சிறப்புக் கட்டுரைகள்
null

'தர்மயுகம்' காண வைகுண்டர் மேற்கொண்ட தவவாழ்வு

Published On 2024-11-16 08:15 GMT   |   Update On 2024-11-16 08:30 GMT
  • வடக்கு வாயில் உள்ள இடத்தில் மாமரம் ஒன்றின் கீழ் சுவாமிகள் வடக்கு நோக்கி தவம் மேற்கொண்டார்.
  • நோய்களை தீர்ப்பதற்குத் தர்மத்தை ஆயுதமாகக் கொண்டார்.

திருச்செந்தூரில் கடலுள் தான் விஞ்சை பெற்ற போது, நாராயண மூர்த்தி தன்னைத் தவம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார் எனத் தனது அன்பர்களிடம் கூறினார். 'நீ எண்ணியது நடந்திட வேண்டுமெனில் ஆறு ஆண்டு காலம் மூன்று தவங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நீ சிந்தா நன்மையுடன் உலகினில் இருந்திடலாம் ' என நாராயண மூர்த்தி கூறியபடி ஆறு ஆண்டுகள் தவமிருக்க தொடங்கினார்.

முதல் இரண்டு ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட தவத்தை 'யுகத்தவம்' என அகிலம் குறிப்பிடுகின்றது. கலியுகம் மாற்றித் தர்மயுகம் காண இத்தவம் புரிந்தார். அந்த இரு ஆண்டுகளிலும், ஆறடி பள்ளம் அகழ்ந்து, அதனுள் அமர்ந்து, தவம் செய்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சாதி வேற்றுமை ஒழிந்திடத் தவம் மேற்கொண்டார். கந்தைத் துணி உடுத்தி, நிமிர்த்திக் காட்டாது, ஒருவரிடமும் இனிப்பு மொழி பேசாது, பாலல்லாமல் வேறு உணவு உண்ணாது சாமிதோப்பு பதியில் வடக்கு வாயில் உள்ள இடத்தில் மாமரம் ஒன்றின் கீழ் சுவாமிகள் வடக்கு நோக்கி தவம் மேற்கொண்டார்.

மூக்கு நடுவே மும்முகமும் முத்திமுத்தி

நாக்கு சுளிதாங்கி நாராயண எனவே

மகாபரனை நெஞ்சில் மறவாமல் எப்போதும் கண்டு,

உடலுள் சூட்சமம் ஒருவருக்கும் காணாமல்

அகமதுவே பூசித்து அதிக தவசு இருந்தார்

சுவாமிகள் நான்கு வருட தவத்தினை முடிக்கும் வேளையில், திரள் திரளாக மக்கள் அவரைக்காண வந்தனர்.

"சாணானிடையன் சாதிவணிகனுடன்

நாணாத காவேரி நல்ல துலுக்க பட்டர் முதல்

சூத்திரப் பிரமான் தோல் வாணியன் பறையன்

கம்மாளன் ஈழன் கருமறவன் பரவன்

வெம்மான சுராணி வேகண்ட நிடையார்

சக்கிலியனோடு சாதி பதினெட்டுகளும்"

வைகுண்டரை தலமளந்த நாதன் எனக் கருதி வணங்கி நின்றனர். சுவாமிகளின் மூன்றாவது இரண்டாண்டு கால தவம், பெண் அடிமை நிலை மாறி, அவர்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்டது. வைகுண்ட சுவாமிகளை காணவந்த பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் குறைகளையும், துன்பங்களையும் கூறி, தீரா வியாதிகளை எல்லாம் தீர்த்திடுமாறு வேண்டி நின்றனர்.

பிறவிக் குருடு ஊமை பேச்சறா நாக்குவரல்

திறவி யொளி போல் திறமும் மொழி கொடுத்தார்

கர்ம வியாதிகளால் கால்மொட்டி கைகள்மொட்டி

தர்மமில்லா பாவிகட்கு தாழ்மை மிகக் கொடுத்தார்.

அவர் நோய் தீர்த்து அருளிய முறை எளிமையானதும் விந்தையானதும் ஆகும். நோய்களை அறத்தால் தீர்த்தார் எனவும், தர்ம வைத்தியமாய்த் தண்ணீர் மண் ஈந்து குணப்படுத்தினார் எனவும் அகிலம் உரைக்கின்றது. நோய்களை தீர்ப்பதற்குத் தர்மத்தை ஆயுதமாகக் கொண்டார். நாடி வந்த அன்பர்களுக்கு, நோய் அகற்றி, அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையூட்டி ஆற்றுப்படுத்தினார். வைகுண்ட சுவாமிகளின்

மேன்மை அறிந்து

கர்த்தாதி கர்த்தன் கடவுளாரென்று சொல்லி

பதினெண் சாதிகளும் பண்பாய் ஒருதலத்தில்

விதி வந்ததென்று மேவிக் குலாவி

இன்புற்று இருந்தனர் என்று அகிலம் குறிப்பிடுகின்றது.

அறிவுரைகள்

வைகுண்ட சுவாமிகளின் புகழ் திக்கெட்டும் பரவிட, ஏராளமான மக்கள் அவரை நாடி வரலாயினர். வந்தோரிடம், அன்புடன் அவர்தம் குறைகளை கேட்டு, அவற்றை களைந்திடும் வழிமுறைகளை ஆதரவாய் எடுத்துரைத்தார். தன்னுடைய அறிவுரைகளை யதார்த்த மாகவும், ஐயமின்றியும், மக்களிடம் போதித்தார். தன்மானம், தர்மம், உண்மை, அன்பு, ஒற்றுமை முதலியவற்றோடு வாழ்ந்திட மக்களைத் தயார்ப்படுத்தினார்.


இன்று முதல் எல்லோரும்...

ஒன்று போல் ஒரு புத்தியாய் இருங்கோ

காணிக்கை யிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ

வீணுக்குத் தேடுமுதல் விருதாவில் போடாதுங்கோ

அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்தாண்டிடுங்கோ

எவனெவனுக்கும் பதறியினி மலைய வேண்டாமே.

என்று தன்னை நாடி வந்த மக்களிடம் புரட்சி முழக்கமிட்டார்.

தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய்.

உண்டு பண்ணி வைத்த உட்பொருளைத் தேடாமல்

கண்டதெல்லாம் தெய்வமெனக் கையெடுப்பார் சண்டாளர்.

அறிந்து பல சாதி முதல் அன்பொன்றுக்குள்ளானால்

பிரிந்து மிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்.

சத்துருவோடும் சாந்தமுடனே இரு

புத்தியில்லாரோடும் பேசியிரு என் மகனே.

இரப்பனைக் கைக்கொண்டோர் எனையேத்தார்

பரப்பனைக் கைக்கொண்டோர் பரமேத்தார்.

இரப்போர் முகம் பார்த்து ஈவதுவே நன்றாகும்

பரப்போரைக் கைசேர்த்துப் பரிவதுமே நன்றாகும்.

அடக்கம் பெரிது அறிவுள்ள என் மகனே

கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே.

நன்றி மறவாதே நாம் பெரிதென்றெண்ணாதே

அண்டினபேரையகற்ற நினையாதே.

கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே

வலிமாய நினைவு மாய்மாலமென் மகனே

ஆனதால் ஆயுதங்கள் அம்புதடி வேண்டாமே

மானமாக விருந்தால் மாழுங்கலி தன்னாலே.

பொய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே

மெய்யரோடு அன்பு மேவியிரு என் மகனே.

வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே

பரம்பூமி கண்டு பாவித்திரு என் மகனே.

சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்

நீட்டம் காணாதே.

சொத்து ஆஸ்தி வஸ்து சுகம் என்று எண்ணாதே

வஸ்து வகை பெண்வகையென்று எண்ணாதே.

சத்தியம் தான் மறந்து மத்திபத்தைச் செய்யாதே

மத்திபத்தைச் செய்தானால் மனநாகம் தீண்டிவிடும்.

கொத்தைக் குறையாதே குறைமரக்கால் வையாதே.

வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்

தர்மம் தலைகெடுங்காண் சாத்திரத்துக் கேராது.

யாருக்கும் பதறாதே அச்சமில்லை என் மகனே!

நல்லவர் இட்ட தர்மம் நாள்தோறும் பொங்குமடா

நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று

வான் பெரிது அறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்.

கருதியிருங்கோ கருத்த யர்ந்து போகாதுங்கோ

அலைய விடாதிருங்கோ அஞ்சு பஞ்சமதையும்.

என்று அவர் உரைத்த போதனைகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்து சுயமாகச் சிந்திக்க தூண்டி யது. தனி மனிதனின் உரிமையை காத்தல், சமத்துவ நிலைக்கு எல்லோரையும் கொண்டு செல்லுதல் முத லிய கொள்கை தீபங்களை, வைகுண்ட சுவாமிகள் மக்கள் மன்றத்தில் ஏற்றி வைத்தார். அவரது போதனைகள் உரிமை வேட்கையில் மக்களைத் தணியாத் தாகம் கொள்ளச் செய்தன. சுரண்டலற்ற சுதந்திர வாழ்க்கைக்கு அழைப்பு விடுத்தன. இந்த சூழலில் ஆளும் வர்க்கத்தின் அராஜக அரசியலுக்கு எதிராக வைகுண்ட சுவாமிகள் ஓர் அமைதிப் புரட்சியை அரங்கேற்றினார். அது என்ன? வரும் தொடரில் பார்ப்போம்.

Tags:    

Similar News