சிறப்புக் கட்டுரைகள்
null

குலம் தழைக்க வைக்கும் குலதெய்வ வழிபாடு!

Published On 2024-03-16 10:32 GMT   |   Update On 2024-03-16 10:32 GMT
  • எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது.
  • கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போகக் கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள்.

குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்மோடு எப்போதும் நீங்காமல் இருந்து நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழி காட்டும் அருட்சக்தி ஆகும்.

கோடி தெய்வங்களின் சன்னதியை தேடிப் போய் வணங்கி பெறும் ஆசிகளை ஒற்றைக் குலதெய்வத்தின் சன்னதி முன் வணங்கி பெறலாம்.

அன்னிய படையெடுப்பு காரணமாகவோ, பிழைப்பிற்காகவோ, அல்லது வறட்சி காரணமாகவோ, கொள்ளை நோய் காரணமாகவோ முந்தைய தலைமுறையினர் தங்களது பூர்வீக ஊரை விட்டு வேறு பகுதிகளில் குடியேறி இருப்பார்கள்.

ஊரை காலி செய்யும் முன் தங்களது முன்னோர்கள் வழி வழியாக வணங்கிய குல தெய்வத்தின் முன் கண்ணீரோடு நிற்பார்கள்.

அந்தக் குல தெய்வத்தின் சன்னதியில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து "இங்கே இருந்து எங்கள காப்பாத்துன மாதிரி நாங்க குடி போகுற இடத்துக்கும் எங்களோடு வந்து எங்கள காப்பாத்துமய்யா" என புலம் பெயருவார்கள்.

அந்த கைப்பிடி மண்ணைக் கொண்டு தாங்கள் புதிதாக குடியேறும் ஊரில் தங்களது குல தெய்வத்திற்கு கோவில் கட்டி வழிபடுவார்கள்.

எத்தனை வளமான மண்ணாக இருந்தாலும் தளிர்த்து வளரும் செடியை அதன் பிறந்த இடத்து பிடி மண்ணோடு இன்னொரு இடத்தில் வைத்தால் மட்டுமே வேர் விட்டு தழைத்து வளரும்.

புலம் பெயரும் இடத்தில் எத்தனை தெய்வ ஆலயங்கள் இருந்தாலும் குல தெய்வத்தின் அருளையும் ஆசியையும் பிரதானமாக நினைத்து பிடிமண் ஆலயம் என குல தெய்வத்தின் ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்தனர் முன்னோர்கள்.

குல தெய்வம் கோவிலுக்கு சென்று வணங்கும்போது நமது குலதெய்வத்தின் அருளோடு நமது முன்னோர்களின் ஆசியும் கிடைக்கின்றது.

"நாள் செய்யாததை கோள் செய்யும்...

கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள்.

ஒரு செயல்களையோ, காரியத்தையோ ஆரம்பிக்கும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து செய்வோம்.

கிரகம் எனும் கோள்களில் சுக்கிர திசை உச்சத்தில் இருக்கிறதா என கிரகாச்சார அமைப்பை பார்த்து தொழில் ஆரம்பிப்போரும் உண்டு.

நாளும், கோளும் பார்க்காமல் கற்குவேல் அய்யனாரே! நான் ஆரம்பிக்குற மளிகை கடை யாவற்றுக்கும் நீர் தான் மொதலாளி! எந்த நட்டமும், போட்ட முதலுக்கு சேதாரமும் வராம லாபத்தை தாருமய்யா! என குல தெய்வத்தை வணங்கி ஆரம்பிக்கும் எந்த தொழிலும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.

ஆம்... குலதெய்வத்தின் அருளாசி நாளும் கோளும் செய்யாததை விட அதிகமாக அருள் புரிந்து நம்மை காக்கும்.

பசியால் பிள்ளை அழுதால் தாய் பொறுக்க மாட்டாள். குல தெய்வமும் தாயை போலத்தான். தன் முன் குறைகளை கண்ணீரோடு சொல்லி முறையிடும் தனது பிள்ளைகளின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி தரும் கருணை கொண்டவர் குலதெய்வம் ஆவார்.

எய்யா!! இளம்பாளை சாஸ்தாவே!! எம்புள்ளைக்கு வயசு முப்பது ஆவ போவுது. காலா காலத்துல எம்புள்ளைக்கு கல்யாணம் காட்சிய நடத்தி தாரும் என...

குல தெய்வ சன்னதியில் தனது கஷ்டங்களை, குறைகளை சொல்லி அழுது, கண்ணீர் சிந்தியபடி கேட்டவர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தரும் வல்லமை படைத்தது குலதெய்வத்தின் அருளாசி ஆகும்.

இந்த சனிப்பெயர்ச்சி என்னை போட்டு பாடாய் படுத்துதே! என கிரகப்பெயர்ச்சி பலனை நினைத்து வருந்துபவர்கள் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கினாலே போதும்.

எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது. குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கின்றது.

"குல தெய்வத்தை கும்புடாம போனா குலம் தழைக்காது" என சொல்வார்கள்.

எம்புள்ளைக்கு கலியாணம் முடிஞ்சு வரும் பங்குனி மாசத்தோட பத்து வருசம் ஆவப் போவுது..

எம் மருமொவ வயத்துல ஒரு புள்ள பூச்சி தங்க காணோம்..

சொரிமுத்து அய்யா!! நாங்க அறிஞ்சு அறியாம எந்த தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுடும்.

என்னோட கொலம் தழைக்க எம்புள்ளைக்கு ஒரு வாரிசு கொடு.

புள்ள பெத்து கரையேறி வந்ததும் தாயையும், புள்ளையையும் ஒன்னோட தலத்துக்கு கூட்டி வந்து ஒன்னோட சன்னதியில என்னோட பேரபுள்ளைக்கு பொறந்த முடி எடுக்குறோமுய்யா! என மகனுக்காக குல தெய்வத்திடம் பிள்ளை வரம் கேட்டு பிரார்த்தனை செய்யும் தாய்மார்களின் வேண்டுதலை நம்மில் அனேகர் கேட்டு இருப்போம்.

குலம் தழைக்கும் வல்லமையை தருவது கூட குலதெய்வத்தின் அருளாசிகள் தான்.

 

சுரேஸ்வரன் அய்யாப்பழம் (சில்வண்டு)

தென் தமிழக மக்களுக்கு குலதெய்வம் பெரும்பாலும் சாஸ்தா ஆகவே இருப்பார்.

யார் இந்த சாஸ்தா?

சாஸ்தா என தற்போது தென்மாவட்ட மக்களால் அழைக்கப்படும் சொல் முந்தைய தலைமுறை மக்களால் சாத்தா என்று அழைக்கப்பட்டது.

சாத்து என்றால் கூட்டம் என பொருள்.

குல தெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் ஒரு போதும் தனித்து வர மாட்டார்கள்.

குடும்ப சகிதமாக கூட்டமாக வந்து தான் தங்களது குல தெய்வத்தை வணங்குவார்கள்.

கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

குடும்பத்தில் தந்தையை ஐயா!! என்று அழைப்பது முந்தைய தலைமுறை நெல்லை மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கம்.

ஐயா, ஐயன் என்ற தமிழ்ச்சொல்லுக்கு மூத்தவர், தலைவர் என்ற பொருள் படும்.அதனால் தங்களது குல தெய்வத்தை ஐயனார் என அழைத்தனர்.

தேவர்களுக்கு அமிர்தம் வழங்க பகவான் நாராயணர் எடுத்த மோகினி அவதாரத்தில் சிவ - வைணவ ஐக்கியமாக உதித்தவர் சாஸ்தா.

ஐயன் (திருமால்), அப்பன்(சிவன்) என்ற இரு மூர்த்திகளின் ஒருமித்த சக்தியாக சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் தான். தென் மாவட்டங்களில் சாஸ்தாவின் ஆலயங்கள் பெரும்பாலும் குளம், ஆறு, சுனை போன்ற நீர்நிலைகளின் அருகிலேயே அமைந்து இருக்கும்.

எதற்காக சாஸ்தாவை தென் மாவட்ட மக்கள் நீர்நிலைகளின் அருகில் வைத்து வணங்க வேண்டும்..?

விவசாயம் தான் தென்மாவட்ட மக்களின் பிரதான தொழில்.

நீரின்றி அமையாது உலகு என்பது போல் நீரின்றி விவசாயம் நடைபெறாது.

தங்களது நீர்நிலைகளை பாதுகாத்து விவசாயத்தை செழிக்க வைக்க தங்களது குலதெய்வமான சாஸ்தாவை நீர் நிலைகளின் கரையோரங்களில் வைத்து வணங்கி வந்தனர்.

"ஏரிக்கு ஒரு ஐயனாரும், ஊருக்கு ஒரு பிடாரியும் எங்க ஊருல உண்டு வேய்" என தங்கள் ஊரின் பெருமையாக கிராமத்தில் சொல்வார்கள்

காரையாறு சொரிமுத்து ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார், கடம்பாக்குளம் பூலுடையார் சாஸ்தா, ஸ்ரீவல்லப பேரி என்ற சீவலப்பேரி ஏரியின் மறுகால் மடையில் வீற்றிருக்கும் மறுகால் தலை சாஸ்தா.. என தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சாஸ்தா ஆலயங்கள் அனைத்தும் நீர் நிலையின் அருகாமையில் தான் இருக்கும்.

இவ்வாறு நீர்நிலைகளின் தெய்வமும், சம்சாரி எனும் விவசாய மக்களின் குல தெய்வமான சாஸ்தா பங்குனி உத்திர திருநாளில் அவதரித்தார்.

குல தெய்வத்தை வழிபடும் பங்குனி உத்திர நாள் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட்டாலும் தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் பங்குனி உத்திரத்தை கொண்டாடும் விதமே தனி..

சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருநாள் ஆனது தென் மாவட்ட மக்கள் அனைவரும் குடும்பத்தோடு ஒன்று சேரும் நாள் என்று கூட சொல்லலாம்.

சொக்காரன் என அழைக்கும் பங்காளிகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கூட உத்திர நாளில் சாஸ்தாவை வணங்க குலதெய்வ கோவிலுக்கு குடும்பமாக வந்து விடுவார்கள்.

போன வருச பங்குனி உத்திரத்தோட ஊருக்குப் போயிட்டா.., வியாபாரம் பாதிக்குமேன்னு சாஸ்தா கோவிலுக்கு போகாம இருந்துட்டேன்.

பாம்பு துரத்துற மாதிரி கனவு வருது.. வியாபாரமும் சரியில்லை.

வீட்டுக்காரி வேற மேலுக்கு சரியில்லாம படுத்துக்குடுதா..

எய்யா!! கடம்பா குளத்துக்கரை பூலுடையார் சாஸ்தாவே.. இந்த வருசம் உத்திரத்திற்கு ஒம்ம சன்னதிக்கு வர நீதாய்யா அருள் புரியணும்..

என சத்தம் போட்டு குலசாமியிடம் வேண்டி கொண்ட மளிகைக்கடை சொக்காரனின் வேண்டுதல் குரலை கேட்ட அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும்.

பங்குனி உத்திரத்திற்கு சென்று குலதெய்வத்தை வழிபடுவதை தென் மாவட்ட மக்கள் தங்களது கடமையாகவே கருதுவார்கள்.

பெரும்பான்மையான இந்த சாஸ்தா கோவில்களில் தினசரி பூஜைகள், தீபம் ஏற்றுவது கூட நடைபெறாது.

நிதம் தனது சன்னதியில் வந்து தன்னை வணங்கி வழிபட்டால் மட்டுமே அருள் புரிவேன், லாபத்தில் பத்து சதவீதம் பங்கு தந்தால் மட்டுமே காப்பாற்றுவேன் என ஒரு போதும் குல தெய்வமான சாஸ்தா தனது பிள்ளைகளிடம் நிபந்தனை விதிக்க மாட்டார்.

பிழைப்புக்காக ஏதோ ஒரு இடத்திற்கு சென்று தான் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து காலையில் வியாபாரம் ஆரம்பிக்கும் முன் எய்யா!! எங்க சாமி!! இன்றைய பொழுது நல்லாயிருக்கணும், நல்லா லாபம் கெடைக்கணும்" என தனது புகைப்படத்தின் முன் நின்று ஒற்றை ரூபாய் ஊதுபத்தியை ஏற்றியோ, ஏற்றாமலோ தன்னை வணங்கும் பிள்ளைகளின் பிரார்த்தனையை தான் இருந்த இடத்திலிருந்த படியே நிறைவேற்றி கொடுப்பது தான் குலதெய்வத்தின் தனிப்பெரும் கருணை எனலாம்.

வருடம் முழுவதும் தனியாக இருக்கும் சாஸ்தா ஆனவர் பங்குனி உத்திர நாளில் பிறந்தநாளை கொண்டாடும் சிறுவனை போல் உற்சாகம் ஆகிவிடுவார்.

ஆம். பங்குனி உத்திரம் தான் சாஸ்தாவின் பிறந்தநாள் ஆகும்.

பங்குனி உத்திர திருநாள் ஆனது சாஸ்தாவின் பிறந்த நாளோடு மட்டுமல்லாமல் நிறைய புண்ணிய நிகழ்வுகளையும் கொண்ட தினம் ஆகும்.

அனைத்து தமிழ் மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு.

தெய்வங்களின் திருமணம் நடந்த தினமாதலால் "தெய்வங்களின் திருமண நாள்" என்ற பெயருக்கான பெருமைக்கு உரியது இந்த பங்குனி உத்திர திருநாள்.

சிவ பெருமான் - பார்வதி திருமணம், ஸ்ரீராமன் - சீதை திருமணம், ஸ்ரீரங்கமன்னார் - ஆண்டாள் திருமணம், முருகன் - தெய்வானை திருமணம், சந்திரன் அஸ்வினி முதல் ரோகிணி வரையிலான இருபத்தியேழு நட்சத்திரங்களை மணந்தது, கும்ப முனி அகத்தியர் லோபா முத்திரையை மணந்தது என பல்வேறு தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக பல்வேறு புராணங்கள் குறிப்பிடுகின்றன.

பங்குனி உத்திர திருநாள் வழிபாடு மிகவும் புண்ணியமானதும், சகல நலன்களை தருவதும், துவக்கும் காரியங்களில் வெற்றியை தரவல்லதும் ஆகும்.

பங்குனி உத்திர திருநாள் வழிபாடு பணக் கஷ்டம், திருமணத் தடைகள், வாராக் கடன், ஆரோக்கியக் குறைவு போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி தரும் புண்ணிய நாளாகும்.

உத்திர திருநாளில் அன்னை, தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, உற்றார், உறவினர்களோடு உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள்.

தனியாக ஒருபோதும் குலதெய்வ கோவிலுக்கு செல்லாதீர்கள்.

தனியாக சென்று வேண்டும் வேண்டுதல்களை ஒருபோதும் குலதெய்வம் கேட்பதில்லை.

ஒற்றுமையாக குடும்பத்தோடு கூட்டமாக சென்று வேண்டும் வேண்டுதல்களைத் தான் குலதெய்வம் எப்பொழுதும் நிறைவேற்றி தரும்.

குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது தவறாது பொங்கலிட்டு குல தெய்வத்தை வணங்கி அவருக்கு படையலிட்ட பொங்கலை அவர் ஆலயத்தில் வைத்து சாப்பிடுங்கள்.

நீங்கள் படைக்கும் பொங்கல் நிச்சயம் உங்கள் குல தெய்வத்திற்கானது அல்ல..

யோவ்!!! என்ன!!! நாங்க வைக்குற பொங்கலு எங்க சாமிக்கு இல்லையா. நாங்க வைக்குற பொங்கலை எங்க சாமி ஏத்துக்கிடாதா என பட்டுன்னு எகிறாதீங்க..

பிள்ளைகள் வயிறார சாப்பிடுவதை தானே தாய் விரும்புவாள்.

தாயைப் போல தாய்மை குணம் நிறைந்தது தானே குலதெய்வம்.

தன்னை வணங்கி விட்டு பசியோடு தனது பிள்ளைகள் வீட்டிற்கு செல்லக்கூடாதே!! என்று எண்ணி தனக்கு பொங்கல் படைக்க வேண்டும் என்று கூறி தனக்கு படைக்கப்பட்ட பொங்கலை தனது ஆலயத்தின் முன் இருந்து வயிறார சாப்பிடும் பிள்ளைகளை கருவறையில் இருந்த படியே மனம் நிறைய பாசத்தோடு ஆசிகள் வழங்கி கொண்டிருப்பார் குல தெய்வமான சாஸ்தா.

குல தெய்வ வழிபாடு என்பது விட்டு போன உறவுகளை இணைப்பதற்காக, உறவுகள் விட்டு போகாமல் இருப்பதற்காக, பட்டுப்போன உறவுகளை துளிர வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு புண்ணிய சடங்கு ஆகும்.

குலதெய்வத்தை வழிபட்டு அனைவரும் குடும்பத்தோடு ஒற்றுமையாக இருப்போம்.

தொடர்புக்கு:

isuresh669@gmail.com

Tags:    

Similar News