சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்.... மரியாதை கொடுத்தேன்.. திருப்பி கிடைக்கவில்லை

Published On 2024-09-04 05:31 GMT   |   Update On 2024-09-04 05:31 GMT
  • படத்தில் முதல் கதாநாயகி மட்டுமல்ல. நடிகைகளிலும் சவுந்தர்யா என்னை விட ஜுனியர்தான்.
  • இறுதியில் அந்த படத்தில் நடித்ததால் மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

பார்த்திபனுமா இப்படி....? என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

'இவன்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கொண்டேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. நான் மிகவும் மதிப்பவர்களில் அவரும் ஒருவர்.

அவர் முதல் முதலாக பட தயாரிப்பில் இறங்கியதும் அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

அந்த கால கட்டத்தில் நான் வாங்கிய சம்பளத்தை விட மிக குறைவான சம்பளமே அவரிடம் வாங்கினேன்.

அது மட்டுமல்ல. படத்தில் முடிந்தவரை செலவை குறைப்பதற்கு என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்தேன்.

காஸ்ட்யூம் தேர்விலும் அதிக செலவை கொடுக்கவில்லை. அதிக விலை உள்ள உடைகளை எடுக்க சொல்லியும், 'அவ்வளவு தேவையில்லை சார்' என்று குறைந்த விலை யிலான உடைகளையே வாங்க சொன்னேன்.

படத்தில் என்னுடன் சவுந்தர்யாவும் உண்டு. படத்தின் கதையை விளக்கியபோது 'நீ தான் ஹீரோவுக்கு ஜோடி. உனக்கும் ஹீரோவுக்கும் தான் திருமணம் நடக்கும். எனவே முக்கியமான கதாபாத்திரம் நீ தான்' என்றார்.

நானும் சரி என்றேன். படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கியது. படப்பிடிப்பு ஜாலியாக போய் கொண்டிருந்தது.

தினமும் வாய்க்கு ருசியாக சீதாம்மா சமைத்து கொடுத்து அனுப்புவார்கள். (அப்போது பார்த்திபன்-சீதா தம்பதிகள் பிரியவில்லை). படப்பிடிப்பு முடிந்தது. டப்பிங், எடிட்டிங் உள்பட எல்லா பணிகளும் முடிந்து 'இவன்' திரைக்கு வர தயாரானான்.

படத்தை போட்டு பார்த்தபோது டைட்டிலில் முதலில் பார்த்திபன் பெயர் இடம் பெற்று இருந்தது. அதற்கு அடுத்ததாக முறைப்படி என் பெயர்தான் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் சவுந்தர்யா பெயர் இடம் பெற்று இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

படத்தில் முதல் கதாநாயகி மட்டுமல்ல. நடிகைகளிலும் சவுந்தர்யா என்னை விட ஜுனியர்தான். எனவே எனது பெயருக்கு உரிய மரியாதை இல்லாதது எனக்கு தரப்பட்ட அவமரியாதையாகவே கருதினேன்.

உடனே பார்த்திபன் சாருக்கு போன் போட்டு 'என்ன சார் என் பெயரை சவுந்தர்யாவுக்கு கீழே போட்டுள்ளீர்கள். இது சரியில்லையே' என்றேன்.

அதை கேட்டதும், 'அதை இப்போ வந்து கேட்டால் எப்படிம்மா? எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. இனி மாற்றுவது சிரமம் என்று கூறி விட்டார்.

ஆனால் அந்த சம்பவத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அவமதிக்கப்பட்டதாகவே கருதினேன். அந்த சம்பவத்தை என்றுமே என்னால் மறக்க முடியாது.

அப்புறம் படம் வெற்றிகரமாக ஓடியது. இறுதியில் அந்த படத்தில் நடித்ததால் மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

விருது வழங்கும் விழாவில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு விருது வழங்கினார்.

விருதை பெற்றுக்கொண்ட என்னிடம் 'மீனா, படம் பார்த்தேன். உன் நடிப்பு நன்றாக இருந்தது. ரசித்து பார்த்தேன்' என்றார். அதை கேட்டதும் எனக்கு ஆச்சரியம். படம் பார்க்க அவருக்கு ஏது நேரம் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் படத்தையும் பார்த்து அதில் நடித்த கலைஞரையும் பாராட்டும் மனசு யாருக்கு வரும்? அவரிடம் பாராட்டு பெற்றது மறக்க முடியாத நிகழ்வு.

 

பாடல் காட்சிகளில் அதற்கேற்ற காஸ்ட்யூம்களை சில நேரங்களில் நானே தயார் செய்வேன். இந்த படத்திலும் அப்படித்தான் ஒரு பாடல்.

'தூளு போடு தூளு மொளகா

தூளு தூவு சால்ட் தூளு....'

இந்த டூயட் பாடலில் மிளகாய், மிளகாய் என்று நிறைய வரும். எனவே மிளகாயை காஸ்ட்யூமில் பயன்படுத்தலாமே என நினைத்தேன். இடுப்பு கச்சை, ரவிக்கை, கொண்டை எல்லா இடத்திலும் சிவப்பு மிளகாயை கட்டி இருப்பேன். படத்தில் பார்த்தபோது அதுவும் வித்தியாசமான காஸ்ட்யூமாக ரொம்ப நல்லா இருந்தது.

இந்த படத்தில் எனக்கு தமிழ் பேசும் தெலுங்கு பெண் வேடம். ஆந்திரத்து மக்கள் காரம் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். எனவே தானோ என்னவோ பாடலிலும் போடு மிளகாய் தூளு' என்ற வரிகளும் எனக்கு வந்தது.

எனவே நானும் என் பங்குக்கு மிளகாயை இங்கு... அங்கு... என்று உடல் முழுவதும் கட்டி போடு மிளகாய் போடு என்று ஆக்கி விட்டேன்.

மீண்டும் அடுத்த வாரம் புதிய தகவலுடன் வருகிறேன். பை... பை...

(தொடரும்)

Tags:    

Similar News