சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்- கல்வி

Published On 2024-11-09 10:30 GMT   |   Update On 2024-11-09 10:30 GMT
  • கசடு இப்படித்தான் இருக்கும் என்பதை அறிவது ஒரு கல்வி.
  • திருக்குறள், திருஅருட்பா, திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களின் தன்மையை தெரிந்திருக்க வேண்டும்.

அதிகாரம்: கல்வி

இந்த அதிகாரத்தில்,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

என்ற குறளில் தொடங்கி

கேடில் விழுச்செல்வம் கல்வி

யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.

என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

கல்வி என்ற இந்த அதிகாரம் அரசியலில் இடம் பெற்றுள்ளது. எனவே இதனை மன்னருக்கு முதலில் கூறியிருக்கின்றார். ஒரு மன்னர் ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எதிரியை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதை அறிந்து போர் பயிற்சியையும் போர்கலைகளையும் கற்றுக் கொள்வது அவசியமான கல்வியாகும். இதனால் நாட்டை பாதுகாக்கின்ற முறையை அறிந்து அரசியல் நுணுக்கங்கள் அறிந்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்ய முடியும்.

இல்லறத்தார்கள் தங்கள் தொழிலை செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் உலக நடை கல்வியைப் பயில வேண்டும். அது பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு போன்றவை ஆகும். இது உலகியல் வாழ்க்கைக்கு உதவும்.

மற்றொரு கல்வி உயர்ந்ததாக கருதப்படுகிறது. அது பிறவிப் பிணிக்கு மருந்தாக இருக்கும். அவற்றுள் மரணத்தை வெல்லுவதற்கான உபாயம் கூறப்பட்டிருக்கும். அதனை படித்தால் தேகக்கசடு நீங்குவதற்கான வழியையும் உபாயத்தையும் கூறியிருப்பார்கள். அதில் மாசு இப்படித்தான் இருக்கும் என்பது சொல்லப்பட்டிருக்கும்.

இந்நூலில் மனமாசுபற்றியும் களிம்பை அறுப்பது பற்றியும் மும்மலத்தை நீக்குவது பற்றியும் சொல்லப்பட்டிருக்கும். இதனை ஐயப்பாடு இல்லாமல் அறிந்து அதனை இயற்றியவர்களின் திருவடியின் மீது பக்தி செலுத்தி தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

உடலைப் பற்றி அறிந்து கொள்வதும், உடலில் உள்ள கசடைப் பற்றி அறிந்து, அதை நீக்குவது பற்றி அறிந்து கொள்வதும் உயர்ந்த கல்வி. கசடு இப்படித்தான் இருக்கும் என்பதை அறிவது ஒரு கல்வி. அந்த கசடை அறுக்க முயற்சிப்பது ஒரு முயற்சி. உண்மை தெரிந்து கொண்ட பின்புதான் கசடு அற்றுப்போகும். அதன் பின் களிம்பை அறுக்க வேண்டும்.

திருக்குறள், திருஅருட்பா, திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களின் தன்மையை தெரிந்திருக்க வேண்டும். இந்த நூல்கள் வாழ்க்கைக்கு பயன்படக் கூடிய நூல்கள். உலகநடை அறிந்து வாழ்வதற்கு உரிய நூலாகவும், உயரிய நூலாகவும் இருக்கும். இந்த நூல்கள் உயிரைப் பற்றியும் உடலைப் பற்றியும் சொல்லும். இந்த ஞானநூல்களின் துணைகொண்டு ஆன்மாவைப் பற்றி அறியலாம். ஆன்மாவைப் பற்றி அறிந்தால்தான் உடலைப்பற்றி அறிய முடியும்.

அவாவை அறுக்க வேண்டும். அவாவிற்கு உடம்புதான் காரணம். பசிக்கு காரணம் இயற்கை. மூச்சுக்காற்று அசைவுக்கு காரணம் பசி. பசியின் காரணமாக உணவு. இந்த தேகம் உணவில் உள்ள சத்தை ஊட்டி அசத்தை வெளியே தள்ளுகிறது. இதற்கு கருவிகரணங்கள் காரணமாக உள்ளது.

சத்து ஊட்டும்போது உடல் வளர்கிறது. அதுவே காமத்திற்கு காரணமாக உள்ளது. சாப்பிடாமல் இருந்தால் காமம் அறுபடுமா? அறுபடாது. பட்டினி போடாமல் காமத்தை அறுக்க வேண்டும். இதனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டால் கசடற கற்றுக் கொண்டான் என்பது ஆகும். கசடு என்ற அழுக்கை அறிந்து அதனை அறுக்க கற்றுக்கொள்கிறான்.

ஆன்ம வளர்ச்சிக்கு கற்க வேண்டிய நூலைக் கற்றான். ஆன்மா ஆக்கம் பெற்றால் அறிவு ஆக்கம் பெறும். அப்போதுதான் ஆன்மாவின் இயல்பை அறிய முடியும். உயிருக்கு ஆக்கம் தரக்கூடியது ஒன்று பக்தி. மற்றொன்று தர்மம்.

பக்தி செலுத்துவது ஆன்மா ஆக்கம் பெறுவதற்காகத்தான். ஆன்மா ஆக்கம் பெற்றால் உடல் ஆக்கம் பெறும். உடம்பையும் உயிரையும் அறிந்து, இரண்டையும் சேர்க்க கற்றுக் கொள்வதே உயர்ந்த கல்வி. இதுவே சாகாக் கல்வி. இத்தகைய கல்வி அழியாத செல்வத்தையும், அழியாப் புகழையும் தரும்.

அசுத்தமான உயிருக்கு ஆக்கம் தருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கீழ்தரமான ஆன்மாவிற்கு ஆக்கம் தரமுடியாது. மலமற்றவனின், அழுக்கு நீங்கியவனின் ஆசி பெறும் போதுதான் ஆன்மா மாசற்றதாக மாறும். மாசுள்ள உயிரை மாசற செய்வது புண்ணியம். புண்ணியவான்களின் திருவடியைப் பற்றினாலன்றி அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியாது.

ஆசையை நீத்துப் போக செய்தல் வேண்டும். நீத்துப் போகுதல் என்பது பெரிய விசயம். தேகம் தோற்றமாக இருக்கும், நடமாடிக் கொண்டிருக்கும், ஆன்மா பிரிந்தால் பிணமாகும். நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைத்தால் கரியாக மாறும். அதனை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது சாம்பலாக மாறும், நீத்துப்போகும்.

இந்த ரகசியத்தை அறிவதுதான் சாகாக்கல்வி.

ஞானிகளின் திருவடியை உள்ளம் உருக பூஜித்தால்தான் ஞானிகள் இதை நமக்கு உணர்த்துவார்கள்; உணர்த்தினாலன்றி இதை உணர முடியாது. ஞானிகளின் திருவடியை பூஜை செய்தால்தான் நமக்கு நீக்குவதா, அறுப்பதா, நீத்துப்போவதா என்பதைப் பற்றி தெரியும்.

நீத்துப் போன தேகத்தில் பசி இருக்காது, காமம் இருக்காது, சூடு இருக்காது, கருப்பு இருக்காது, வெள்ளையாக இருக்கும். நெருப்பை அணைத்தால் கரியாக இருக்கும். அதை எரித்தால் சாம்பலாக இருக்கும். இங்கு நெருப்பும் இல்லை; கரியும் இல்லை நீத்து விட்டது.

எந்த இயற்கை நம்மை வஞ்சித்ததோ? எந்த இயற்கை பசிக்கு காரணமாக இருந்ததோ, எந்த இயற்கை பசிக்கு உணவாக இருந்ததோ, எந்த இயற்கை பசிக்கு கருவிகரணங்களாய் இருந்ததோ, எந்த இயற்கை தொண்ணூற்றாறு தத்துவங்களாய் இருந்ததோ, அதே இயற்கையின் துணை கொண்டு நம்முள் இருக்கும் அற்புத சக்தியை தட்டி எழுப்புவதற்கே இந்த உடம்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்து கொண்டால் இந்த உடம்பு எக்காலத்திலும் அழியாத உடம்பாக மாறும். இல்லையெனில் நம்மை இந்த உடம்பு நரகத்தில் தள்ளி விடும். இத்தகைய இயற்கையின் ரகசியத்தை அறிந்தவர்களின் திருவடியை பற்றிக் கொள்வதே உயர்ந்த கல்வி.

இயற்கை அன்னையை புரிந்து கொண்டவர்கள் ஞானிகள். அவளே நம் உடம்பில் காளியாகவும் இருப்பாள், அசுத்த மோகினியாகவும் இருப்பாள், அவளே கருணை பொருந்திய தாயாகவும் இருப்பாள். அவளைப் புரிந்து அவள் சீற்றத்தை தணித்தால், அவள் நமக்கு அமிழ்தபானம் ஊட்டி நம்மைக் காப்பாற்றுவாள். இயற்கை அன்னை என்றும் வாழ்பவள்.

தோற்றுவிப்பதற்கு முன்பு அரூபமாக இருப்பாள். பின்பு ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பாள். பல்வேறு ஜீவராசிகளாகவும் இருப்பாள். மும்மலமாகவும் இருப்பாள். பரிணாம வளர்ச்சியாகவும் இருப்பாள். அவளே நரை திரை மூப்பாகவும் இருப்பாள்.

இயற்கை அன்னையைப் புரிந்து கொண்டால் தாயாக மாறுவாள். அவளின் கொடுமையை மாற்ற வேண்டும், வஞ்சகத்தை உடைத்தெறிய வேண்டும். அவள் நமக்கு தாயாக மாறவேண்டும். அதற்கு ஒரே வழி மலமறுத்தான் திருவடி. அதைத் தவிர வேறு வழியில்லை. ஞானிகளின் திருவடியைப் பற்றினால் இதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஞானிகள் ஆன்மாவைப் பற்றி அறிந்து ஆன்மாவிற்கு ஆக்கம் தேடிக்கொண்டவர்கள். அவர்களை வணங்கினால் சிறப்பறிவு ஏற்படும். ஞானியர்களின் திருவடியை பூஜை செய்வதும் புண்ணியம் செய்வதுமே சிறப்பறிவு. பக்தி ஆன்மாவிற்கு விளக்கம் தரக்கூடியது. புண்ணியம் ஆன்மாவிற்கு ஆக்கம் தரக்கூடியது.

பக்தியும் புண்ணியமும் சேர்ந்தால் பரிணாம வளர்ச்சிக்குட்பட்ட தேகம் மாசற்று போகும். உயர்ந்த சாகாக் கல்வி இலகுவானது. இங்கு உடல் உழைப்புக்கு வேலை இல்லை, அறிவுக்கு மட்டுமே வேலை. இந்தக் கல்வி சிந்தனை தெளிவால் பெறக்கூடியது. இதனை தெரிந்து கொள்ள சொற்குருவின் ஆசியிருக்க வேண்டும். சாகாக்கல்வி சான்றோர் தொடர்பினாலும் விடா முயற்சியினாலும் கிடைக்கக்கூடியது.

புலால் உணவு உண்பது, உயிர்க்கொலை செய்வது போன்ற பாவங்களை செய்வதாலும், குணக்கேடுகள் இருப்பதாலும் இதனை அறிய முடியாது. இவர்கள் முயற்சிப்பது வறண்ட நிலத்தில் கிணறு வெட்டுவது போன்றதாகும்.

உண்மைப் பொருளை அறிந்து முயற்சித்தால் இத்தகைய கல்வி ஏழு ஜென்மத்திற்கு துணையாக நிற்கும். ஒரு ஜென்மத்தில் இந்த கல்வியைக் கற்றுக் கொண்டால் அதுதான் ஏழு ஜென்மத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும். ஆகவே ஞானிகளின் திருவடிகளைப் பற்றினாலன்றி இதனைக் கற்க முடியாது.

ஞானிகள் திருவடியைப் பற்றுவதே சாகாக் கல்வி. அதற்கு புண்ணியம் அவசியம். பிறருக்குப் பொருள் கொடுத்து உதவுவதால் புகழும் உண்டாகும். புண்ணியமும் பெருகும், ஆன்மாவிற்கு ஆக்கம் உண்டாகும், உடம்பும் உயிரும் சேர்ந்து கொடுப்பதால் உயிரும் ஆக்கம் பெறும். இத்தகைய புண்ணியம் நாம் மேற்கொள்கின்ற தவமுயற்சிக்கு துணையாக இருக்கும். இதனால் உயிர் ஆக்கம் பெறும், உடலில் நோய் இருக்காது, வறுமை இருக்காது, சிறப்பறிவு உண்டாகும்.

நாம் எடுத்துக் கொண்ட லட்சியங்கள் ஈடேற தடையாய் இருக்கின்ற பொறிபுலன்களை அடக்கிக்கொள்ள வேண்டும். மோட்சத்திற்கும் அல்லது முக்திக்கும் எவையெல்லாம் தடையாய் இருக்கின்றதோ அவற்றை அடக்கிக் கொள்ளவேண்டும். பொறி புலன்களை அடக்குவது இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து இறுதியில் முக்தி பெறுவதற்கான பலனைக் கொடுக்கும்.

அடக்கமாக இருந்து இதனை அறிந்து கொண்டவன் பிறருக்கு சொல்ல வேண்டும். அதுதான் பிறருக்கு பலன் தரும். மாசற்ற குணம், மாசற்ற தேகம், மாசற்ற கல்வி போன்றவற்றை கற்றவன் சொன்னால் அது ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகவே இருக்கும். அதுபோன்ற கல்வி உயர்ந்த கல்வி, சாகாக் கல்வி.

மனிதவர்க்கம் அறிந்து கொள்வதற்கு இரண்டு கல்வி உண்டு. ஒன்று உலக நடை அறிந்து கொள்வதற்காக உள்ள கல்வி. மற்றொன்று ஆன்மாவையும், ஜென்மத்தையும் அறிந்து இனி பிறக்காமல் இருப்பதற்கான வழியைச் சொல்லும் கல்வி ஆகும். இதற்கான விளக்கம் எந்த நூலில் இருக்கின்றதோ அதனை படிக்க வேண்டும். அதுவே சாகாக் கல்வி, உண்மைக் கல்வி. இத்தகைய கல்வியை யாராலும் பறிக்க முடியாது. இதனைக் கற்றால் எங்கு சென்றாலும் சிறப்பு உண்டு.

மரணத்தை வென்றவர்களின் திருவடியைப் பற்றி பூஜை செய்து சாகாக் கல்வியை அறிந்து கொள்ளலாம். நாமும் சாகா வரத்தை பெறலாம். தேகத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதும், கசடைப் பற்றி அறிந்து கொள்வதும், கசடை நீக்குவது பற்றி அறிந்து கொள்வதும் உயர்ந்த கல்வி. உடம்பையும், உயிரையும் சேர்க்க கற்றுக்கொள்வதே உயர்ந்த கல்வி.

ஆன்மாவையும் ஜென்மத்தையும் அறிந்து இனிப்பிறக்காமல் இருப்பதற்கான கல்வி சாகாக்கல்வி ஆகும்.

சாகாவரத்தைப் பெறுகின்ற கல்வி சாகாக்கல்வி. சாகாக்கல்வியை யாராலும் பறிக்க முடியாது. சாகாவரத்தைப் பெற்றால் எங்கும் சிறப்பு உண்டு.

Tags:    

Similar News