதனைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
சான்றோர்கள் நம்மீது கருணை கொண்டு, ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும் அரிய நூல்களைப் பற்றி கூறுகின்ற கருத்துக்கள் நமக்கு ஆன்ம லாபத்தை உண்டாக்கும். அதை கேட்பதே செவிக்கு மிகப்பெரிய சிறப்பாகும்.
அதிகமாக சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அப்போது மனதில் எதுவும் பதியாது. எனவே குறைவாக சாப்பிட வேண்டும். ஆக இப்படிப்பட்ட முறையை பின்பற்றி சான்றோர்கள் கூறும் கருத்துக்களை தொடர்ந்து கேட்க வேண்டும். அப்படி கேட்டு அதன்படி நடந்தால் மரணமில்லா மார்க்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
மனித வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவும் இருக்கும். அத்தகைய காலக்கட்டத்தில் சான்றோர் சொல் நம்மை துன்பத்திலிருந்து மீட்டு நாம் உயர்ந்து நிற்க ஊன்றுகோலாக உதவும்.
வாழ்க்கை நிலையில்லாதது. வாழ்வின் உண்மையை அறிந்தவர்களின் வாய்மொழியைக் கேட்டு வாழ்க்கையை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும்.
பெருந்தன்மையுடைய அறவோரின் வாய்மொழி மேலான மந்திரங்களாக அமையும். அத்தகைய மேலான ஞானிகள் அகத்தைப் பற்றியும் புறத்தைப் பற்றியும் கூறுவார்கள். அவர்களின் வாய்மொழி நிறைமொழி. அந்த நிறைமொழி நம்மை இறை நிலைக்கு உயர்த்தும். இவற்றை செவிகளில் கேட்டு அதன்படி நடந்தால் மரணமிலாப் பெருவாழ்வு எளிது. மரணத்தை வென்றவர்களின் வாய்மொழியே நமக்கு வாழ்வின் நிலையாமையை உணர்த்தி நம்மை கரை சேர்க்கும். குறைந்த நேரத்தில் நல்ல செய்தியை கேட்டிருந்தால் அது பெரிய நன்மையை தரும்.
ஞானிகள் காம விகாரத்தை வென்றவர்கள், சாதி மதம் அற்றவர்கள், பொன்னுடம்பு பெற்றவர்கள்.
ஞானிகளின் திருவடியைப் பற்றினால் அதுவே பிறவிப்பிணிக்கு மருந்து. அதுவே உயர்ந்த மந்திரம். ஓம் அகத்தீசாய நம! ஓம் திருவள்ளுவ தேவாய நம! என்ற மந்திரத்தை கேட்பதற்கும் அதை திருப்பி மனம் உருகி ஜெபம் செய்வதற்கும் ஏட்டுக் கல்வி தேவையில்லை. இதை சொல்லி வந்தால் ஞானக்கல்வி கைகூடும்! மரணமிலா பெருவாழ்வு கைகூடும்!!
செவிக்குப் பெருமை நல்லவற்றை கேட்பதே ஆகும். நல்லக்கருத்துக்களை செவியால் கேட்டுத் தெரிந்துக்கொள்வது ஆன்மாவிற்கு பயனுள்ளதாகும். செம்பொருள் கண்டவர்களின் சொற்கள் எடுத்துக் கொண்ட பிறவிக்கு பயனுள்ளதாக அமையும். கல்வியறிவு இல்லாவிட்டாலும் கேள்வியறிவு நல்ல பலனைத் தரும்.