சிறப்புக் கட்டுரைகள்

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என நிரூபித்த ஜகதீஷ் சந்திரபோஸ்

Published On 2024-09-25 08:52 GMT   |   Update On 2024-09-25 08:52 GMT
  • மிகுந்த தேசப்பற்றுடன் வளர்ந்தார்.
  • ரவீந்திர நாத் தாகூர் ஜகதீஷ் சந்திர போஸை மிகவும் போற்றினார்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்த ஒருவர் யார்? மார்கோனி வானொலியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அதைக் கண்டுபிடித்தவர் யார்? அவர் தான் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்.


பிறப்பும் இளமையும்:

இன்றைய பங்களாதேஷில் இருக்கும் டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் ஜகதீஷ் சந்திர போஸ் 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி பிறந்தார்.

தந்தையார் பகவான் சந்திர போஸ் பிரிட்டிஷ் இந்தியாவில் அரசாங்க உயர் அதிகாரியாகப் பணி புரிந்தார். ஆனால் தேசப்பற்று மிகுந்தவர். தனது மகனை சாதாரண ஏழை எளிய மக்கள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்தார்.

தந்தையின் வழிகாட்டுதலுக்கு இணங்க அனைவருடனும் எளிமையாகப் பழகிய ஜகதீஷ், படிப்பில் சூரனாக விளங்கினார். மிகுந்த தேசப்பற்றுடன் வளர்ந்தார். போஸின் தாயாரோ இந்தியப் பெண்மணிக்குரிய இலக்கணத்துடன் வாழ்ந்தவர். தன் மகனுக்கு நல்ல நற்பண்புகளைக் கற்பித்தார்.

பள்ளிப்படிப்பு:

ஆரம்பக் கல்வியை தூய சேவியர் உயர் நிலைப்பள்ளியில் முடித்துக் கொண்ட ஜகதீஷ் கல்கத்தா சென்று கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தாவில் ஒரு மிஷனரி பள்ளியில் அவர் சேர்ந்து படித்த போது அங்கிருந்த ஆங்கில மற்றும் ஆங்கிலோ இந்திய மாணவர்கள் அவரது எளிமையையும் நாட்டுப்புற பின்னணியையும் கண்டு கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அந்த மாணவர்களுள் குத்துச் சண்டை தெரிந்த ஒருவன் அடிக்கடி அவரைக் குத்தி வம்புக்கு இழுப்பது வழக்கம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய போஸ் ஒரு நாள் அவன் சண்டைக்கு வந்த போது அவனை அடித்து நொறுக்கி விட்டார்.

அன்றிலிருந்து அவர் மதிப்பு பள்ளியில் உயர்ந்தது. கல்கத்தாவில் 19-ம் வயதிலேயே பட்டத்தைப் பெற்ற பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

கல்லூரியில் ஆசிரியர்:

லண்டனில் தன் மேல் படிப்பை முடித்து விட்டு கல்கத்தாவிற்குத் திரும்பி வந்த போஸ் 1885-ம் ஆண்டு பிரஸிடென்ஸி காலேஜில் பேராசிரியராகப் பணி புரியச் சேர்ந்தார். ஆனால் அவரது சம்பளமோ மற்ற ஐரோப்பிய பேராசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்காக நிர்ணயிக்கப்பட்டது.

அத்தோடு புதியவர் என்பதால் அந்த சம்பளத்திலிருந்தும் இன்னும் கொஞ்சம் குறைக்கப்பட்டது. இதனால் வெகுண்ட போஸ் அந்த சம்பளத்தை ஏற்கவில்லை. ஆனாலும் பணியை விடாது தொடர்ந்து செய்து வந்தார்.

மாதாமாதம் சம்பளம் வாங்காமல் அவர் பணி புரிந்தது மூன்று வருடம் வரை தொடர்ந்தது. இறுதியில் தங்கள் தவறை உணர்ந்த நிர்வாகத்தினர் ஒரு விசேஷ ஆர்டரை மாண்புமிகு ஹிஸ் மெஜஸ்டிக் அரசின் வாயிலாகப் பிறப்பித்தனர். இதன் மூலம் மூன்று ஆண்டுக்கான முழு சம்பளத்தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.

கல்லூரியில் வேலை பார்க்கும் போதே பல்வேறு துறைகளிலும் தன் ஆராய்ச்சியை அவர் தொடங்கலானார்.

தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி:

தாவரங்கள் மிருகங்களைப் போலவே வலியை உணரும் தன்மை படைத்தவை என்பது போஸின் முடிவு. பல்வேறு சோதனைகள் மூலமாக இதைக் கண்டறிந்த போஸ் உலகிற்கு இதைக் காண்பிக்கத் துடித்தார். தனது கண்டுபிடிப்பை உலகிற்கு நிரூபிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை நிரூபிக்கத் துடித்த பிரிட்டிஷார் அவரை அங்கீகரிக்கவே இல்லை என்பது ஒரு புறமிருக்க அவரை அவமானப்படுத்தினர்; தொல்லை கொடுத்தனர்.

சகோதரி நிவேதிதா தேவியின் உதவி:

இதிலிருந்தெல்லாம் அவர் மீண்டு வர உத்வேகமூட்டியவர் சகோதரி நிவேதிதை என்பது பலருக்கும் தெரியாது.

ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை நிவேதிதா தேவி ஆரம்பத்திலேயே நன்கு உணர்ந்து கொண்டார்.

ஆயிரத்தி எண்ணூற்றுத் தொண்ணூறுகளிலேயே ஜகதீஷ் சந்திர போஸ் ரேடியோ டிரான்ஸ்மிஷன் பற்றிய அரிய கண்டுபிடிப்பைக் கண்டார். அத்துடன் தாவரங்கள் வலியை உணரும் சக்தி கொண்டவை என்று அவர் கூறிய போது யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை.

ஆனால் நிவேதிதை அவரிடமிருந்த அபாரமான அறிவியல் அறிவை நன்கு கண்டு கொண்டு அவரை ஊக்குவித்ததோடு, அவருக்கு பண உதவியும் தங்க இடமும் கூடத் தந்தார். 1899-ம் ஆண்டில் பாரிஸில் விவேகானந்தரும் நிவேதிதையும் இருந்த போது ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களைச் சந்தித்தார்.

போஸும் அவரது மனைவி அபலாவும் விம்பிள்டனில் இருந்த நிவேதிதையின் வீட்டில் 1900ஆம் ஆண்டு தங்கி இருந்தனர்; திடீரென்று அங்கு போஸ் நோய்வாய்ப்படவே நிவேதிதையின் தாயார் மேரி நோபிள் தான் அவருக்குத் தேவையான உதவிகளை ஒரு மாத காலம் அவர் நோயிலிருந்து குணமடையும் வரை செய்தார்.

இங்கிலாந்தில் இந்தியர்களை மதிக்காத ஒரு பெரும் ராட்சச பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் மோத வேண்டி இருப்பதை உணர்ந்த போஸ் மிகவும் மனம் நொந்து போனார்.

இப்படி மனம் நொந்திருந்த போஸின் மன நிலையை நன்கு அறிந்து கொண்டு நிவேதிதை, ஆய்வு லாபரட்டரியை அமைக்க அவருக்கு உதவி செய்தார். பிரபல வயலின் மேதை ஓல் புல் -இன் மனைவியும் விவேகானந்தரின் சிஷ்யையுமான சாரா சாப்மன் புல் தந்த நன்கொடை மூலம் இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டது.

தாகூருக்கு கடிதம்:

ரவீந்திர நாத் தாகூர் ஜகதீஷ் சந்திர போஸை மிகவும் போற்றினார். லண்டனிலிருந்து 1900ஆம் ஆண்டு லண்டனிலிருந்து போஸ் தனது மன வேதனையை ரவீந்திர நாத் தாகூருக்கு ஒரு கடிதம் மூலமாகத் தெரிவித்தார், இப்படி: "நீங்கள் நான் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களை அறிய மாட்டீர்கள்.

உங்களால் கற்பனையே செய்ய முடியாது. 'தாவர உணர்வு' பற்றிய எனது கட்டுரையை சென்ற மே மாதம் ராயல் சொஸைடியில் வெளியிடப்படுவதை வாலர் மற்றும் சாண்டர்ஸன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் வாலர் அதைத் தனது பெயரில் நவம்பர் மாதம் வெளியிட்டுக் கொண்டார்.

எனக்கு இத்தன நாள் வரை அது தெரியாமலேயே இருந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். பாரதபூமியின் தூசியைத் தொட்டு வாழ்க்கையின் உற்சாகத்தை மீண்டும் பெற இப்போது இந்தியா வர விரும்புகிறேன்."


க்ரஸ்கோகிராப் கருவி:

தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்பதைக் காட்ட க்ரஸ்கோகிராப் (Crescograph) என்ற கருவியை அவர் வடிவமைத்தார். தாவரத்தின் வளர்ச்சியை மிக நுட்பமாக, நுணுக்கமாக இது காட்டும்.

அதாவது ஒரு லட்சத்தில் ஒரு பங்கு என்ற அளவிற்கு மிக நுண்ணிய அளவில் தாவரத்தின் வளர்ச்சியை இது காட்டியதால் உலகமே வியந்து அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. அவரது கருவி தாவரம் அசையும் போது அதுவும் அசைந்து துல்லியமாக தாவர இயக்கத்தைக் காட்டியது.

இந்திய துணைக்கண்டத்திலிருந்து விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக முதன் முதலாக ஒரு பேடண்டைப் பெற்றவர் அவரே. பிரபல விஞ்ஞானிகளான டெஸ்லா, மார்கோனி, போபாவ் ஆகியோர்களுக்குச் சமமாக இந்த சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார்.

எவ்வளவோ பேர் தடுத்தும் கூட அவர் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1920இல் ராயல் சொஸைடிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் அறிவியலில் கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

சதியை முறித்த போஸ்:

ஒரு முறை 'லெக்சர் டூர்' ஒன்றுக்காக அவர் இங்கிலாந்து சென்றிருந்தார். அவரது கண்டுபிடிப்புகளை நேரடியாகக் காண்பித்து விளக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாவரங்களைப் பிடுங்கும் போது வலியால் அவை துடிக்கின்றன என்பதையும் விஷம் கொடுக்கப்பட்டால் அவை துடிதுடித்து இறக்கின்றன என்பதையும் அவர் நேரில் காட்ட விழைந்தார்.

ஏராளமான விஞ்ஞானிகளும் பெண்கள் பலர் உள்ளிட்ட பிரபலமானவர்களும் குழுமி விட்டனர். போஸ் விஷம் அடங்கிய ஊசியை எடுத்து தாவரத்தின் மீது இஞ்ஜெக்ட் செய்தார். தாவரம் துடிதுடிக்க வேண்டும். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. இதைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

போஸோ தன் நிதானத்தை இழக்கவில்லை. யோசிக்க ஆரம்பித்தார். இந்த விஷம் தாவரத்தை ஒன்றும் செய்யவில்லை எனில் என்னையும் ஒன்றும் செய்யாது என்ற முடிவுக்கு வந்த அவர் அதே விஷத்தைத் தன் மீது ஏற்றுமாறு கூறினார்.

இஞ்செக்ஷன் ஊசி எடுக்கப்பட்ட போது அங்கு வந்திருந்தோரில் ஒருவன் தான் விஷத்திற்குப் பதில் அதே நிறத்தில் உள்ள சாயத் தண்ணிரை வைத்து விட்டதாக ஒப்புக் கொண்டான். போஸ் நிஜமான விஷத்தை எடுத்து தாவரத்தின் மீது செலுத்த அது துடி துடித்து இறந்தது. அனைவரும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

தன்னையே சோதனைக்குட்படுத்திக் கொள்ளவும் தயங்காத மேதை ஜகதீஷ் சந்திர போஸ்!


பெர்னார்ட்ஷாவின் ஆச்சரியம்!

எதையும் நேரில் பார்க்க ஆசைப்படும் பெர்னார்ட் ஷா ஒரு முறை அவரது சோதனையைப் பார்க்க வந்தார். ப்ரோமைட் கரைசலில் முட்டைகோஸ் இலையைப் போடும் போது அந்த விஷக் கரைசலில் அது துடிதுடிக்க ஆரம்பித்ததைப் பார்த்த பெர்னார்ட் ஷா அந்த பயங்கரத்தைப் பார்க்க முடியாமல் வேதனைப் பட்டார்; சோதனையை எண்ணி ஆச்சரியப்பட்டார்.

அறிவியல் புனைகதைகளில் ஆர்வம்:

மிகப் பெரிய விஞ்ஞானியாக இருந்த போதிலும் கூட ஸயின்ஸ் ஃபிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைகதைகளை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.

வங்காள மொழியில் அவர் எழுதிய 'போலடாக் தூஃபான்' என்ற அவரது பிரபலமான கதை எப்படி ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலைக்குத் தடவிக் கொள்ளும் எண்ணெய் ஒரு சூறாவளியைத் தடுத்து நிறுத்தியது என்பதை சுவைபடச் சொல்கிறது.

எண்ணெயானது புறப்பரப்பு விசையை (Surface tension) மாற்றி நீரைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பது தான் கதையின் அடிப்படையான கரு. 'நிருத்தேஷர் கஹானி' என்ற அவரது நாவல் தான் முதன் முதலாக வங்க மொழியில் எழுதப்பட்ட ஸயின்ஸ் ஃபிக்ஷன் நாவல்!

குடும்பம்:

1887-ல் அவர் அபலா (பிறப்பு 8-8-1865 மறைவு 25-4-1951) என்பவரை மணந்தார். அபலா போஸ் சிறந்த சமூக சேவகி. பெண் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்.

மறைவு: 1937-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி போஸ் மறைந்தார்.

அனைத்து உயிர்களையும் நேசியுங்கள்:

தன் வாழ்நாள் முழுவதும் பல அரிய கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே வந்தார் போஸ். அவற்றில் சில..

மனமே ஒரு சோதனைச்சாலை. அதில் மறைத்திருக்கும் மாயையை விலக்கிவிட்டால் சத்தியத்தின் விதிகளைக் காணலாம்.

எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே. எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்திய விஞ்ஞானி!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு; அனைத்து உயிர்களையும் நேசியுங்கள் என்ற பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்தியவர் என்ற அளவில் அபூர்வமான உன்னத அறிவியல் அறிஞராகிறார் போஸ்!

Tags:    

Similar News