சிறப்புக் கட்டுரைகள்

குலசை முத்தாரம்மன் திருவிழா!

Published On 2024-10-10 05:56 GMT   |   Update On 2024-10-10 05:56 GMT
  • குலசேகரபாண்டிய மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்பட்டது.
  • முத்து+ஆறும்+அம்மன் என்பதால் முத்தாரம்மன் என ஆயிற்று.

நவராத்திரி விழாவில் தசரா கொண்டாட்டங்கள் என்றதும் நம்மில் அனைவரும் பட்டென்று நினைப்பது இந்தியாவில் நான்கு இடங்களில் நடைபெறும் தசரா விழா கொண்டாட்டங்களை தான்.

கர்நாடக மாநிலத்தில் மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள், யானை அணிவகுப்புகள்...

குஜராத் மாநிலத்தில் தாண்டியா நடனத்துடன் தசரா கொண்டாட்டங்கள்...

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் துர்க்கா தேவி பூஜை.


தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் வேடம் புனைந்து கடற்கரையில் முத்தாரம்மனோடு மகிஷாசுர வதத்திற்காக செல்லும் ஊர்வலம்.

இந்த நான்கு தசாரா கொண்டாட்டங்கள் இந்தியாவில் புகழ் பெற்ற நவராத்திரி விழாக்கால கொண்டாட்டங்கள் என அழைக்கபடுகிறது.

இந்த நான்கில் நம்மூர் தாய் குலசை முத்தாரம்மன் தசரா கொண்டாட்டத்தை பற்றி நான் திரட்டிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு...

சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் தென் மறைநாடு, வீர வளநாடு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.

கொற்கை என அழைக்கப்பட்ட பாண்டியர்களின் துறைமுக நகரமே இன்றைய குலசேகரபட்டினம் ஆகும்.

குலசேகரபட்டினம் ஊர் கடல் பகுதி. இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு ஆழமான கடற்பரப்பை கொண்டது.

பாண்டிய மன்னன் சடைய வர்ம சுந்தரபாண்டியனின் மகன் மாற வர்ம குலசேகர பாண்டியன் கொற்கை பகுதியை கி.பி.1268 ம் ஆண்டு முதல் கி.பி 1311 வரை சுமார் 43 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

1274 -ம் ஆண்டு கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுக்க செல்லும் முன் தன் குல தெய்வமான முத்தாரம்மனை வேண்டி கொண்டான்.

மன்னன் கனவில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தோன்றி போரில் வெற்றி கிட்டும் என அருளாசி வழங்கினாள்.

சேரனோடு நடந்த போரில் வெற்றி பெற்று கொல்லம் பகுதியை கைப்பற்றிய குலசேகரப்பாண்டியன் "கொல்லம் கொண்ட பாண்டியன்" என்ற அடைமொழியை பெற்றான்.

கி.பி. 1279 ஆம் ஆண்டு நடந்த மற்றொரு போரில் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழன் மற்றும் போசளர் இன தலைவனையும் ஒரே போரில் தோற்கடித்தான் மன்னன் குலசேகர பாண்டியன்.

பின் 1284 ல் இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று நிறைய செல்வங்களோடு வந்தான் மன்னன் குலசேகரன்.

வெற்றி மேல் வெற்றியை முத்தாரம்மனின் அருளால் பெற்ற குலசேகர பாண்டிய மன்னன் முத்தாரம்மனின் உத்தரவுப்படி கொற்கை துறைமுகத்தை சீர்படுத்தி, அம்மனின் ஆலயத்தையும் புனரமைத்து ஊரையும் விரிவு படுத்தினான்.

அன்று முதல் இந்த ஊரின் பெயர் குலசேகரபாண்டிய மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்பட்டது.


குலசேகர பட்டினத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் முத்தாரம்மனின் பெயர் காரணத்தை சொல்லுடேய் சில் வண்டு என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.

முன்னொரு காலத்தில் சக்தி முனி என்ற முனிவர் பூலோகத்தில் இருந்து அஷ்டமா சித்திகள் பெற வேண்டி யாகம் வளர்த்தார்.

யாகத்தீயின் வெம்மை விண்ணுலகம் வரை பரவுகிறது. சிவனாரின் உத்தரவின் படி சக்தி முனிவன் வளர்த்த யாகத்தை நிறைவு செய்ய சென்ற பார்வதி தேவியின் நெற்றியில் வேள்வி தீ வெக்கையால் முத்து போன்ற வியர்வை துளிகள் அரும்புகின்றன.

நெற்றியில் அரும்பிய வியர்வை துளிகளை யாக குண்டத்தில் வீசி எறிகிறாள் அன்னை பார்வதி தேவி.

சிவனின் வியர்வையில் தோன்றிய சிவ அம்சமான வியர்வை புத்திரனை போல் பார்வதிதேவி வேள்வி குண்டத்தில் வீசி எறிந்த வியர்வை துளிகளில் இருந்து சக்தியின் அம்சமாக அஷ்டமா சக்திகள் பிறக்கின்றனர்.

முத்தாரம்மன்,வடபத்திரகாளியம்மன்,முப்பிடாரியம்மன், பொன்னியம்மன், உலகளந்தாள், அரியநாச்சி, செண்பகவல்லி, சந்தனமாரி என்ற பெயர் கொண்ட அஷ்ட காளிகளில் (பேச்சு வழக்கில், அட்டகாளி) மூத்தவள் முத்தாரம்மன் என்பதால் மூத்தமாரி (முத்துமாரி) என அன்னையை அழைப்பதாகவும் பக்தர்கள் கூறுவர்.

எத்தனை பெயர்கள் இருப்பினும் அத்தனை பெயர்களுக்கும் அன்னையானவள் அர்த்தம் கற்பிப்பவளாகவே இருக்கிறாள் என்பது அம்பிகையின் பெரும் சிறப்பு தானே.

தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து அதை ஆரங்கள் (மாலை) ஆக்கி பாண்டிய மன்னர்கள் தங்கள் அன்னைக்கு அணிவித்து அழகு பார்த்ததால் அம்பிகையானவள் முத்தாரம்மன் (முத்துக்களை ஆரமாக அணிபவள்) என்று பெயர் பெற்றதாக சொல்வார்கள்.

முத்துகள் எனும் அம்மை நோய் அன்னையை வழிபட்டால் ஆறி விடும். உடலில் ஏற்படும் அம்மை முத்துக்கள் குணமாக அன்னையை வேண்டி வழிபட்டால் உடனே ஆற்றுபவள் என்பதால் முத்துகளை ஆற்றும் அம்மன்.

முத்து+ஆறும்+அம்மன் என்பதால் முத்தாரம்மன் என அம்மன் பெயர் பெற்றதாக அம்பாளின் பெயருக்கான காரணத்தை கூறுவர்.

வேள்வியில் தனது அம்சமாக பிறந்த அஷ்ட காளிகளை தன்னுடன் அழைத்து கொண்டு கயிலைக்கு வந்தாள் அன்னையான பார்வதி தேவி.

மகாதேவரான சிவனாரை வணங்கி தொழுது நின்ற அஷ்ட மாகாளிகள் அனைவரும் சிவனிடம் தங்களை பிறவி செய்த காரணத்தை வினவினர்.

மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் கொடிய மகிஷாசுரனை வதம் செய்யவே பார்வதியின் அம்சமாய் உங்களை பிறவி செய்தேன் என சிவன் பதிலுரைத்தார்.

சிவனாரிடம் வேண்டிய வரங்களை பெற்று அஷ்டமாகாளிகள் எட்டு பேரும் மகிஷனோடு போர் புரிய வருகின்றனர்.

அஷ்ட மாகாளிகள் மற்றும் மகிஷாசுரன் இடையே துவந்த யுத்தம் நடக்கிறது.

சிவனாரிடம் பெற்ற வரத்தின் மகிமையால் மகிஷன் அஷ்ட காளிகளை எதிர்த்து மூர்க்கமாய் போரிடுகிறான்.

எட்டு பேரும் தனி தனியாக நிற்பதை விட ஒரு சேர நின்றால் தங்களின் அஷ்ட மா சித்திகளுக்கு வலிமை அதிகம் என்பதை அஷ்ட காளிகள் உணர்கின்றனர்.

அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு தேவியாய் இணைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர்.

உயிர் பிரியும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன் தன் தவறை உணர்கிறான்.

அன்னை சாமுண்டீஸ்வரி தாயே! என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை அசுர குலத்தில் ராஜாவாக இருந்தேன்.


என்னை மன்னித்து மறு பிறப்பு தந்து வனத்தில் வாழும் உயிரினங்களின் ராஜாவான சிங்கமாக என்னை பிறவி செய்து தாயே! உன்னை சுமக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அன்னையிடம் வேண்டினான் மகிஷன்.

ஆங்கார ரூபிணியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த சொரூபிணியாக மாறி மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக பிறவி செய்து மகிஷனை தனது வாகனமாக்கி "சிம வாகிணி" என பெயர் பெற்றாள்.

எல்லாம் சரிடேய்!! சில் வண்டு...

குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசாரா கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கடற்கரையில் நடைபெறும் மகிஷாசுர சம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பல்வேறு வேஷம் போட்டு அம்மனோடு செல்வதற்கான காரணம் என்னன்னு கேக்குறீங்க .. சரி தானே.

மகிஷாசுரனோடு அன்னை முத்தாரம்மன் யுத்தம் நிகழ்த்திய போது அன்னைக்கு துணையாக நிறைய பரிவார தெய்வங்களும் பூதப்படைகளும் கலந்து கொண்டன.

அன்னைக்கு துணையாக நாங்களும் இருக்கிறோம் என அன்று பரிவார தெய்வங்கள், பூதப்படையினர் கலந்து கொண்டதை நினைவுபடுத்தும் வகையில் பக்தர்கள் விரதமிருந்து வேடம் அணிந்து மகிஷாசுர சம்ஹாரத்தின் போது அன்னையின் படையினராக கலந்து கொள்கின்றனர்.

பக்குவமான ஆன்மீக மன நிலைக்கு மனிதனை செல்ல விடாமல் தடுப்பது அவனின் அகந்தையும், ஆணவமும்.

விரதமும், பணிவும் மனிதனையும், மனித மனத்தையும் பக்குவபடுத்தும்.

இவ்வாறு வேடம் அணியும் பக்தர்கள் ஜாதி, மதம், அந்தஸ்து பாராமல் அனைவரின் வீடுகளுக்கு சென்று தனது ஆணவம், அகந்தையை விட்டு பணிவோடு முத்தாரம்மைக்கு காணிக்கை தாங்க.. என கேட்பார்கள்.

அவ்வாறு சேகரிக்கும் காணிக்கையை அன்னையிடம் சமர்பித்து தாயே ! எனது அகந்தையை விட்டு விட்டேன். உன்னோடு என்னையும் சேர்த்துக் கொள் அம்மா! என வேண்டிக்கொள்வதன் அர்த்தமாக வேடம் அணிந்த பக்தர்கள் அன்னையோடு அசுர சம்ஹாரத்திற்கு செல்லும் நிகழ்வு கருதப்படுகிறது.

அகந்தையை விட்டு விரதம் இருந்து வேடம் அணிந்து வரும் தனது பக்தர்களின் வேண்டுதல்களை அடுத்த தசாரா விழா கொண்டாட்டங்களுக்கு முன்பே அன்னை நிறைவேற்றி விடுவதாக ஐதீகம்.

வேடம் அணிந்த பக்தர்களின் வேண்டுதலை மட்டுமல்ல வேடம் அணியாமல் உண்மையான பக்தியோடு தன்னை நோக்கி கை கூப்பி அம்மா.. முத்தாரம்மா.. தாயே என்னை காப்பாற்று! என வேண்டுவோர்களின் வேதனைகளையும் தீர்த்து வைக்கிறாள் திரிபுரம் எனும் முப்புரத்தில் குடியிருந்த முப்புரநாயகியாகிய முத்தாரம்மன்.

இந்த நவராத்திரி விழா காலங்களில் மட்டும் அல்லாது அன்னையின் அருள் என்றென்றும் நம்மை காக்கட்டும்... ஓம் சக்தி...

தொடர்புக்கு-isuresh669@gmail.com

Tags:    

Similar News