சிறப்புக் கட்டுரைகள்

தீபாவளியைக் கொண்டாடுவோம்!

Published On 2022-10-21 03:52 GMT   |   Update On 2022-10-21 03:52 GMT
  • திருமால், லட்சுமி தேவையை மணந்த நாளே தீபாவளித் திருநாள் என்றும் ஒரு கதை சொல்கிறது.
  • காசியில் ஓடும் கங்கா மாதா, தீபாவளியன்று மட்டும் பாரத தேசத்தில் உள்ள ஆறு, குளம், கிணறு முதலிய எல்லா நீர் நிலைகளிலும் உறைவதாக ஐதீகம்.

* பொங்கல் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஓணம் கேரளத்தில் கொண்டாடப்படுகிறது. இப்படி இந்தியாவில் அந்தந்தப் பிரதேசங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகள் பல உண்டு.

ஆனால் தீபாவளி பாரத தேசமெங்கும் பெரும் முக்கியத்துவத்தோடு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்தியர்களை ஒருங்கிணைக்கும் பண்டிகைகளில் தீபாவளிக்கு முதன்மையான இடம் உண்டு.

* தீபாவளி பண்டிகையின் தோற்றம் குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன. நாம் அனைவரும் அதிகம் அறிந்த கதை நரகாசுரன் வதம் செய்யப்பட்ட கதை.

பூமாதேவிக்கும் திருமாலுக்கும் பிறந்த மகன் நரகாசுரன். தன் தாயாலன்றி வேறு யாராலும் தான் இறக்கக் கூடாது என வரம் வாங்குகிறான் அவன். ஒரு தாய் தன் மகனைக் கொல்லமாட்டாள் என்பது அவன் நம்பிக்கை.

அப்படி வரம் பெற்ற அவன் செய்யும் அட்டகாசங்கள் எல்லை மீறுகின்றன. உலகம் கடும் துயரில் ஆழ்கிறது.

கிருஷ்ண அவதாரத்தில் திருமால் கண்ணனாகப் பிறக்க பூமாதேவி சத்யபாமாவாகப் பிறக்கிறாள். அந்த வகையில் நரகாசுரனின் தாயாகிறாள் சத்யபாமா.

கண்ணன் நரகாசுரனுடன் போர்செய்து அவனை வதம் செய்யும் எண்ணத்தில் தேரில் ஏறுகிறார். அர்ச்சுணனுக்குத் தேரோட்டியாக இருந்த கண்ணனுக்குத் தான் தேரோட்டியாகிறாள் கண்ணனின் மனைவி சத்யபாமா.

கண்ணன், தான் நரகாசுரனைக் கொல்ல இயலாது என்பதையும் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவன் தாயான சத்யபாமாவால் தான் அவனைக் கொல்ல முடியும் என்பதையும் அறிவார்.

எனவே நரகாசுரன் எய்த அம்பின் மூலம் தான் மயக்கமடைந்ததுபோல் நடிக்கிறார் அவர். உலகமென்னும் நாடகத்தையே இயக்கும் கண்ணனுக்கு நடிக்கக் கற்றுத்தர வேண்டுமா என்ன?

கண்ணன் நடிப்பை நிஜமென எண்ணிய சத்யபாமா சீற்றமடைகிறாள். கணவரை மயக்கமடையச் செய்த நரகாசுரன்மேல் வில்லில் நாணேற்றி அம்பெய்கிறாள். அவ்விதம் தன் தாயாலேயே அவன் வதம் செய்யப்படுகிறான் என்பது விஷ்ணு புராணம் சொல்லும் கதை.

இறக்கும் தருவாயில் நரகாசுரனுக்குப் புத்தி வந்ததாகவும், தான் இறந்த நாளை நன்னாளாகக் கருதி எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகிப் புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என அவன் வரம் பெற்றதாகவும் கதை மேலும் வளர்கிறது.

நமது புராணக் கதைகள் ஒவ்வொன்றும் உட்கருத்தைக் கொண்ட உருவகக் கதைகளே. நரகாசுர வதம் என்னும் கதையின் உட்கருத்து என்ன?

தீய நினைவுகளே நரகாசுரன். அதைத் தோற்றுவிக்கும் மனமே நரகாசுரனின் தாய். மனம், தான் தோற்றுவித்த தீய நினைவுகளைத் தானே அழிக்க வேண்டுமே அல்லாது வேறு புறச் சக்தியால் அதை அழிக்க இயலாது.

மன உறுதி என்னும் வில்லில் தெய்வ பக்தி என்னும் அம்பைப் பூட்டி தீய நினைவுகள்மேல் எய்யும்போது, தீய எண்ணங்கள் நாசமாகின்றன. தெய்வ சிந்தனையால் நம் மனம் தூய்மையடைகிறது.

அவ்விதம் தீய நினைவுகளற்றுத் தூய்மையடைந்த மனத்தில் தோன்றும் ஆனந்தமே தீபாவளிக் கொண்டாட்டம். 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்று இந்த நிலையைத்தான் சொல்கிறது திருக்குறள். நிலையான ஆனந்தம் தூய மனமுடையவர்களுக்கு மட்டுமே கிட்டும்.

இறப்பு நடக்கும்போது வெடி வெடிக்கும் வழக்கமுண்டு. தீபாவளியின் போதும் வெடி வெடிக்கிறோம். எந்த இறப்பின் பொருட்டு வெடிக்கப்படுகிறது இந்த வெடி? தீய எண்ணங்களின் இறப்பையே தீபாவளியன்று வெடிக்கப்படும் வெடி உணர்த்துகிறது.

கேரளக் கோவில்களில் எல்லா நாட்களிலுமே வெடி வெடித்தல் ஒரு நேர்த்திக் கடனாக அனுசரிக்கப்படுகிறது. நாம் நமது பிறந்தநாளையும் நட்சத்திரத்தையும் சொல்லிக் காணிக்கை செலுத்தினால் நம் பெயரில் ஒரு படக்கம் - வெடி- வெடிப்பார்கள். நம் மனத்தின் தீய எண்ணங்கள் அழிந்ததை அந்த வெடிச்சத்தம் உணர்த்துவதாக ஐதீகம்.

தீபாவளியன்று நாம் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுகிறோம். அதை ஒரு சம்பிரதாயச் சடங்காக மேற்கொண்டால் போதாது. காமம், குரோதம் முதலிய தீய எண்ணங்கள் அனைத்திற்கும் சேர்த்துத் தலைமுழுகுவதாகப் பிரதிக்ஞை செய்துகொண்டு தலையில் தண்ணீர் விட்டுக்கொள்ள வேண்டும். அதுதான் சரியான தீபாவளிக் குளியல்.

* நரகாசுர வதம் என்பது மகாபாரதக் கண்ணன் தொடர்பான தீபாவளிக் கதை. ராமாயண ராமன் தொடர்பாகவும் ஒரு தீபாவளிக் கதை உண்டு.

ராவண வதம் நிகழ்ந்த பிறகு புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்புகிறார்கள் ராமன், சீதை, லட்சுமணன் முதலியோர். அவர்களை இல்லம்தோறும் விளக்கேற்றி ஆனந்தத்தோடு வரவேற்கிறார்கள் அயோத்தி மக்கள். பின்னர் ஸ்ரீராம பட்டாபிஷேகம் நிகழ்கிறது. அந்த நன்னாளே தீபாவளி என்பது வட இந்தியாவில் நிலவும் கதைகளில் ஒன்று.

அயோத்தி மக்கள் தீபமேற்றி ராமபிரானை வரவேற்றதன் அடையாளமாக இப்போதும் வட இந்தியாவில் தீபாவளியன்று இல்லம் தோறும் தீபங்களை ஏற்றி வைக்கிறார்கள். தமிழகத்தில் கார்த்திகை கொண்டாடப்படுவதுபோல் அங்கே தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றாலே விளக்குகளின் வரிசை என்பதுதான் பொருள்.

* திருமால், லட்சுமி தேவையை மணந்த நாளே தீபாவளித் திருநாள் என்றும் ஒரு கதை சொல்கிறது. அமுதம் வேண்டி, வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிப் பாற்கடல் கடையப்பட்டது.

அப்போது அமுதம் தோன்றுவதற்கும் முன்பாக வேறு பல உன்னதப் பொருட்கள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டன. கடுமையான ஆலகால விஷமும் கூட வெளிப்பட்டது.

தேவர்கள் மேல் கருணைகொண்டு அந்தக் கொடிய விஷத்தைத் தாம் அருந்தினார் சிவபெருமான். அந்த விஷம் தன் கணவரை பாதிக்காமல் இருக்க வேண்டுமே எனப் பதைபதைப்போடு கணவரின் கழுத்தைப் பிடித்தாள் பார்வதி. விஷம் கழுத்திற்குக் கீழ் இறங்காது கழுத்திலேயே நின்றதால், விஷத்தை அருந்திய சிவபெருமான் நஞ்சுண்ட கண்டன் ஆனார்.

ஐராவதம் என்ற வெள்ளை யானை, உச்சைச்வரஸ் என்ற உயரிய குதிரை, கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் என்றிப்படி அநேகப் பொருட்கள் பாற்கடலில் இருந்து உதித்தன.

அதே பாற்கடலில் இருந்து கோடி நிலவுகளைச் சேர்த்துச் செய்தாற்போன்று லட்சுமி தேவி தோன்றினாள்.

அவள் பேரழகைக் கண்டு வியந்தது தேவர் உலகம். தேவர்கள் எல்லோருமே லட்சுமி தேவியை மணம் புரிந்துகொள்ள ஆசை கொண்டார்கள். ஆனால் பெண்ணின் விருப்பப்படி அல்லவா மணம் நிகழவேண்டும்?

எனவே அவள் கையில் சுயம்வர மாலை கொடுக்கப்பட்டது. அவள் தான் விரும்பிய மணாளனைத் தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

கையில் பூமாலையோடு நாணத்துடன் நடந்து சென்ற லட்சுமி தேவி, அந்த மாலையைத் தான் விரும்பிய திருமாலின் கழுத்தில் அணிவித்தாள். அவள் காதலை ஏற்றுக்கொண்ட திருமால் அவளைத் தன் இதயத்தில் ஏற்றுப் போற்றினார்.

கணவர் தம் மனைவியை மேலோட்டமாக நேசித்தால் போதாது, அவளுக்குத் தம் இதயத்தில் இடம்கொடுத்துப் போற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் கதை இது.

லட்சுமி கல்யாணம் நிகழ்ந்த நன்னாள்தான் தீபாவளி என்கிறது விஷ்ணு புராணக் கதை. எனவே தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்யும் வழக்கமும் இருக்கிறது.

* சிவ புராணத்திலும் தீபாவளி பற்றிய குறிப்புண்டு. பராசக்தி இருபத்தோரு நாள் கேதாரகவுரி விரதம் இருக்கிறாள். அந்தக் கடுமையான விரதம் நிறைவுற்றதும் பரமசிவன் மகிழ்ச்சி அடைகிறார். சக்தியைத் தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வர வடிவம் கொள்கிறார்.

திருமால் தன் மனைவி லட்சுமியை இதயத்தில் ஏற்ற நாளைப் போலவே சிவன் தன் மனைவி பார்வதியை உடலில் ஒரு பாதியாக ஏற்ற நாளும் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

* சீக்கியர்கள் பொற்கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நாளை தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தைச் சமணர்கள் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

புத்த மதத்திலும் தீபாவளிக் கொண்டாட்டம் உண்டு. அரச வாழ்வைத் துறந்து போதி மரத்தடியில் தவம் செய்து ஞானம்பெற்றார் புத்தர்.

திருப்பூர் கிருஷ்ணன்

தம் தந்தையும் மன்னருமான சுத்தோதனர் அழைப்பின்பேரில் மாபெரும் புனிதத் துறவியாக மறுபடியும் கபிலவஸ்து என்ற தாம் வசித்த பழைய நகருக்கு வருகை புரிந்தார் புத்தர். இப்போது அவர் மன்னரல்ல. ஆனால் உலகம் புகழும் ஒப்பற்ற துறவி.

தங்கள் மன்னர் புத்தராக மாறி தங்கள் ஊருக்கு வருகைதந்தபோது மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அவர்கள் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி அவரை வரவேற்றார்கள்.

விளக்கில்லாத ஏழைகளுக்கெல்லாம் செல்வந்தர்கள் விளக்குகளைத் தானம் செய்து அவர்களை விளக்கேற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இந்த நன்நாளை தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். விளக்குகளைத் தானம் கொடுத்ததை நினைவுகூரும் வகையில் இந்நாளை அவர்கள் தீபதானத் திருநாள் என அழைக்கிறார்கள்.

* தீபாவளிக்கு புத்தாடை வாங்கி அணியும் வழக்கமிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் புத்தாடை வாங்கி அணிந்தால் அது பொறாமை உணர்வு தோன்ற வழிவகுக்கலாம். ஆனால் தீபாவளி அன்று புத்தாடை அணியும்போது எல்லோருமே புத்தாடை அணிவதால் பொறாமைக்கு வழியில்லை.

* காசியில் ஓடும் கங்கா மாதா, தீபாவளியன்று மட்டும் பாரத தேசத்தில் உள்ள ஆறு, குளம், கிணறு முதலிய எல்லா நீர் நிலைகளிலும் உறைவதாக ஐதீகம். அதனால்தான் தீபாவளியன்று நாம் நம் இல்லத்தில் நீராடினாலும் கூட, 'கங்கா குளியல் ஆயிற்றா?' என விசாரிக்கும் மரபு இருக்கிறது.

தீபாவளியன்று கங்கை நீரில் நீராடுகிறோம் என்ற உணர்வோடு நீராடினால் அந்த நீர் நம் பாவங்கள் அனைத்தையும் போக்கும். நீராடும்போது அத்தகைய உணர்வோடு நீராட வேண்டும் என்பது முக்கியம்.

நம்பிக்கைதான் நம் ஆன்மிகத்தின் ஆதாரம். ஆன்மிகம் என்பதே உளவியல் சார்ந்த விஞ்ஞானம்தான்.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News

பயமே ஜெயம்!