null
- பெருமாள் திகைத்து நிற்க,திவ்யா தொடர்ந்தாள்.
- திவ்யாவும், டேவிட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
"என் தங்கச்சிகிட்ட ராத்திரி நேரத்துல, அதுவும் ஆளுங்க நடமாட்டம் இல்லாத இடமா பார்த்து, தப்பா நடந்துகிட்ட அந்த ரவுடிங்க, எனக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல வரணும். அதுவரைக்கும், நான் இந்த ஸ்டேஷன விட்டு போக மாட்டேன்..."- ஆக்ரோஷமாக பேசிய பெருமாளை பார்த்து சற்று அரண்டு விட்டார், அந்த இன்ஸ்பெக்டர்.
"சார்... பெருமாள் சார்... டென்ஷன் ஆகாதீங்க நிதானமா பேசுவோம்." இன்ஸ்பெக்டர் சமாதானப்படுத்தும் விதமாய் கூற,
அவரை அலட்சியப்படுத்திய பெருமாள், "அழகர் சார்... நான் உங்ககிட்ட பிசினஸ் பேச வரல. பிரச்சனையை பேச வந்திருக்கேன்..."- என கூற, 'என்ன சொல்லி பெருமாளை சமாளிப்பது 'என்று தெரியாமல் இன்ஸ்பெக்டர் அழகர் விழி பிதுங்கி நின்றார்.
அவருக்குத் தெரியும் பெருமாள் இருக்கும் கட்சி. அவன் பி ஏ வாக இருக்கும் பிரமுகரின் பின்புலம். அது மட்டும் இல்லாமல், இந்தப் பிரச்சனையை முடிக்கவில்லை என்றால், அவருக்கு டிரான்ஸ்பர் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்.
பெருமாளுக்கு பின்னாடி நின்ற அவனது சகாக்களையும், சற்று தள்ளி நின்று கொண்டிருக்கும் திவ்யா, டேவிட் மற்றும் அவர்கள் நண்பர்கள், குடும்பத்தாரையும் பார்த்த இன்ஸ்பெக்டர், பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளிடம், "யோவ்... முதல்ல எல்லோருக்கும் டீ சொல்லுயா..." என்று சொல்லிவிட்டு, தனது சேரில் அமர்ந்தார். அவருக்கு எதிர்ப்புறம் இருந்த சேரில் அமர்ந்தான் பெருமாள்.
"சார்... முதல்ல எனக்கு விளக்கம் சொல்லுங்க! பிரச்சனையில சம்பந்தப்பட்ட ரவுடிகளை இன்னமும் பிடிக்கல. அதுக்குள்ள மொத்த குடும்பத்தையும் ஏன் சார் ஸ்டேஷன்ல நிப்பாட்டி வச்சிருக்கீங்க?" என கேட்க,
"ஐயோ சார்... நான் கம்ப்ளைன்ட் கொடுத்த திவ்யாவையும், அவங்க வீட்டுக்காரரையும் மட்டும்தான் வரச்சொன்னேன். ஆனா, கூடவே அவங்க பிரெண்ட்ஸ்,அப்பா, அம்மா, இவங்க எல்லாம் வருவாங்கனு நான் எதிர்பார்க்கவில்லை சார்.."
பெருமாள் இன்ஸ்பெக்டரையே கூர்ந்து பார்க்க, அவர் தொடர்ந்தார்."வந்தவங்களை போங்கன்னு சொல்ல கூடாது இல்லையா? துணைக்கு வந்து இருக்கலாம்...! ஒரு சப்போர்ட்டுக்கு வந்து இருக்கலாம்...! உங்களுக்கு தெரியாதா பெருமாள் சார்?" - என சற்று வழிந்தபடி இன்ஸ்பெக்டர் கூற,
இங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா, டேவிட்டை ஒரு கணம் பார்த்துவிட்டு, தன் அப்பா அம்மாவை பார்த்தாள். ஆனால், இவர்கள் முகத்தையே பார்க்காமல் இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான் பெருமாள்.
"சரி சார்... முதல்ல அந்த ரவுடிங்க கலாட்டா பண்ண இடத்துல ஏதாவது சிசிடிவி புட்டேஜ் கிடைச்சுதா இல்லையா?"
"சார்... அது சிட்டி அவுட்டர் ஏரியா... அங்க எங்கேயுமே சிசிடிவி கேமராக்கள் இல்ல" இன்ஸ்பெக்டர் சொல்லி முடிக்கும் முன் இடைமறித்தான் பெருமாள். "சரி விடுங்க... அது யூஸ் இல்ல... பட் அவ செல்போன்ல எடுத்த போட்டோக்களை வச்சு, இந்த நேரம் வரை யாரு அவங்கனு கண்டுபிடிக்க முடியலையா சார்?"
"இவங்ககிட்ட கலாட்டா பண்ணவங்க பழைய ரவுடிங்க லிஸ்ட்ல இருக்குற ஆளுங்க இல்ல சார்... புது ஆளுங்களா தெரியுது. கண்டிப்பா கொஞ்சம் டைம் ஆகத்தான் செய்யும் சார்...?" - என இன்ஸ்பெக்டர் கூற,
"அப்போ... நீங்க அந்த ரவுடிகளை கண்டுபிடிச்சு கிழிச்ச மாதிரி தான்..." என்று இன்ஸ்பெக்டரை பார்த்து கூறியவன் எழுந்து இவர்கள் பக்கம் திரும்பினான்.
திவ்யா, டேவிட், அவனது நண்பர்கள், அம்மா, அப்பா, மேரி அனைவரும் அவனேயே பார்க்க, டேவிட் இவர்களை பார்த்தபடியே இன்ஸ்பெக்டரிடம், "ஏன் சார்...? நேத்து இவங்க ரேண்டு பேரும் பைக்ல போறப்ப அந்த ரவுடிங்க கார் குறுக்க வந்துச்சுல்ல... சப்போஸ் மோதி ஒரு விபத்து ஏற்பட்டு, இரண்டு பேர்ல ஒருத்தருக்கு... இல்ல ரெண்டு பேருக்குமே ஏதாவது ஆகி... அட, யாராவது ஒருத்தர் செத்துப் போயிருந்தா... அப்பவும் இதே மாதிரி தான் பதில் சொல்லுவீங்களா சார்!" எனக் கேட்கவும்,
'அடப்பாவி ஏண்டா இப்படி எல்லாம் பேசுற?' என்பது போல் பெருமாளின் அப்பா, அம்மா பார்க்க, அப்போது குறுக்கிட்ட திவ்யா, "ஒரு நிமிஷம்... நான் கொஞ்சம் பேசலாமா?"- என கேட்க,
அவளை பார்த்து பெருமாள், "அதான்... இன்ஸ்பெக்டர்கிட்ட நான் பேசிட்டு இருக்கேன்ல... நீ என்ன பேச போற ?"எனக்கேட்க, "நான் இன்ஸ்பெக்டர்கிட்ட பேச விரும்பல. உன் கிட்ட பேசணும்." - என திவ்யா சொன்னாள். "என்கிட்ட நீ என்ன பேச போற?"- பெருமாள் கேட்கவும், திவ்யா "நீ ஸ்டேஷனுக்கு நேர்ல வந்து பேசுறதெல்லாம் பார்க்கும்போது, எனக்கு உன் மேல தான் டவுட் வருது. அந்த ரவுடிங்க, ஏன் நீ அனுப்புன ஆளுங்களா இருக்க கூடாது...?"
பெருமாள் திகைத்து நிற்க,திவ்யா தொடர்ந்தாள். 'போங்கடா... போய் கலாட்டா பண்ற மாதிரி பண்ணுங்க... அவங்களுக்கு ஒரு பயமுறுத்தல ஏற்படுத்துங்க! அப்ப போலீஸ் அங்க வரும். நீங்க ஓடி போயிருங்க. மத்தத நான் பாத்துக்கிறேன்' - அப்படினு "நீதான் ஆள் செட் பண்ணி அனுப்பிச்சி இருக்கியோனு, எனக்கு டவுட்டா பலமா இருக்கு" என கூறவும், பெருமாள் அப்படியே கண் விரித்து, அவளையே பார்த்தான்.
பக்கத்தில் இருந்த டேவிட், "ஆமாம் பெருமாள்... எனக்கும் ஒரு டவுட்டு இருக்குது. நீங்க நிஜமான பதட்டத்தோட, எங்களுக்கு என்னாச்சோ... ஏதாச்சோங்கிற ஒரு எண்ணத்தில வந்திருந்தா, முதல்ல எங்க கிட்ட வந்துதான், நீங்க பேசி இருக்கணும் .அதை செய்யலை...
இந்த ஸ்டேஷனுக்கு வந்து இவ்வளவு நேரம் ஆகியும், எங்க முகத்தை கூட நீங்க பார்க்கல. ஏதோ எங்களை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் மாதிரி இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு இருப்பீங்க. நாங்க அத நம்பணும். அப்படித்தானே?" - டேவிட் சொல்லவும், திரும்பி அவனை முறைத்தான் பெருமாள்.
அதற்குள் டேவிட் நண்பர்களில் ஒருவனான நெல்சன் "ஆமா சார்... இவ்வளவு பவர் உள்ள ஒரு ஆள் நீங்க ஒரு போன் பண்ணி இன்ஸ்பெக்டர்கிட்ட பேசியிருந்தாலே, அவர் எல்லா டீட்டையிலும் சொல்லிருக்க போறாரு. அத விட்டுட்டு, நாங்க ஸ்டேஷன்ல இருக்கோம்னு தெரிஞ்சுகிட்டு, எங்க முன்னாடியே வந்து நீங்க இப்படி ஒரு டிராமா பண்ணுறீங்களோன்னு நாங்க நினைக்கலாம் இல்லையா?" நெல்சன் முடிக்கவும், அவனை கூர்மையாய் பார்த்தான் பெருமாள்.
பின்னர் திரும்பி தன் அப்பாவை பார்த்து, "அப்பா ஆளாளுக்கு பேசுறாங்க. எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கீங்க? அவங்க பேசுவதெல்லாம் சரியானு இப்ப நீங்க சொல்லுங்க" பெருமாள் கேட்கவும், ரங்கராஜன் தயக்கமின்றி பேச ஆரம்பித்தார்.
"இது திவ்யாக்கு ஏற்பட்ட பிரச்சனை! அவ கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கா. இன்ஸ்பெக்டர் விசாரிச்சுகிட்டு இருக்காரு. அந்த ரவுடிங்க யாருன்னு கண்டுபிடிச்சு இந்த கேஸ அவரே முடிப்பாரு. இதுல நீ தேவையில்லாமல் தலையிட வேண்டாம்..." என கூற,
ஒரு தீ பார்வையை அவர் மீது வீசிய பெருமாள்,"ஓ... அப்போ இவ நிம்மதியா வாழக்கூடாதுன்னு நான்தான் ரவுடிங்ல செட் பண்ணி அனுப்பி, இவகிட்ட கலாட்டா பண்ண வச்சிருக்கிறேன்.அப்படித்தானே எல்லாரும் யோசிக்கிறீங்க...?" எனக் கேட்க, அனைவரும் மவுனமாக அவனையே பார்க்க,
பெருமாள், "வெரி குட்... நல்லா யோசிக்கிறீங்க. சரி, அப்ப இனி எனக்கு இங்க வேலை இல்லை"- என்று இன்ஸ்பெக்டரிடம் திரும்பியவன், "இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்! இனிமேல், நான் இந்த கேஸ்குள்ள தலையிட மாட்டேன். எனக்கு பிடிக்காத, வேற ஒரு மதத்துல உள்ளவனை கல்யாணம் முடிச்சுட்டு போனா கூட, அவ என் தங்கச்சிங்கற முறைக்காக தான் ஸ்டேஷனுக்கு வந்தேன். எப்போ நான் வந்தத, இவங்க எல்லாம் தப்பா குற்றம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களோ... அதுக்கப்புறம் இவங்களுக்கு ஆதரவா நான் நிக்கறதுல எந்த பிரயோஜனமும் இல்லை! நான் வரேன்" - என்று திரும்பி விறுவிறு என்று வெளியே போனவன்,
ஒரு கணம் நின்று திரும்பி இவர்களை பார்த்து, "கல்யாணம் ஆனது ஆகிப்போச்சு..பழசை மறந்துடுவோம், அப்படின்னு நினைச்சு தான் நான் ஸ்டேஷனுக்கு வந்தேன். ஆனால் நான் மறந்தாலும் நீங்க மறக்கத் தயாராக இல்லை. இன்னைக்கு நடந்தத நான் என் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்.
இப்போ கோவம் இல்லாம நிதானமா சொல்றன். நான் சத்தியமா சொல்றேன், இனி உங்களுக்கும் எனக்கும் ஒரு ஓட்டு உறவு கூட கிடையாது. மொத்தமா கழுவிட்டு போறன்" அவன் வேகமாக கிளம்பி வெளியே போகவும் திவ்யாவும், டேவிட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
இவர்கள நோக்கி வந்த இன்ஸ்பெக்டர் அழகர், "பெருமாள் சார் வந்த வேகத்தை பார்த்தா, எங்க எனக்கு பிரச்சனை ஆயிடுமோனு பார்த்தேன். நல்லவேளே. நீ குறுக்க பேசி,அவர கிளம்ப வச்சேன்மா... சரி... நீங்களும் கிளம்புங்க. உங்ககிட்ட கலாட்டா பண்ண ரவுடிகளை எப்படியாவது புடிச்சிட்டு, அப்புறமா தகவல் சொல்லி அனுப்புறேன், போயிட்டு வாங்க!"- என அவர்களை கை கூப்பி, அனுப்பி வைத்தார்.
அவர்கள் ஸ்டேஷனை விட்டு வெளியே வர, அதே நேரத்தில், வெளியே பைக்கில் சென்று கொண்டிருந்த பெருமாள் முகத்தில் கோபத்தின் ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
பக்கத்தில் வந்து கொண்டிருந்த பெருமாளின் அடியாள்களில் ஒருவன், "என்னெண்ண... இப்படி அசிங்கப்படுத்திட்டாங்க!"- என சொல்ல, அவனைப் பார்த்து பெருமாள்,
"அசிங்கப்படுத்தலடா! அவங்களே அவங்களுக்கு குழியை தோண்டிகிட்டாங்க. உதவிக்கு போன என்ன உதாசீன படுத்திட்டாங்க இல்ல! இனிமேதான் ஏன்டா அன்னைக்கு அப்படி பேசுணோம்னு அவங்க பீல் பண்ண போறாங்க .."-என கூறியபடி, தன் முழு கோபத்தையும் பைக்கின் ஆக்சிலேட்டரில் காமிக்க, பைக் வேகம் எடுத்து சீறி பாய்ந்தது. (தொடரும்)
E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353