ஆன்மிக அமுதம்- பூலோக அமிர்தம் நெல்லிக் கனி!
- நெல்லியில் திருமால் வாசம் செய்கிறார். அதனால் நெல்லிக்கு `ஹரிபிரியா’ என்ற பெயரும் உண்டு.
- துவாதசியில் நெல்லிக்கனி உண்பவனுக்கு கங்கையில் நீராடிய பயன் கிட்டும்.
நெல்லிக்கனி பூமியில் எப்படித் தோன்றிற்று என்ற கதை தெரியுமா?
முன்னொரு காலத்தில், வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிப் பாற்கடல் கடையப்பட்டது. தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமுமாக நின்று அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தார்கள்.
அப்போது ஐராவதம் என்னும் வெள்ளை யானை, உச்சைச்வரம் என்னும் வெண்குதிரை, காமதேனு என்ற பசு உள்ளிட்டவைங்கள், பாற்கடலில் இருந்து வெளிப்பட்டன. இறுதியில் திரண்டு வந்தது அமிர்தம்.
திருமால் மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை ஏமாற்றி அமிர்தம் தேவர்களுக்கே கிடைக்குமாறு செய்தார். அமிர்தத்தை தேவர்களின் அரசனான இந்திரன் உள்பட எல்லாத் தேவர்களும் அருந்தினார்கள்.
இந்திரன் அருந்தும்போது சற்றுக் கவனமாக அருந்தக்கூடாதா? அவனது கவனமின்மையால் ஒரு நற்பயன் நேர்ந்தது. உயிரை வளர்க்கக் கூடிய உத்தமமான அமிர்தத்தில் ஒரே ஒரு சொட்டு பூமியில் விழுந்துவிட்டது.
விழுந்த சொட்டு விதையாக மாறி மரமாய் வளர்ந்தது. அந்த மரமே நெல்லி மரம். அதன் கனியே இன்று நமக்குக் கிட்டும் நெல்லிக் கனி.
ஒவ்வொரு நெல்லிக்கனியும் ஓரொரு அமிர்தச் சொட்டுதான். அதனால்தான் நெல்லிக் கனியைச் சாப்பிட்டால் ஆயுள் வளரும் என்கிறார்கள்.
ஆதிசங்கரர் அருளிய சுலோகம் ஒன்றின் பின்னணியில் நெல்லிக் கனி ஒளிவீசுகிறது.
சங்கரர் துறவியாவதற்கும் முன்பாக அருளிய அவரது முதல் படைப்புத்தான் கனகதாரா ஸ்தோத்திரம். கனகம் என்றால் பொன். தாரை என்றால் மழை. கனகதாரா என்றால் பொன்மழை என்று பொருள்.
இந்த ஸ்தோத்திரத்தை `பொன்மழைப் பாடல்கள்` என்ற தலைப்பில் அழகாகத் தமிழாக்கியுள்ளார்
கவியரசர் கண்ணதாசன்.
`மாலவன் மார்பில் நிற்கும்
மங்கலக் கமலச் செல்வி
மரகத மலரில் மொய்க்கும்
மாணிக்கச் சுரும்பு போன்றாய்!`
என வரும் வரிகள், அதன் இலக்கிய நயம் நிறைந்த தொடக்க வரிகள்.
அன்று ஏகாதசி. அயாசகன் இல்லத்தில் என்றுமே ஏகாதசிதான். வறுமையின் கோரப் பிடியில் சிக்கி வாழ்ந்து வந்தார்கள் அவனும் அவன் மனைவியும்.
ஏகாதசி முடிந்தால் மறுநாள் துவாதசி. பட்டினியை முறித்து ஏதேனும் சாப்பிடும் நாள். அப்படிச் சாப்பிடுவதற்காக ஒரே ஒரு வாடிய நெல்லிக்கனியை தன் இல்லத்து மாடப் பிறையில் வைத்திருந்தான் அயாசகன்.
காலை வேளையில் அவன் நதியில் நீராடச் சென்றிருந்தான். மனைவி இல்லத்தில் இருந்தாள்.
அன்று இளம் ஆதிசங்கரர் கையில் பிச்சை பாத்திரத்தோடு அவன் இல்லத்தின் முன் வந்து நின்றார். குருகுலத்தில் பயிலும் மாணவர்கள் பிச்சை எடுத்துச் சாப்பிடுவதுதானே வழக்கம்? `பவதி பிட்சாம் தேகி, எனக்கு உணவிடுங்கள்' என வீட்டு வாசலில் நின்று உரக்கக் குரல் கொடுத்தார்.
இல்லத்தின் உள்ளிருந்த அயாசகனின் மனைவி அந்தக் குரலைக் கேட்டுப் பரவசமடைந்தாள். என்ன குரல் இது? குழலோசையை வெல்லும்போல் இருக்கிறதே இந்தக் குரலோசை? எந்த மனிதக் குயில் இப்படி இசைக்கிறது? வாயிலில் வந்து பார்த்தாள்.
அருள்பொங்கும் முகத்தோடு நின்று கொண்டிருந்தது சங்கரன் என்ற தெய்வீகக் குழந்தை.
அடடா. இந்தக் குழந்தையின் பிச்சை பாத்திரத்தில் போட மணியரிசி இல்லையே? என்ன செய்வேன்?
தன் பசியை அவள் பொறுத்துக் கொள்வாள். ஆனால் ஒரு பச்சிளம் பாலகனுக்கு உணவிட முடியாத நிலை அவள் மனத்தை வாட்டி வதைத்தது.
பரபரப்போடு அங்குமிங்கும் தேடினாள். மாடப்பிறையில் இருந்த அந்த ஒரே ஒரு வாடிய நெல்லிக்கனி கண்ணில் பட்டது.
வேறு வழியில்லை. இதையாவது அந்தச் சிறுவனுக்கு அளிப்போம்.
நெல்லிக் கனியைக் கையிலெடுத்தாள். இதையும் ஓர் உணவாக அளிக்கிறோமே என்ற தாளாத கூச்சத்தோடு சங்கரரின் பிச்சை பாத்திரத்தில் நெல்லிக்கனியைப் போட்டுவிட்டுக் கண்ணீர் வழிய வீட்டின் உள்ளே ஓடிவிட்டாள்.
நிலைமையைப் புரிந்துகொண்டார் சங்கரர். தன்னிடமிருந்த ஒரே நெல்லிக் கனியையும் எனக்குத் தந்துவிட்டுப் போகிறாளே? என்ன கருணை அவளுக்கு?
இந்தக் குடும்பத்தினருக்கா வறுமை? இது என்ன நியாயம்?
தாயே லட்சுமி தேவி! இவர்கள்மேல் உன் பார்வை படக்கூடாதா? கர்ம வினை காரணமாக இவர்களுக்கு இந்நிலை என்றால், உன் கருணை மழை அந்தக் கர்ம வினையை அடித்துக் கொண்டு போகலாகாதா?
ஆதிசங்கரரின் அதரங்களில் இருந்து பிறந்தது `அங்கம் ஹரே' எனத் தொடங்கும் கனகதாரா ஸ்தோத்திரம். அதை அவர் பாடி முடித்த மறுகணம் லட்சுமி அந்த வீட்டினர்மேல் கருணை கொண்டாள். பின்னே பரிந்துரைத்தது சங்கரர் ஆயிற்றே?
அந்த ஏழைப் பெண் கொடுத்த ஒரே ஒரு நெல்லிக்கனிக்கு பதிலாக தங்க நெல்லிக்கனி மழையையே அவர்கள் வீட்டில் பொழியச் செய்தாள்.
கூரையைப் பிய்த்துக்கொண்டு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்கிறார்களே? அயாசகன் வீட்டில் உண்மையிலேயே கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்க நெல்லிக்கனிகள் கொட்டுக் கொட்டென்று கொட்டித் தீர்த்தன.
இன்றும் கேரளத்தில் ஆதிசங்கரர் பிறந்த காலடி என்ற ஷேத்திரத்தில் பொன்மழை பொழிந்த இல்லத்தை நாம் தரிசிக்கலாம்.
சங்கரர் ஒருமுறை கொல்லூருக்கு விஜயம் செய்தார். பிச்சை ஏற்க ஓர் அன்பர் இல்லத்திற்குச் சென்றார். கணவரும் மனைவியுமாக சங்கரருக்கு உணவிடும்போது அவர்களின் விழிகளில் இருந்து அருவிபோல் கண்ணீர் வழிந்தது.
அவர்களின் துயரத்திற்குக் காரணமென்ன எனப் பரிவுடன் வினவினார். தங்கள் மகன் பிறந்ததில் இருந்து வாய்பேசாதிருக்கிறான் எனக் கூறிக் கண்ணைத் துடைத்துக் கொண்டார்கள் அவர்கள்.
மகனை அழைத்துவரப் பணித்தார். சிறுவன் அவர்முன் வந்து நின்றான். பிறவியிலேயே மெய்ஞ்ஞானி அவன் என்பதை அவனின் ஒளிவீசும் விழிகள் புலப்படுத்தின.
அவனிடம் `நீ யார்?' எனக் கேட்டார். அவன் திடீரென்று பேசத் தொடங்கினான். பெற்றோர் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
நீ யார் என்ற கேள்விக்கு உலகியல் ரீதியாக தான் இன்னாரின் பிள்ளை என்றோ தன் பெயர் இன்னதென்றோ அவன் பதில் கூறவில்லை.
ஆன்மிக ரீதியாக கடவுள் என்னும் பெருங்கடலில் தான் ஒரு திவலை என்பதாக அத்வைத தத்துவ சாரத்தையே பதிலாகக் கூறினான்.
அதுவும் கவிதைகளாய்ப் பொழிந்தான் அவன். அப்போது அந்தச் சிறுவன் பாடிய பதினான்கு செய்யுள்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தில் நிலைத்துள்ளன.
உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அத்வைத தத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கிய அவனுக்கு ஹஸ்தாமலகர் எனப் பெயரிட்டார் சங்கரர். (ஹஸ்தம் என்றால் கை. ஆமலகம் என்றால் நெல்லிக்கனி.)
இந்நிகழ்வுக்குப் பின் ஹஸ்தாமலகரைத் தன் சீடனாகவே ஏற்றுக்கொண்டார் சங்கரர் என்கிறது சங்கரரின் திருச்சரிதம்.
சங்கரர் வாழ்வில் மட்டுமல்ல, சங்கத் தமிழிலும் என்றும் தெவிட்டாத ஓர் இலக்கிய நெல்லிக் கனி இடம்பெற்றுள்ளது.
அவ்வையார் மேல் மிகுந்த மதிப்பும் பாசமும் வைத்திருந்தான் தகடூரை ஆண்டுவந்த வள்ளல் அதியமான். அவன் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு கருநெல்லி மரத்தைக் கண்டான்.
கருநெல்லி மரம் அபூர்வம் என்றால் அதில் நெல்லிக்கனி விளைவது அதனினும் அபூர்வம். அந்தக் கருநெல்லி மரத்தில், ஆயுளை நீட்டிக்கும் அரிய நெல்லிக்கனி ஒன்றே ஒன்று கனிந்திருக்கக் கண்டான்.
அதைப் பறித்தான். அவன் மனம் சிந்தித்தது. அந்தக் கருநெல்லிக்கனியை உண்டால் அவன் ஆயுள் நீட்டிக்கும்.
ஆனால் தன் ஆயுள் நீள்வதை விட அவ்வையின் ஆயுள் நீள்வதல்லவா இன்னும் நல்லது? அவ்வை எழுதும் அழகிய கவிதைகளால் தமிழும் தமிழ்ச் சமுதாயமும் தழைக்குமே? தான் வாழ்வதை விடத் தமிழ் வாழ்வதல்லவா முக்கியம்?
கனியை பத்திரமாக அரண்மனைக்குக் கொண்டுவந்தான். அவ்வையை அழைத்து அதன் பெருமையைச் சொல்லாமலே அதைக் கொடுத்து உண்ணச் செய்தான்.
அதன் பின்னர், தான் உண்ட நெல்லிக்கனியின் மகத்துவத்தை அறிந்த அவ்வை, தன்மேலும் தமிழ்மேலும் அதியமான் வைத்திருக்கும் அதிகமான பாசத்தை எண்ணி வியந்தாள்.
`...பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந்தனையே! '
என அவ்வை பாடிய புறநானூற்றுப் பாடல் அதிகமானை நெஞ்சாரப் புகழ்கிறது.
நெல்லியில் திருமால் வாசம் செய்கிறார். அதனால் நெல்லிக்கு `ஹரிபிரியா' என்ற பெயரும் உண்டு.
துவாதசியில் நெல்லிக்கனி உண்பவனுக்கு கங்கையில் நீராடிய பயன் கிட்டும். கோவில் கோபுரக் கலசங்களின் உட்புறத்தில் நெல்லியையும் போடுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் நெல்லி மரத்தை வலம்வருவது சிறப்பு.
சத்துக்களைப் பொறுத்தவரை இரண்டு நெல்லிக்காய்கள் ஓர் ஆப்பிளுக்கு சமம். நெல்லிக்காய் கண்களுக்குத் தெளிவைக் கொடுப்பதுடன் தலைமுடி உதிராமலும் நரைக்காமலும் இருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
`மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்' எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. நெல்லிக்கனி உண்ணும்போது முதலில் கசப்பதாகத் தோன்றும். ஆனால் அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடித்தால் தண்ணீர் தேனாய்த் தித்திக்கும்.
மூத்தவர்களின் சொற்களும் அப்படித்தான். முதலில் கசப்பாய் இருந்தாலும், காலம் போகப் போக நடைமுறையில் அவர்களின் அறிவுரையைக் கடைப்பிடித்தோமானால் வாழ்க்கை தித்திக்கும்.
நாம் நெல்லிக் கனியின் ஆன்மிகப் பயனையும் உலகியல் பயனையும் ஒருசேர அடைவோமாக.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com