சிறப்புக் கட்டுரைகள்

மன அமைதியே சொர்க்கம்!

Published On 2024-11-11 09:22 GMT   |   Update On 2024-11-11 09:22 GMT
  • மனச் சோர்வு, மன உளைச்சல் இவை மூளையின் செயல்பாட்டுத் திறனை வெகுவாய் குறைத்து விடுகின்றன.
  • யாரிடமும் எதற்காகவும் கெஞ்சக் கூடாது. எதனையும் இறைவனிடம் கேளுங்கள்.

நாம் இப்படியெல்லாம் இருந்தால் தன்னம்பிக்கை உடையவர் தான்.

* எப்போதும் அமைதியாய் நம்மால் இருக்க முடிகின்றதா?

* நம்மால் எந்த நேரத்திலும் கவுரவமாக நடந்து கொள்ள முடிகின்றதா?

* வளைந்து நெளியாமல் கம்பீரமாக உட்காருகின்றோமா?

* பொறுமை இருக்கின்றதா?

* பிறரை ஏதோ மகா மட்டமானவர் போல் பார்க்காமல் இருக்கின்றோமா?

* பிறரிடம் பேசும்போது கண் வெளியே குதிப்பது போல் உருட்டி, மிரட்டி இல்லாது அமைதியான பார்வையோடு பேசுகின்றோமா?

* வாக்குவாதம் என்றாலும் அதில் கோபம் ஊடுருவி கடுமையான, தகாத வார்த்தைகளை கொட்டாது இருக்கின்றோமா?

* எதனையும் முழு விவரம் அறிந்த பின்பே பேசுகின்றோமா?

* அமைதியான தொனியிலேயே பேசுகின்றோமா? அப்புறம் என்ன? நிறைய 'ஆம்' இருந்தால் தன்னம் பிக்கையின் மறு பெயரே நீங்கள்தான்.

சரி, தன்னம்பிக்கை இருக்கு. கூடவே ஞாபக சக்தியும், கூர்ந்த கவனிப்பும் இருந்தால் தானே திறம்பட இருக்க முடியும். இதற்கு உடனே சில முறைகளை பின்பற்ற ஆரம்பித்தால் கைமேல் பலன் கிடைக்கும். சிறு குழந்தைகள் முதலே குறுக்கெழுத்து போட்டி பழகுவது ஞாபக சக்தியினைக் கூட்டும் கவனத்தினை நேர்படுத்தும்.

* இருப்பினும் புதிதாக ஒரு பொழுது போக்கு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். மூளை நம் தசை போலத்தான். நன்கு வேலை கொடுத்தால் மூளை நன்கு உறுதியாய் இருக்கும். புது சவால்களாக சற்று கடுமையானதாக எடுத்து பழகி அதில் முன்னேற்றம் காணுங்கள்.

* எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எடை ஞாபகத்திறனை வெகுவாக பாதித்து விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* மன நலத்துக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்தாலே உடல் நலம் நன்கு இருக்கும் என்பது ஆய்வுகள் கூறும் கருத்து. மனச் சோர்வு, மன உளைச்சல் இவை மூளையின் செயல்பாட்டுத் திறனை வெகுவாய் குறைத்து விடுகின்றன. சோகம், அதிக மன உளைச்சல் இவை 'ஹிப்போகாம்பஸ்' எனப்படும் மூளையின் ஞாபக சக்தி பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

ஆக மன உளைச்சல், மனச் சோர்வு போன்றவை நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமே சிறந்த வழி.

 

* மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள் (ஓமேகா-3) இவை மூளையின் திசுக்களை வலிவு பெற செய்கின்றன. இது தொடர்ந்து தேவைப்படுவதால் மருத்துவர் அறிவுரையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* யோகா, உடற்பயிற்சி, ஓட்டம் ஆகிய வற்றினை வயதிற்கேற்ப பயிற்சியாளர் மூலம் மேற்கொள்ளும்போது மூளைக்கு ஞாபக சக்தி திறனை கூட்டுகின்றன.

* வெள்ளை சர்க்கரை, தேன் முடிந்தால், அனைத்து வகை சுவீட் வகைகளையும் நிறுத்தி விடுங்கள். குளிர்பானங்களைத் தவிருங்கள். இவை உங்கள் ஞாபகத்திறன் சக்தியினை விழுங்கி விடும். நீங்கள் சிறிது காலம் இனிப்புகளைத் தவிர்த்து தான் பாருங்களேன்.

* சிறிது நேரம் மற்றவர்களுடன் நேரம் செலவழித்துப் பாருங்கள். மற்றவர் கதை கேட்டால் புத்தி கூர்மை பெறும்.

* எதை செய்தாலும் அதில் முழு கவனத்தோடு செய்ய வேண்டும். இஸ்திரி போட்டாலும், சமைத்தாலும் போனில் பேசிக்கொண்டே செய்யாமலும் அதனையும் முழு கவனத்தோடு செய்யுங்கள்.

* கிரீன் டீ இரு முறை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

 

* அடர்ந்த சாக்லேட், கோகோ இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்துக் கொள்கின்றீர்களா?

எளிமையாக இருப்பது, பண்பாக இருப்பது, பணிவோடு இருப்பது இவை மனிதனை 'மனிதருள் மாணிக்கம்' எனக் காட்டும்.

மற்றவரின் புகழ் வார்த்தைகள் ஒரு புறம் இருக்கட்டும். மேற்கூறிய குணங்கள் இருந்தால் மனம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் தெரியுமா? மன நிம்மதியை விட உலகில் சிறந்தது எதுவுமே இல்லை. சரி, நமக்கு நாம் மரியாதை கொடுத்துக் கொள்வது எப்படி?

* யாரிடமும் எதற்காகவும் கெஞ்சக் கூடாது. எதனையும் இறைவனிடம் கேளுங்கள். இறைவனிடம் கெஞ்சுங்கள். கண்ணீர் விடுங்கள். ஆனால் பிறரிடம் கெஞ்சி மரியாதையினை இழக்கக்கூடாது.

* எவ்வளவு தேவையோ அதை விட சற்று குறைவாகவே பேசுங்கள். அதிக பேச்சுக்கு மரியாதையே கிடையாது.

* உங்களை சிறிது மரியாதை குறைவாக யார் நடத்தினாலும் உடனே எதிர்த்து விடுங்கள்.

* உங்கள் மீது அக்கறை இல்லாதவர்களுக்காக அவர்களை நீங்கள் தேடி செல்ல வேண்டாம்.

* எப்போதும் சுத்தமாக, கம்பீரமாக, அழுக்கில்லாத உடை எடுத்து இருப்பது மிகவும் முக்கியம்.

* எதனையும் பேசுவதற்கு முன்னால் சிறிய இடைவெளி கொடுங்கள். 95 சதவீதம் பிரச்சினைகள் எழாமலே போய் விடும்.

* முதலில் உங்களை கவனியுங்கள். அதற்கு வேறு யாரும் உங்களுக்கு இல்லை.

* ஊர் வம்பு மிக மோசமான நோய். அதனை கிட்ட நெருங்க விடக்கூடாது.

* சற்று சிந்தித்துப் பாருங்கள். கடந்து போன ஒரு நொடியினை எத்தனை கோடிகள் செலவழித்தாலும் திரும்ப கொண்டு வர முடியுமா? நடந்த ஒரு நிகழ்வினை மாற்ற முடியுமா? அப்போது காலத்திற்கு அது ஒரு நொடியாயினும் மதிப்பினை கணக்கிட முடியாது. ஆக ஒவ்வொரு நொடியிலும் முழு கவனத்துடன் செயல்படுங்கள்.

* கோபம் கொப்பளிக்கின்றதா? உடனே எதுவும் பேசாது அந்த இடத்தை விட்டு வெகு தூரம் நகர்ந்து விட வேண்டும்.

* பிறரை உங்கள் வார்த்தைகள் காயப்படுத்தும் என்றால் ஒரு பேச்சு கூட வெளி வரக்கூடாது. அத்தகைய சுய கட்டுப்பாடு வேண்டும்.

* உங்கள் அமைதி உறவுகளை முறிக்காது, காப்பாற்றும் என்றால் தப்பே இல்லை. வாயை சிமெண்ட் போட்டு பூசி விடுங்கள்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க சின்ன எளிய வழிகள்!

* அதிக நேரம் செல்போனுக்குள் மூழ்காதீர்கள். ஆய்வுகள் கூறுவது அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருப்பவர்களோ சிலர் காலை முதல் இரவு வரை டி.வி. குறிப்பாக சீரியல்கள் பார்ப்பார்கள். இவர்கள் எளிதில் மனச்சோர்வு, மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறது.

* நாம் வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடிக்கொண்டே இருப்போம். வர வேண்டிய நன்மைகளும் சரியான நேரத்தில் வந்து சேரும்.

* உடற்பயிற்சி செய்ய சோம்பலாக இருக்கும்தான். செய்த பின் சற்று பலவீனமாகக் கூட உணரலாம். ஆனால் உண்மையில் உறுதியானவர் ஆக்குகின்றது. அது போல்தான் வாழ்க்கையும்.

* பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது பயமாக இருக்கலாம். ஆனால் அது உங்களை தைரியமானவர் ஆக்குகின்றது என்பதனை உணர்கின்றீர்களா? அதுதான் வாழ்க்கை.

இதையெல்லாம் புரிந்து கொண்டு விட்டால் மகிழ்ச்சிக்கு குறைவு ஏது?

சகுனி என்ன மகாபாரதத்தில் மட்டுமா இருந்தார்?

குடும்பத்தினைப் பிரிக்க ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும் இருக்கின்றார். காட்டிக் கொடுக்கவும், மாட்டிக் கொடுக்கவும் வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் ஒரு எட்டப்பர் இருக்கின்றார்.

பழி சொல்ல பத்தாயிரர் பேர், வழி சொல்ல ஒருவர் இல்லை.

மனம் அமைதியாய் இருந்தால் இவைகள் புரியும்!

* நமக்கென்ற எல்லைக் கோடுகளை வகுத்துக் கொள்வது சுயநலம் அல்ல. கட்டுப்பாடு என்று.

* பிறருடைய கருத்தும் நம் கருத்தும் வேறுபட்டால் அது கருத்து வேறுபாடே அன்றி பகைமை ஆகாது.

* பிறர் உங்களைப் பற்றி கூறும் தவறான கருத்தினைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

* இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு வேலையினை 2 மாதம் தள்ளிப்போட்டு அதனை மனதினில், எண்ணத்தினில் சுமையாக சுமக்கக் கூடாது.

* சற்று நேரம் வெளியில் காலாற நடப்பது எத்தனை இயற்கை தரும் 'இதம்' என்று புரியும்.

* அன்றைய நாளினை சில பகுதிகளாக பிரித்து அந்த பகுதியில் குறிப்பிட்ட வேலையினை செய்வது எத்தனை எளிதாய் வாழ்க்கையினை மாற்றும் என்று பரியும். பல் தேய்ப்பதும் 10 மணி, காலை உணவு 11 மணி, குளிப்பது கண்ட நேரத்தில் என்று இருப்பவர் பலர். இவர்கள் நேரத்தினை பிரித்து உரிய வேலை செய்வது என்பது ஒழுக்கமாக அமையும்.

* செல்போன் அருகில் இல்லாது இருப்பது எத்தனை அமைதி என்று புரியும்.

 

கமலி ஸ்ரீபால்

* நிதானம் அமைதியானது, ஆழமான முடிவுகள் கொண்டது. கூடவே வேகமான தும் கூட. வேகம் ஒரு வகை பதறல்தான்.

* என்ன செய்ய வேண்டும் என்ற லிஸ்ட் முக்கியம். 'என்னவெல்லாம் செய்யக்கூடாது' என்ற லிஸ்ட் மிக மிக முக்கியம்.

* முக்கியமானவை என்ற லிஸ்டில் 2-3க்கும் மேல் இருந்தால் எதுவுமே முக்கியமில்லைத்தான்.

* நம்மோடு மட்டுமே நம்மை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். நேற்று இருந்த நம்மை, இன்று இருக்கும் நம்மை ஒப்பிட்டு பாார்த்துக் கொள்ளலாம்.

* மன அமைதி வாழ்வின் சொர்க்கம் என்பது புரியும்.

Tags:    

Similar News