சிறப்புக் கட்டுரைகள்

உன்னுள் ஓர் ஒளி சக்தி- நீம் கரோலி பாபா!

Published On 2024-11-25 08:39 GMT   |   Update On 2024-11-25 08:39 GMT
  • ராமாயணத்தினை படிக்கும்போது பல நிகழ்வுகளை பாபா நேரில் பார்த்ததை சொல்வார்.
  • ராபர்ட் ஆல்பர்ட் என்ற விஞ்ஞானி பாபாவின் தீவிர பக்தராகி பாபா ராமாஸ் என்று அழைக்கப்பட்டார்.

நம் இந்தியாவுக்கு உரித்தான பல பெருமைகளில் ஒன்று எண்ணற்ற சித்தர்களும், ஞானிகளும் இங்கே தோன்றியுள்ளனர் என்பதுதான். நம் பக்கத்தில் நாம் சித்தர்கள் என்கிறோம். வட இந்தியாவில் பாபாஜி, மகராஜ் என்கின்றனர். ஸ்ரீ சாய் பாபா, சாய் மகராஜ் ஜி என்பதெல்லாம் வட இந்தியாவில் அவர்கள் முறைப்படி அழைத்து வந்த திருப்பெயர்கள்தான்.

அந்த வகையில் 'நீம் கரோலி பாபா' வைப் பற்றி இன்று பார்ப்போமா?

எளிய தோற்றத்துடன் ஒரு கட்டம் போட்ட போர்வையுடன் புகைப்படங்களில் இவரை அநேகர் தரிசனம் செய்திருப்பார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 1900-ல் பிரோசாபாத் என்ற இடத்தில் பிறந்தார். இயற்பெயர் லஷ்மண் நாராயண் ஷர்மா. மிக வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதில் அவருக்கு திருமணம் செய்கின்றனர். அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தந்தையோ தேடி அலைந்து அழைத்து வந்தார். பின் அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் பிறந்தனர்.

மீண்டும் 1958-ம் ஆண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறினார். டிக்கெட் இல்லாமல் ரெயிலில் அமர்ந்தார். டிக்கெட் இல்லாத அவரை டிக்கெட் பரிசோதகர் வழியில் இறக்கி விட்டார். அவர் இறங்கிய இடம் 'நீம் கரோலி' என்ற கிராமம். பாபாவோ அமைதியாய் இறங்கி ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார். ஏனோ ரெயிலினை மறுபடியும் ஓட்ட முடியவில்லை. எல்லா முயற்சி செய்தும் ரெயில் நகரவில்லை.

அனைவரும் இவரை இறக்கி விட்டதாலேயே ரெயில் நகரவில்லை என்று கூற டிக்கெட் பரிசோதகர் பாபாவினை ஒரு மகான் என்று உணர்ந்து மீண்டும் ரெயிலில் அமருமாறு பாபாவிடம் பணிவோடு வேண்டினார். பாபா இரண்டு நிபந்தனைகளை விதித்தார். ஒன்று நீம் கரோலி கிராமத்தில் ரெயில் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும். ஏனெனில் அக்கிராம மக்கள் ரெயில் நிலையத்திற்காக வெகு தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்தது. இரண்டாவது நிபந்தனை, துறவிகளை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதாகும். பிறகு பாபா ரெயிலில் அமர ரெயில் இயல்பாய் ஓடியது. அன்று முதல் இவர் "நீம் கரோலி பாபா" என்று அழைக்கப்பட்டார்.

வட இந்தியா முழுவதும் சென்றார். 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டன. அவர் தங்கியிருந்த கடைசி பத்தாண்டுகள் கைஞ்சிதாம் ஆசிரமம் ஆகியது. 1964-ல் அனுமன்ஜி கோவிலும் கட்டப்பட்டது. இந்த ஆசிரமமும் இக்கோவிலும் உலகெங்கிலும் உள்ள ஆன்மீக நாட்டம் உள்ள மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கின்றது.

நீம் கரோலி பாபா 1973-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு தன் பூத உடலை விட்டு விட்டார். ஆனால் அவர் உலகெங்கும் பரவி உள்ளார்.

'கடவுள் பக்தியே அவரது உயர்ந்த தத்துவம்'

பல பெயர்களால் பல பகுதிகளில் அவர் அறியப்பட்டாலும் அவர் கூறியவாறே அவர் 'யாருமில்லை' என்பது போல் எத்தனை சத்தம் இருந்தாலும் அவர் ஆழ்ந்த தியானத்தில் வேறொரு உலகில் இருப்பார். அதன் காரணமாகவே அவர் உடன் இருப்பவர்கள் ஒரு ஆனந்த மயமான அமைதியில் இருந்தனர். அங்கு வந்து செல்பவர்களுக்கு இன்றும் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுகின்றது.

'ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி' 1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் சக உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது. இவர் 'மிராக்கிள் பாபா' என்று அழைக்கப்படும் நீம் கரோலி பாபா பற்றி கேள்விபட்டு 1974-ம் ஆண்டு அவ ரது ஆசிரமம் வந்தார். 1973-ம் ஆண்டு பாபா மகா சமாதி அடைந்ததனை அறிந்து சற்று மனம் வேதனைப்பட்டாலும் அவர் அங்கே தங்கி மற்ற குருமார்களின் சீடர்களின் வழி காட்டுதல்படி பிரார்த்தனை மற்றும் தியான பயிற்சியில் ஈடுபட்டார்.

இதனால் அவர் மனதில் அமைதியும், தெளிவும் பிறந்தது. அவர் தனது வியாபாரத்தில் குழப்பமும், முன்னேற்றமும் இல்லாத நிலையில்தான் அங்கு வந்தார். பிறகு சில தினங்களில் ஆசிரமத்தினை விட்டு கிளம்பியபோது அவருக்கு ஒரு ஆப்பிள் பிரசாதமாக கொடுக்கப்பட்டது. ஆசிரமத்திற்கு வரும் அனைவருக்கும் ஆப்பிள்தான் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. பாபாவிற்கு ஆப்பிள் பிடிக்குமாம். இதனைக் கொண்டே ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஆப்பிள்' நிறுவனத்தினை தொடங்கினார்.

 

இதே போன்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர் பர்க் அவரது வியாபாரத்தில் சில பிரச்சினைகளால் கஷ்டப்பட்டபோது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சை சந்தித்துள்ளார். அவரது அறிவுரையின் பெயரில் இந்தியா வந்து நீம் கரோலி பாபாவின் ஆசிரமம் சென்று சில தினங்கள் தங்கி தியானம் செய்து சென்றார். அவர் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியும், மாற்றமும் ஏற்பட்டது. இதனை அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

 நீம் கரோலி பாபா தீவிர ஆஞ்சநேய பக்தர்

ராமாயணத்தினை படிக்கும்போது பல நிகழ்வுகளை பாபா நேரில் பார்த்ததை சொல்வார். நிறைய ஆஞ்சநேயரினைப்பற்றி குறிப்பிடுவார். அநேகர் இவரை ஆஞ்சநேயர் அவதாரமாகவே குறிப்பிடுகின்றனர்.

எந்நேரமும் 'ராம்... ராம்....' என்று சொல்லியபடியே இருப்பார்.

ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருப்பவர். ஒரு கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும், தான் இருக்கும் இடத்திலும் ஒரே நேரத்தில் இருந்தவர்.

ராபர்ட் ஆல்பர்ட் என்ற விஞ்ஞானி பாபாவின் தீவிர பக்தராகி பாபா ராமாஸ் என்று அழைக்கப்பட்டார்.

 

நீம் கரோலி பாபாவின் ஓர் ஆசிரமம் இமயமலை அருகில் உள்ள 'கைஞ்சி டாம்' என்பது. மற்றொரு ஆசிரமம் 'பிருந்தா வன்' இடத்தில் உள்ளது. செல்ல விரும்புபவர்கள் ஆசிரமத்தினை தொடர்பு கொண்டு சீதோஷண நிலை, இட வசதி இவைகளை அறிந்து செல்வது நல்லது.

ஆசிரம விதிமுறைகள்படி பொதுவில் வீடியோ உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அது மிகப்புனிதமான தியான இடம். சுற்றுலா தலம் அல்ல.

நீம் கரோலி பாபா தன் தியானத்தினை அதிக காலம் குஜராத்திலும் மேற்கொண்டவர். பிருந்தாவனத்தில் இவர் பெயரில் உருவாகிய கோவில்கள் ஏராளம். பிருந்தா வனத்தில் நீம் கரோலி பாபாவின் சமாதி கோவிலும் உள்ளது.

லேரி கிராண்ட் என்ற மருத்துவர் தன் மனைவியுடன் இந்தியா வருகிறார். மனைவி சொன்னதினாலே வருகிறார். இந்தியா வந்ததும் அவரது மனைவி இமயமலை சென்று நீம் கரோலி பாபாவினை தரிசிக்க வேண்டும் என்கிறார். இவர் விஞ்ஞானம் படித்தவர் அல்லவா? அவ்வளவு உயர்வான மகானா அவர்? அப்படியானால் இந்த இடத்தில் அவரால் வானவில்லை தோற்றுவிக்க முடியுமா? என தமாஷாக மனைவியிடம் வேண்டினார். சில நிமிடங்களில் அங்குள்ள ஏரி பகுதியின் மேல் ஒரு அழகான வானவில் தோன்றியது. விஞ்ஞானம் மெய்ஞானத்தினைக் கண்டு சற்று அரண்டு போனது எனலாம். இருவரும் 'கைஞ்சி டாம்' ஆசிரமம் சென்றனர்.

அங்கு பாபாவின் கால்கள் லேரி கிராண்ட் மேல்பட்டது. அவர் அப்போது அதனை பெறுதற்கரிய ஆசிர்வாதம் என்பதனை உணர்ந்திருக்க முடியாது. பாபா அவரைப் பார்த்து 'நீ துறவறம் மேற்கொள்ளாதே பல நோய்களை தடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடு' என்றார். அவரும் நாடு திரும்பி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல தொற்று நோய், பூஞ்சை இவற்றிற்கான இவரது மருந்து ஆராய்ச்சிகள் மனித சமுதாயத்திற்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம்.

11 வயதில் வீட்டை விட்டு சென்ற பாபா சுமார் 14 வருடங்கள் யாரும் அறியாமல் குஜராத் பகுதியில் தியானம், தவம் என இருந்தவர். அவரது அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் வீடு திரும்பினாலும் அவர் மனம் 'ராம்... ராம்...' என்றே சொல்லிக் கொண்டிருந்தது. பின்பு அவரது ஆன்மீக பாதை அவரைத் தேடி வந்து விட்டது.

அவரது 'ராம்... ராம்...' குரல் ஒலிப்பதிவினை கடும் சோதனைகளுக்குப் பிறகே அவரது பக்தர்களால் திரும்ப பெற முடிந்தது. அதனை நீங்கள் 'கூகுள்' மூலம் 'யூடியூப்'பில் கேட்கலாம்.

 

கமலி ஸ்ரீபால்

ரிச்சர்ட் ஆல்பர்ட் என்பவர் அமெரிக்காவில் மிக உயர்ந்த ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். சில போதைப் பொருட்களையும் பற்றி ஆராய்ச்சி செய்தவர். 1967-ம் ஆண்டு இந்தியா வந்த அவருக்கு நீம் கரோலி பாபாவுடன் ஏற்பட்ட அனுபவங்களால் தன்னை ஆன்மீக பாதையில் முழுமையாய் மாற்றிக் கொண்டவர். இவர் 'ராம தாஸ் பாபா' என்றே அறியப்படுகின்றார். அமெரிக்காவில் நீம் கரோலி பாபாவின் ஆசிரமத்தினை அமைத்தவர். இப்படி எண்ணற்ற நிகழ்வுகளை மேலும் விரிவாக கூறிக் கொண்டும், எழுதவும் செய்யலாம். மிக உயர் ஆத்மாக்கள் மக்களை நன்வழியில் திரும்பச் செய்பவர்களே.

'நீம் கரோலி பாபா' வினை மனதால் வழிபட்டாலும், அனுமான் சாலிஸ் படிக்கவோ, கேட்கவோ செய்வதும், ராம நாமத்தினை ஜபிப்பதும் இமயமலை ஆசிரமம் சென்று வருவதும் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன என்பது அனைவரின் ஒரு மித்த கருத்தாகவே உள்ளது.

Tags:    

Similar News