சிறப்புக் கட்டுரைகள்

முதல் தெய்வம் முருகன்!

Published On 2024-11-12 09:09 GMT   |   Update On 2024-11-12 09:09 GMT
  • பழந்தமிழர்கள் முதலில் இயற்கையை வழிபட்டனர்.
  • சங்ககாலத்துக்கு முந்தைய நூலான தொல்காப்பியத்திலும் தமிழ்க் கடவுள் முருகன் பற்றி கூறப்பட்டுள்ளது.

உலகம் தோன்றி 100 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் வரையறுத்து உள்ளனர். சூரியனில் இருந்து பிரிந்து பூமி உருவானபோது தண்ணீரும், நில பரப்புகளும் தோன்றின.

அதன் பிறகு உயிரினங்கள் தோன்றின. அந்த சமயத்தில் உலக நாடுகளின் அமைப்பு தற்போது இருப்பது போல அமைந்திருக்கவில்லை. ஐரோப்பா கண்டத்தின் பெரும் பகுதி, ரஷியா, சீனா பெரும்பகுதி போன்றவை அப்போது இல்லை.

ஆனால் தெற்கு பகுதியில் தென்அமெரிக்காவில் தொடங்கி ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா வரை நிலப்பரப்பு இருந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் அரபிக்கடலோ, வங்காள விரிகுடா கடலோ இல்லை.

அந்த நிலப்பரப்பு குமரிகண்டம் என்று அழைக்கப்பட்டது. பழந்தமிழர்கள் மிக மிக சிறப்பாக அங்கு வாழ்ந்தனர் என்று நம்பப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி எனப்படும் கடல்கோள் ஏற்பட்டபோது குமரிகண்டத்தின் தென்பகுதி முழுமையாக அழிந்தது.

அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல், இந்திய பெருங்கடல்கள் தோன்றின. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அந்த காலத்தைத்தான் முதல் சங்க காலம் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.

முதல் சுனாமியில் தப்பியவர்கள் வடக்கே வந்து புதியதாக குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்தனர். தங்களது தலைநகராக அவர்கள் கபாடபுரத்தை அமைத்து இருந்தனர். சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி அந்த நிலப்பரப்புகளையும் கடலுக்குள் விழுங்கியது. அந்த கால கட்டத்தை இடைச்சங்கம் என்று சொல்கிறார்கள்.

அதன் பிறகு மூன்றாம் சங்க காலம் என்று கருதப்படும் காலம் தோன்றியது. முதல் 2 சுனாமியால் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்த 49 நாடுகள் அழிந்தன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நாடுகளு டன் பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் மண்மூடி புதைந்து போயின.

தமிழர்களுக்கு மேலும் சோதனை ஏற்படுத் தும் வகையில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமி காரணமாகத்தான் வட பகுதி உயர்ந்து இமயமலையாக மாறி தென் பகுதி தாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அதன் பிறகுதான் தற்போதைய தமிழினம் தனது பூர்வீக வேர் காரணமாக சிறப்பு அடைய தொடங்கியது. சங்க இலக்கியங்கள் தோன்றின. அதில் தமிழர்களின் வாழ்வியல் நடைமுறைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்படப்பட்டுள்ளன.

பழந்தமிழர்கள் வாழ்ந்த குமரி கண்டத்தில் இருந்து தற்போதைய தமிழகம் வரை உள்ள நிலப்பரப்பையும் வாழ்க்கை முறைகளையும் ஒரு கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து பார்த்தால் பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாக தெய்வ வழிபாட்டில் சிறப்பாக இருந்தது தெரிகிறது.

பழந்தமிழர்கள் முதலில் இயற்கையை வழிபட்டனர். பின்னர் அதன் அடிப்படையில் தெய்வங்களை உருவகப்படுத்தினார்கள். அதில் சிவன், திருமால், சக்தி, முருகன் ஆகிய 4 தெய்வங்களும் பிரதான இடம் பெற்று இருந்தன.

இவர்களில் முருகனை மட்டுமே பழந்தமிழர்கள் தமிழ்க் கடவுள் என்று கொண்டாடினார்கள். முருகன் மூலமாகத்தான் தமிழ் மொழி தோன்றி உலகம் முழுக்க பரவி செழித்தது என்ற நம்பிக்கை ஆதி தமிழர்களிடம் இருந்தது.

தமிழ்க் கடவுள் முருகன் என்று தமிழ்நாட்டில் சொல்வது போல வேறு எந்த மாநிலத்திலும் மக்கள் எந்த தெய்வ வழிபாட்டையும் குறிப்பிடவில்லை. இதன் மூலம் முருகன் தனித்தமிழ்க் கடவுளாக தமிழர்களுக்கு மட்டுமே உரியத் தெய்வமாக திகழ்ந்தான் என்பது தெரிகிறது. இதை சுட்டிக்காட்டும் சான்றுகள் சங்க இலக்கியங்களில் ஏராளமாக உள்ளன.

தமிழக வரலாற்று அறிஞர்களில் ஒருவரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும் இைத உறுதிப்படுத்தி உள்ளார். முருக வழிபாடு என்பது வடமாநிலங்களில் இருந்தோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியில் இருந்தோ தமிழ்நாட்டுக்கு வந்த வழிபாடு அல்ல. இது முழுக்க... முழுக்க... தமிழர்கள் உருவாக்கிய வழிபாடு.

இதன் காரணமாகத்தான் இன்றளவும் தமிழகத்தில் முருகர் வழிபாடு தமிழர்களின் உணர்வோடு இரண்டற கலந்து உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக முருக வழிபாட்டை வடநாட்டில் இருந்து வந்த வழிபாடு என்று சிலர் கூறினார்கள்.

வட மாநிலங்களில் வணங்கப்படும் "ஸ்கந்தன்"தான் தமிழ்நாட்டில் முருகர் என்ற அம்சமாக வழிப்படப்படுவதாக சொல்லப்பட்டது. தமிழ் கடவுளான முருகருக்கும், வடமாநிலங்களில் வழிபடப்படும் ஸ்கந்தனுக்கும் ஒரே மாதிரியான வரலாறு இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் சொன்னார்கள்.

ஆனால் வட மாநிலங்களில் வழிபடப்படும் ஸ்கந்தன் ருத்ரனின் 9-வது அம்சமாக சொல்லப்படுகிறார். அவர் போர்க் கடவுளே அல்ல. ஆனால் நம் முருகன் படை வீடுகள் அமைத்து, போர் நடத்தி சூரனை சம்ஹாரம் செய்தவர். ஸ்கந்தனுக்கும், முருகனுக்கும் வேறுபாடு உள்ளது என்பதற்கு இது ஒன்றே அடிப்படையான, ஆதாரப்பூர்வமான உதாரணமாகும்.

 

தமிழ்க் கடவுளான முருகனின் பெயர் முருகு என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். இந்த சொல் சங்க கால இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றினை போன்ற நூல்களில் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்ககாலத்துக்கு முந்தைய நூலான தொல்காப்பியத்திலும் தமிழ்க் கடவுள் முருகன் பற்றி கூறப்பட்டுள்ளது. கம்ப ராமாயணத்திலும் முருகர் இடம் பெற்றுள்ளார். சங்க இலக்கியங்களில் முருகன் அளவுக்கு சிவன் பற்றியோ, திருமால் பற்றியோ, சக்தி பற்றியோ குறிப்பிடப்படவில்லை. இவையெல்லாம் ஆதியில் முதலில் முருகன் வழிபாடே பிரதானமாக இருந்தது என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

ஆனால் வரலாற்றில் இடையில் சுமார் 1000 ஆண்டுகள் முருக வழிபாட்டில் தேக்க நிலை ஏற்பட்டு விட்டது. குறிப்பாக 6-ம் நூற்றாண்டில் இருந்து 10-ம் நூற்றாண்டு வரை சைவமும், வைணவமும் போட்டிப் போட்டு வளர்ந்த காரணத்தால் முருக வழிபாட்டின் தனித்தன்மை சிறப்பு மங்கிப்போனது.

மன்னர்கள் தங்களது சமய கோட்பாடுகள் காரணமாக முருகன் வழிபாட்டை மறந்து போனார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இதை பயன்படுத்திதான் முருக வழிப்பாட்டை வடநாட்டில் இருந்து வந்த வழிபாடு என்றும் பேச தொடங்கினார்கள். கடந்த நூற்றாண்டில்தான் இதற்கு விடை கிடைக்க தொடங்கின. குறிப்பாக 1920களில் லாகூருக்கும், அமிர்தசரசுக்கும் இடையே ரெயில் பாதை அமைத்தப் போது மணல் குன்றுகளாக இருந்த இடங்களில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் பொருட்கள் கிடைத்தன. மேலும் ஆய்வு செய்தபோது ஒரு நகரமே அங்கு புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தான் சிந்து சமவெளி நாகரீகம் என்கிறார்கள். அங்கு ஆரியர்கள் வாழ்ந்தனர் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மும்பை கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றிய ஈராஸ் என்பவர் சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் மற்றும் பொருட்களை சுமார் ஓராண்டு ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டார்.

சிந்து சமவெளி நாகரீகம் என்பது தமிழர் நாகரீகம் என்று அறிவித்தார். அதோடு சிந்துவெளி மக்களும் தமிழர்கள்தான் என்ற தகவலையும் அதிரடியாக தெரிவித்தார். அதன் பிறகுதான் ஆய்வாளர்கள் பலரும் விழித்துக் கொண்டு ஈராஸ் நடத்திய ஆய்வை மீண்டும் ஆய்வு செய்து தமிழர் நாகரீகத்தை உறுதிப்படுத்தினார்கள்.

அது மட்டுமின்றி முருக வழிபாட்டை உறுதிப்படுத்தும் பல பொருட்கள் அங்கு கிடைத்ததையும் வெளியில் கொண்டு வந்தனர். இது பழந்தமிழர்கள் முருகனை தங்களின் முதல் தெய்வமாக வணங்கினார்கள் என்பதை சொல்லாமல் சொன்னது.

அதிர்ஷ்டவசமாக இந்த கண்டுபிடிப்புகள் வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழத்திலும் சில மாறுதல்கள் ஏற்படத் தொடங்கி இருந்தன. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தை இயற்றி தமிழக மக்களுக்கு வழங்கினார். இது முருக வழிபாடு பற்றி தமிழக மக்களிடம் மீண்டும் புத்துணர்ச்சியை உருவாக்கியது.

15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் தமிழகம் முழுவதும் சென்று முருகன் மீது பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் முருகனை மீண்டும் ஆழமாக பதிய செய்தார். கடை தமிழ் சங்கத்துக்கு தலைவராக வீற்றிருந்து புகழ் பெற்றவரும் முருகனின் ஆலயங்களை ஆறுபடை வீடுகளாக வகைப்படுத்தி "திருமுரு காற்றுப்படை" நூலை தந்த நக்கீரரை குருவாக ஏற்று அவர் முருகன் புகழ் பாடினார்.

இதன் காரணமாக 18-ம் நூற்றாண்டில் வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் முருகனை பற்றிய நூல்கள் அலைஅலையாக வெளியில் வந்தன. 19-ம் நூற்றாண்டில் தேவராய சுவாமிகளால் கந்தசஷ்டி கவசம் உருவானது.

இதன் காரணமாக கடந்த நூற்றாண்டில் முருகர் வழிபாடு மேலும் ஓங்கியது. தமிழர்களின் முதல் கடவுள் முருகர்தான் என்பதை இன்று அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

நாடு முழுவதும் நடந்து வரும் அகழாய்வுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அது மட்டுமல்ல சங்க காலத்தில் எழுதப்பட்ட அத்தனை நூல்களும் முருகனை மிகத்தெளிவாக குறிப்பிட்டு உள்ளன. அதைப் படித்தால் முருகனின் தொன்மை சிறப்பு உங்களுக்குப் புரியும். அது பற்றி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

Tags:    

Similar News