மீனா மலரும் நினைவுகள்... கமலின் சந்தேகத்தை தீர்த்த ரஜினி
- ரஜினி சார் அப்படி சொன்னதிலும் ஒரு அர்த்தம் உண்டு.
- சங்கவி தான் தனக்கு தெரியும் என்று அழைத்து சென்று டாலர் மாற்றி தந்தார்.
இந்த மீனா இருக்காங்களே... இன்னும் சின்ன பிள்ளை மாதிரிதான்... உங்களோடு ஒரு படம் நடிக்க முடியாமல் போனதை நினைத்து பட்டபாடு இருக்கே... அப்பப்பா... என்று ரஜினி சார் சொல்லவும் எதிரே இருந்த கமலின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தது.
அவர்கள் அருகே தான் நானும் அமர்ந்து இருந்தேன். இந்த உரையாடல் சிங்கப்பூர் ஓட்டலில் வைத்து நடந்தது. ரஜினி சார் அப்படி சொன்னதிலும் ஒரு அர்த்தம் உண்டு.
சிவாஜி சார், கமல் சார் காம்பினேசனில் உருவான 'தேவர் மகன்' படத்தில் நடிக்க எனக்குதான் முதலில் வாய்ப்பு வந்தது.
அந்த படத்துக்காக மேக்-அப்பெல்லாம் போட்டு இரண்டு காட்சிகளும் எடுத்தார்கள். ஆனால் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகும் ஒன்றிரண்டு முறை முயற்சித்தும் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது.
இருபெரும் நடிப்பு சக்கரவர்த்திகளோடு இணைந்து நடிக்க கிடைத்த அந்த வாய்ப்பை நான் வேண்டுமென்றே விடுவேனா? அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து இன்றும் வருத்தப்படுகிறேன்.
அதைதான் ரஜினி சாரிடம் பலமுறை 'கமல் சாரோடு நடிக்கும் வாய்ப்பு போச்சு சார் என்று கூறி வருதப்பட்டு புலம்பியிருக்கிறேன்.
அதைதான் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில் நினைவு படுத்தி கமல் மனதில் 'வேண்டுமென்றே தான் மீனா கால்ஷீட் தந்திருக்க மாட்டாரோ?' என்று லேசான தவறான புரிதல் இருந்திருக்கலாம். அதை தான் ரஜினி பேசி தீர்த்து வைத்தார்.
ரஜினி பேசியதை கேட்டதும் 'மீனா, அப்படியெல்லாம் நான் எதுவும் நினைக்கலீங்க...' என்று சாதாரணமாக சொன்னார் கமல் சாரும். ஒருவேளை லேசான சந்தேகம் கமல் மனதில் இருந்திருந்தாலும் அதை பக்குவமாக தீர்த்து வைத்து விட்டார் ரஜினி. பெரியவர்களும், அவர்களுடைய அனுபவமும் எப்போதுமே தனிதான் என்பதை புரிந்து கொண்டேன்.
நான் அடிக்கடி பேசியதை வைத்தே ஒரு வேளை கமல் மனதிலும் அப்படி ஒரு தவறான புரிதல் இருக்கலாமோ என்று நினைத்து அதையும் கிளியர் செய்துவிட்டார். அதுதான் பெரியவரின் அனுபவம்.
அதன்பிறகு பேச்சு திசை மாறியது. அது ரஜினி, கமல் முதல் சிம்பு வரை மொத்த சினிமா நட்சத்திரங்களும் சிங்கப்பூரில் ஒன்றாக திரண்டு இருந்த நேரம். நடிகர் சங்க நிதிக்காக சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு நடிகர் சங்க தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தார்கள். மொத்த நடிகர்-நடிகைகளும் வந்து விட்டார்கள். மூன்று பேரும் மும்மூர்த்திகள் போல் செயல்பட்டார்கள். குடும்ப திருவிழா போல் குதூகலமாக இருந்தது. நடிகைகள் எல்லோரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். எங்களை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே வெளியில் திரண்டு நிற்கும் கலை நிகழ்ச்சிக்கு புறப்படும் போது அந்த கூட்டத்தை சமாளித்து செல்வது எளிதானதல்ல.
அப்போது அந்த மும்மூர்த்திகளும் தான் பவுன்சர்கள் போல் எங்களை பாதுகாப்பார்கள். ம்ம்... சீக்கிரம் வாங்க.. வாங்க.. என்று விரட்டுவார்கள். எங்கள் அருகில் ஒருவரை கூட நெருங்க விடாமல் பஸ்சுக்குள் ஏற்றி விடுவார்கள். அதேபோல் தான் நிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும் அவர்கள் கண்பார்வைக்குள் எங்களை வைத்திருப்பார்கள்.
சங்கவி, ரம்பா, நான் மூவரும் தான் ஒரு கூட்டணி. ஷாப்பிங் செல்லும் போதும் பெரும்பாலும் ஒன்றாகவே செல்வோம். சங்கவியின் அம்மாவும், என் அம்மாவும் நெருங்கிய தோழிகள். எங்களைப் போல் அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்று வருவார்கள்.
ஒரு நாள் ஷாப்பிங் சென்ற போது என் கையில் இருந்த டாலர்கள் தீர்ந்து விட்டன. நம் நாட்டு ரூபாய் என்னிடம் இருந்தது. ஆனால் அதை டாலராக மாற்ற எங்கே செல்வது என்று தெரியவில்லை.
அப்போது சங்கவி தான் தனக்கு தெரியும் என்று அழைத்து சென்று டாலர் மாற்றி தந்தார். அது முதல் எங்கள் நட்பு மேலும் நெருக்கமானது.
பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஷாப்பிங் அனுபவமே தனி. நான் தோழிகளோடு சென்றாலும் சரி. தனியாக சென்றாலும் சரி கடைகளில் ஷூட்டிங்குக்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்ன புதிதாக வந்துள்ளன என்பதை தான் தேடுவேன்.
மேக்கப் சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் புதிதாக எது கண்ணில் பட்டாலும் உடனே வாங்கி விடுவேன்.
எங்கள் தேடல் இப்படியென்றால் எங்க அம்மா தேடல் வேறு வகையாக இருக்கும். அதாவது சமையல் செய்வதற்கு உதவும் பொருட்களை... அதாவது ஜூசர், காய்கறி நறுக்குவது என்று சமையறைக்கு தேவையான புது, புது மாடல்களில் என்னென்ன பொருட்கள் அறிமுகமாகி இருந்தாலும் அவற்றை எல்லாம் வாங்கி வருவார்கள்.
ஏன்னா, ஷூட்டிங் செல்லும் இடங்களுக்கு அதையெல்லாம் கையோடு எடுத்து வருவாங்க... அப்பதானே எனக்கு விதவிதமாக செய்து தர முடியும்...!
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட அந்த கலை நிகழ்ச்சிகள் போல் இதுவரை கலை நிகழ்ச்சிகள் எங்கும் நடக்கவில்லை. இனி அந்த மாதிரி நடத்தவும் முடியாது.
அன்று எல்லோரும் ஒரு குடும்பம் போல் பழகினோம். எல்லோரிடமும் சுய நலத்தை தாண்டிய பொது நலமும் இருந்தது.
அதனால் தான் கமல், ரஜினி முதல் சிம்பு வரை அத்தனை பேரும் ஒரே குடையின் கீழ் திரண்டு இருந்தார்கள். இனி அப்படி எல்லோரும் திரளுவார்களா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல மனத்தை விட பணமே இப்போது முக்கியமாகி விட்டது.
அப்போது ஓய்வு நேரங்களில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவோம். அப்படிப்பட்ட சந்தோச காலங்கள் மீண்டும் வரப்போவதில்லை. நடிகர், நடிகைகளுக்கு அந்த காலம் ஒரு வசந்த காலம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த கலை நிகழ்ச்சிக்குத் தான் சென்னையில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் போய் சேர்ந்ததும் ரஜினி சார் தனது பெட்டி சாவியை காணாமல் தவித்தார். பின்னர் வீட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பெட்டியில் ஒரு அறையில் தான் சாவி வைத்திருப்பதை சொன்னார்கள். அதன் பிறகு தான் பெட்டியை திறந்து நிகழ்ச்சிக்கு தயாரானார். இப்படி எவ்வளவோ நினைவுகள், சம்பவங்கள். மீண்டும் ஒரு சம்பவத்தோடு அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன்.
சேவையின் மூலம் கிடைக்கும் நிம்மதியும், சந்தோசமும் ரொம்ப அமைதியானது. நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் முழுநேரமும் பொதுசேவை செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. இப்போதும் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். எனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எனக்கு தெரிந்த பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு செல்வன். அவர்களுக்கு தேவையான துணிமணிகள், பொருட்கள் வாங்கி கொடுப்பது, உணவு வழங்குவது போன்ற என்னால் முடிந்த உதவிகளை தவறாமல் செய்கிறேன். பொது சேவை என்பது மன நிறைவை தருவது. முழுநேரமும் பொது சேவையில் ஈடுபடுவதற்கு இன்னும் நிறைய நாட்கள் ஆகலாம்.
(தொடரும்...)