சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்... கண்ணீர் விட வைத்த கே.எஸ். ரவிக்குமார்

Published On 2024-11-11 17:55 GMT   |   Update On 2024-11-11 17:55 GMT
  • வேலைன்னு வந்தா தீயாய் வேலை செய்யணும் குமாரு... என்பது அவருக்கு ரொம்பவே பொருந்தும்.
  • டைரக்டரிடம் திட்டு வாங்காமல் காப்பாற்றியது தான் பெரியது.

திரைத்துறையில் எவ்வளவு திறமையும், புகழும் பெற்ற கலைஞர்களாக இருந்தாலும் திறமையான டைரக்டர்களின் கீழ் பணியாற்றும் போது தான் பட்டை தீட்டப்படுகிறார்கள்.

அந்த வகையில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார் எனது திரை உலக பயணத்தில் முக்கியமானவர். அவரது டைரக்ஷனில் நடித்த முத்து, தெனாலி, நாட்டாமை, அவ்வை சண்முகி போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடித்து மிகப்பெரிய புகழையும் சம்பாதித்தேன்.

வேலைன்னு வந்தா தீயாய் வேலை செய்யணும் குமாரு... என்பது அவருக்கு ரொம்பவே பொருந்தும்.

கே.எஸ்.ரவிக்குமாரை பொறுத்தவரை மிகப்பெரிய டைரக்டராக இருந்தாலும் அந்த அளவுக்கு பந்தா காட்டாதவர். ரொம்ப ஜாலியாக இருப்பார்.

ஷூட்டிங் வந்துவிட்டால் தலைகீழாக மாறிவிடுவார். ரொம்ப கோபம் வரும். கடு கடு என்று இருப்பார். சிறு தவறு செய்தாலும் வறுத்து எடுத்துவிடுவார். எனவே எல்லோரும் பயந்தபடி தான் இருப்பார்கள்.

நானும் ஜெயராமும், ஜோடியாக நடித்த படம் 'பாறை'. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டு செய்தார்.


படத்தில் எனக்கு மல்லிகா என்ற பெயர். எனது அம்மா பெயரும் மல்லிகா. எனவே அந்த பெயரில் நடித்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. எனவே படப்பிடிப்பில் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். அந்த படத்தை முற்றிலும் மாறுபட்டு இயக்கினார். அதாவது நடிகர், நடிகைகளுக்கு மேக்கப் கிடையாது. இயற்கையான தோற்றத்தில் நடிக்க வேண்டும். சுத்தமாக மேக் அப்பே போடா விட்டாலும் சருமங்கள் பாதிக்கும். முகத்தை கழுவி சுத்தமாக மேக்-அப்பே இல்லாமல் வரவேண்டும் என்பார்கள். அவர்கள் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அதனால் எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

காலையில் இருந்து இரவு வரை கேமரா லைட், வெயிலில் நிற்போம். மேக்-அப்பே இல்லாமல் இருந்தால் முக சருமம் பாதிக்கும். மேக்-அப் போட்டிருப்பது அழகுக்காக மட்டுமல்ல சரும பாதுகாப்புக்காகவும் தான்.

இது தெரிந்தும் சுத்தமாக முகத்தை கழுவி விடுங்கள் என்றதால் கஷ்டமாக இருந்தது. 3-வது நாள் படப்பிடிப்பு மேக்-அப் எதுவும் போடவில்லை. ஆனால் உதட்டுக்கு 'லிப்பாம்' கூட போடாமல் வெறும் லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக் கொண்டு சென்றேன். தேவைப்பட்டால் உடனே அதை அகற்றி விட முடியும்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ரவிக்குமார் சார் என்னை பார்த்ததும் 'மேக்-அப் போடாமல் தானே வரச்சொன்னேன். ஏன் லிப்ஸ்டிக் போட்டு வந்தாய்? என்று கோபத்தில் கேட்டார்.

அவருக்கே தெரியும் நான் வேறு எந்த மேக்-அப்பும் போட்டிருக்கவில்லை. வெறும் லிப்ஸ்டிக் மட்டுமே போட்டிருந்தேன். அதையும் சில விநாடிகளில் அழித்துவிட முடியும் என்பது.


என்னை பற்றி தெரிந்தவர்... மேக்-அப்பிரச்சனைகளையும் தெரிந்தவர்... இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் பலர் மத்தியில் வைத்து இப்படி சத்தம் போட்டு விட்டாரே என்று அழுகையே வந்து விட்டது. கண்ணீர் பொங்கியது. மற்றவர்கள் மத்தியில் வைத்து அழுது விடக் கூடாது என்று கண்ணீரை அடக்கி பார்த்தேன். ம் கூம்.... முடியவில்லை..

பெருக்கெடுத்து கண்களில் திரண்டு நின்ற கண்ணீரை சாதாரணமாக திரும்புவது போல் வேறுபக்கமாக திரும்பி துடைத்து விட்டேன். சகஜ நிலைக்கு வருவதற்கு சிறிது நேரம் ஆனது. இந்த சாதாரண லிப் ஸ்டிக்குக்கே இவ்வளவு கோபப்பட்ட நிலையில் மறுநாள் ரம்யாகிருஷ்ணன் வந்திருந்தாரே பார்க்கணும்....

கழுத்தில் இருந்து தோள்பட்டை வரை மேக்-அப் போட்டிருந்தார். அது அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டுக்கு மேல் பகுதியில் பளிச்சென்று தெரிந்தது. இதை ரவிக்குமார் சார் பார்த்தால் அவ்வளவு தான். ஒரு ருத்ர தாண்டவமே ஆடி விடுவார்.

எனவே நான் ரம்யாகிருஷ்ணன் அருகில் சென்று காதில் மெதுவாக சொன்னேன். 'மேக் அப் போட்டிருப்பது நன்றாக தெரிகிறது. டைரக்டர் பார்த்தால் அவ்வளவு தான். இப்படித்தான் நான் நேற்று வாங்கி கட்டினேன் என்றேன்'. அச்சச்சோ.... என்றவர் ஜாக்கெட்டை சற்று மேலே தூக்கிவிட்டு பார்த்தும் மேக்கப் மறையவில்லை. அதன் பிறகு நானே அவருக்கு பின்னால் நின்று மேக் அப்தெரியாமல் அழித்து விட்டேன்.

அழித்தது பெரிதல்ல. டைரக்டரிடம் திட்டு வாங்காமல் காப்பாற்றியது தான் பெரியது. நல்ல வேளை உன்னால நான் தப்பித்தேன் என்று ரம்யா நன்றி சொன்னார்.

அடுத்த சுவாரஸ்ய தகவலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்...

ஓ.கே. பை... பை....

(தொடரும்)

Tags:    

Similar News