மன அழுத்தம் போக்கும் ஆழ்நிலை தியானம்
- 40000 ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களை உருவாக்கினார்.
- ஆழ்நிலை தியானத்தால் கவலை, மன அழுத்தம் குறைந்து எப்போதும் சமச்சீருடனான சாந்தமான மனநிலையைக் கொண்டிருப்பதைக் காட்டியது.
உலகெங்கும் யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை அறியச் செய்தவர்களுள் மிக முக்கியமானவரும் பல லட்சம் பேர்களை ஆன்மீகத்தில் உயர ஏற்றியவருமான ஒருவர் மகேஷ் யோகி!
பிறப்பும் இளமையும்: பின்னால் மஹரிஷி மகேஷ் யோகி என்று அறியப்பட்ட மகேஷ் ப்ரசாத் வர்மா 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு அருகே உள்ள சிச்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.
1942-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்ற அவர் சிறிது காலம் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தார். ஆன்மீக ஈர்ப்பால் ஒரு குருவைத் தேடத் தொடங்கிய அவர் ப்ரஹ்மானந்த சரஸ்வதியை தரிசித்தார். ஜோதிர் மடம் சங்கராசார்யரான ப்ரஹ்மானந்த சரஸ்வதி என்ற மகானைக் குருவாகக் கொண்டதோடு அவரது செயலாளராகவும் பணி புரிந்தார் மகேஷ் யோகி.
'முதலில் பட்டப்படிப்பை முடி; பெற்றோரிடமிருந்து அனுமதி பெற்று இங்கு வா' என்றார் குரு. இரண்டரை வருட காலம் அவரது வழிமுறைகளுக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட மகேஷ் யோகி, அவரிடம் அனைத்து யோகா மற்றும் தியான முறைகளை நன்கு கற்றுக் கொண்டார்.
1953-ல் அவரது குரு இறைவனடி சேரவே இமயமலையில் உள்ள உத்தர்காண்ட் சென்றார் அவர்.
இமயமலைக் காடுகளில் தவம் புரிந்த அவர் 1955ல் ஆழ்நிலை தியானத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆழ்நிலை தியானம் என்பது ஒரு நாளைக்கு இரு முறை செய்யப்பட வேண்டிய தியானமாகும். இதற்கு விசேஷ மந்திரமும் உண்டு. இது சாதகரை உயர் பிரக்ஞை நிலைக்கு முன்னேற்றி விடும்.
இரு வருடங்கள் இந்தியா முழுவதும் பயணப்பட்ட பின், 1958-ல் அவர் தனது முதல் உலகப் பயணத்தை மேற்கொண்டார். ஐந்து முறை உலகப்பயணத்தை மேற்கொண்ட அவர் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் சென்றார்.
40000 ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களை உருவாக்கினார். 50 லட்சம் பேர்களுக்கு இவர்கள் ஆழ்நிலை தியான முறையைக் கற்பித்தனர்.
பீட்டில்ஸ் இசைக்குழு: 1962 முதல் உலகின் ஆகப்பெரும் இசைக்குழுவாக பீட்டில்ஸ் குழு திகழ்ந்தது. ஜான் லெனான், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிஸன், ரிங்கோ ஸ்டோர் ஆகிய நால்வர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது இசையால் உலகப் புகழ் பெற்றது பீட்டில்ஸ் இசைக்குழு.
இக்குழுவில் இருந்தோர் அனைவருக்கும் ஒரு ஆன்மீக தாகம் ஏற்பட்டது. "அதிகப் புகழை அடைந்து விட்டோம். ஆனால் இதெல்லாம் எதற்காக" என்ற ஒரு தேடல் உணர்வு குழுவினரிடையே ஏற்பட்டது. 1967 பிப்ரவரியில் ஜார்ஜ் ஹாரிஸனின் மனைவி பாட்டி பாய்ட் ஆழ்நிலை தியானம் பற்றி அறிந்து தன் கணவரிடம் சொல்ல அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நிகழ்ந்த மஹரிஷியின் உரைக்கு இருவரும் சென்றனர். பின்னர் வேல்ஸில் நடந்த பத்து நாள் முகாமிற்கு பீட்டில்ஸ் குழுவினர் சென்று அதில் கலந்து கொண்டனர்.
தங்களின் ஆன்மீகத் தேடலுக்கு விடை காண குழுவினர் அனைவரும் 1968 பிப்ரவரி மாதம் ரிஷிகேசம் வந்து சேர்ந்தனர்.
உலகெங்குமுள்ள பத்திரிகைகள் இதைப் பெரிய நிகழ்வாகக் கொண்டு செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தன. ஆன்மீக எழுச்சிக்காக அவர்கள் ரிஷிகேசத்தில் உள்ள மஹரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தது அவர்களது படைப்பாற்றல் திறனை வெகுவாகத் தூண்டிவிட்டது. எப்போதுமில்லாத விதமாக அற்புதமான 48 பாடல்களை அவர்கள் உருவாக்கினர். இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பிரபலமான 'வொய்ட் ஆல்பம்' என்ற அந்த வருடத்திய வெளியீட்டில் சேர்க்கப்பட்டிருந்தன. பீட்டில்ஸ் குரு என்ற பெயரை மஹரிஷி பெற்றார்.
ஆனால் மஹரிஷியைப் பற்றிய சில புரளிகளால் மூன்று மாதம் தங்க திட்டமிட்ட அவர்களது ரிஷிகேச வாசம் பாதியிலேயே முடிந்தது. ஆனால் பின்னால் பலவருடங்களுக்குப் பிறகு அவர்களில் சிலர் மீண்டும் மஹரிஷியைச் சந்தித்தனர். தங்களது தவறான புரிதலுக்கு அவர்கள் பெரிதும் வருந்தினர்.
ஆனால் மஹரிஷியோ அவர்கள் வந்ததையும் பெரிது படுத்தவில்லை; அவர்கள் சென்றதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
அறிவியல் சோதனைகள் மூலம் நிரூபணம்!
ஒரு சமுதாயம் நலமுற இருக்கவேண்டுமெனில் அந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மனநலத்துடனும் இருத்தல் வேண்டும். இதற்கு ஆழ்நிலை தியானம் உதவுகிறது என்பதை அறிவியல் சோதனைகள் நிரூபித்துள்ளன.
ஆழ்நிலை தியானத்தினால் என்ன பயன் என்று கேட்கும் சில பகுத்தறிவுவாதிகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ஏராளமான அறிவியல் சோதனைகளின் முடிவுகளை வரைபடங்களுடன் 1977-ல் ''க்ரியேடிங் அன் ஐடியல் சொஸைடி – மஹரிஷி எஃபெக்ட்' என்ற 170 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. ஆழ்நிலை தியானத்தைப் பற்றி நூற்றுக்கும் மேலான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. என்ற போதிலும் இது குறிப்பிடத்தக்க புத்தகமாக அமைகிறது.
இதிலுள்ள அறிவியல் சோதனை முடிவுகள் விவரிக்கும் வரைபடங்களின் சுருக்கத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
உயிர்ப்பொருள் மாறுபாடு என்னும் மெடபாலிக் ரேட், ஆக்ஸிஜன் அளவை அளப்பதன் மூலம் பெறப்பட்டது. ஆழ்நிலை தியானத்தின் போது ஆக்ஸிஜனை உட்கொள்ளும் அளவு வியக்கத்தக்க அளவில் குறைவாக இருந்தது. இது ஒரு ஆழ்ந்த ஓய்வை உடலுக்குத் தருகிறது.
எலக்ட்ரோ கார்டியோ கிராம் மூலமாக ஆழ்நிலை தியானத்தில் தேர்ந்த 11 பயிற்சியாளர்கள் மூலமாக அவர்களது இதயத் துடிப்பின் அளவு ரிகார்ட் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போது இதயத்துடிப்பின் அளவு நிமிடத்திற்கு ஐந்து துடிப்புகள் குறைவது தெரிய வந்தது.
முன்கையில் ஏற்படும் ரத்த ஓட்டத்தை ஐந்து பேரிடம் ஆழ்நிலை தியானத்திற்கு முன்னர், தியானம் செய்யப்படும் நிலையில் மற்றும் ஆழ்நிலை தியானம் முடிந்த பின்னர் அமைதியாக உட்காரும் நிலையில் 180 முறை அளவுகள் எடுக்கப்பட்டன. இந்த முன்கை ரத்த ஓட்ட அளவு தானியங்கி நரம்பு மண்டலத்தின் நிலையைத் தெளிவாகக் காட்டும் ஒன்று. 32 சதவிகித முன்கை ரத்த ஓட்ட அளவு அதிகரிப்பு தானியங்கி மண்டலத்தின் அதிக அளவு சமச்சீர் நிலை பெறுவதைத் தெளிவாகக் காட்டியது.
ப்ளாஸ்மா கார்டிஸாலின் அளவு வெகுவாகக் குறைவது காணப்பட்டது. அதிக அளவு கார்டிஸால் அதிக அளவு கவலையையும், மனநிம்மதி அற்ற தன்மையையும் கொண்டதைக் காட்டும். ஆனால் ஆழ்நிலை தியானத்தால் கவலை, மன அழுத்தம் குறைந்து எப்போதும் சமச்சீருடனான சாந்தமான மனநிலையைக் கொண்டிருப்பதைக் காட்டியது.
தோலின் எதிர்ப்புத் தன்மை கூடுகிறது.
படைப்பாற்றல் திறன் கூடுகிறது.
நுண்ணறிவுத் திறன் கூடுகிறது.
மதுப்பழக்கம் போன்றவற்றைத் தடுக்கிறது.
இதுபோன்ற இன்னும் ஏராளமான நலன்களை அறிவியல் சோதனைகள் நிரூபிப்பதைக் காண்கிறோம்.
நுண்ணறிவின் 40 அம்சங்களை வளர்க்கும் தியானம்!
நுண்ணறிவுக்கு 40 குணாதிசயங்கள் உள்ளன.
1) ஆற்றலுடன் கூடிய மௌனம், 2) எப்போதும் நீரோட்டம் போல அமைந்துள்ள விழிப்பு நிலை, 3) கொடுத்தலும், உருவாக்குதலும், 4) துடிப்புள்ள முழுமை நிலை, 5) வெளிப்படுத்தும் திறன், 6) மாற்றும் திறன், 7) விரிவடையும் திறன், 8) தனக்கு பரிந்துரைத்தல், 9) அளத்தலும், நிர்ணயித்தலும், 10) அனைத்தும் அறிதல், 11) வேறுபாடுகளை அறிதலும் முடிவெடுத்தலும், 12) குறிப்பாகச் சொல்லுதல், 13) விரிவாக்கல், 14) ஒருங்கிணைத்தல், 15) பகுத்தாய்தல், 16) முழுமையாக வாழ்தல், 17) ஒருங்கிணைத்து ஒத்திசைத்தல், 18) மறைந்திருத்தலும், முன்னேற்றமும், 19) நிலைநிறுத்தல், 20) போஷித்தல், 21) வகைப்படுத்தல், 22) சமான உறவு, 23) சமச்சீர்ப்படுத்தல், 24) பிரித்தல், 25) தகவல் தொடர்பும், பேச்சாற்றலும், 26) பகுத்தாராய்தல், 27) அனைத்தையும் ஒருங்கு சேர்த்தல், 28) அறிவு ஒளி பெறுதல், 29) ஆழ்நிலை அடைதல், 30) கலக்குதல், 31) முழுமையை விகசிக்க வைத்தல், 32) புராதனமானதும் எப்போதும் உள்ளதும், 33) நினைவாற்றல், 34) எங்கும் விரவியுள்ள முழுமை, 35) அமைதிப்படுத்தல், 36) பகிர்தல், 37) பரப்புதல், 38) கட்டவிழ்த்தல், 39) கரைதல், 40) உதிரிப் பகுதிகளை நீக்கி முழுமையை உருவாக்கல் ஆகிய நுண்ணறிவின் நாற்பது குணாதிசயங்களையும் வேதம், உபநிடதம், சாத்திரங்கள் விளக்கியுள்ளன.
இந்த நாற்பது அம்சங்களையும் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானப் பயிற்சி, யோகமுறைகள் மற்றும் பறக்கும் திறனுடன் கூடிய சித்தி திட்டம் ஆகியவற்றின் மூலம் பெறலாம்.
2000-ம் ஆண்டில் அவர் அமைதிக்கான உலக நாடு ஒன்றை உருவாக்கினார்.
ஆழ்நிலை தியானம் எங்கெல்லாம் அதிகமாகப் பரவியதோ அங்கெல்லாம் அந்த நாடுகளில் குற்ற விகிதம் கணிசமாகக் குறைந்ததை புள்ளி விவரங்களுடன் தந்து அந்தந்த நாட்டின் அறிஞர்கள் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர்.
மறைவு: ஸ்விட்சர்லாந்தில் செலிஸ்பர்க்கைத் தன் தலைமையகமாகக் கொண்டு உலக மையங்களை அவர் இயக்கலானார். பின்னர் 1991-ம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ள விளாட்ராப் என்ற இடத்திற்குச் சென்ற அவர் 2008-ல் அவர் மறையும் வரை அங்கேயே தங்கலானார்.
வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அவர் தனது இரு அறைகளை விட்டு வெளியே வரவில்லை. பெரும்பாலும் வீடியோக்கள் மூலமாகவே அவர் பார்வையாளர்களைச் சந்தித்தார்; உரைகளை நிகழ்த்தினார்.
2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி உறங்குகையில் மிக அமைதியாக அவர் தன் உடலை உகுத்தார். அப்போது அவருக்கு வயது 91. மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஆழ்நிலை தியான இயக்கத் தலைமைப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார்.
அவரது மறைவை ஒட்டி ஒலிபரப்பு ஒன்றை மேற்கொண்ட பி.பி.சி. உலக ஒற்றுமைக்கும் உலக மக்களுக்காகவும் ஓயாமல் உழைத்த மாமனிதர் மகேஷ் யோகி என்று வானளவாகப் புகழ்ந்தது.
மஹரிஷியின் பொன்மொழிகள்:
ஒரு மனிதனை ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும், தேவையான செல்வத்துடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ வைக்கும் ஆசனங்கள் மற்றும் தியான முறைகளைக் கற்பிப்பதே ஆழ்நிலை தியானம் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
மஹரிஷி தனது வாழ்க்கையில் ஏராளமான அறிவுரைகளைத் தந்துள்ளார். அவற்றில் சில:-
இருளுடன் சண்டை போடாதீர்கள். ஒளியை ஏற்றுங்கள். இருள் தானே மறையும்.
எப்போதும் சந்தோஷமாக இருப்பதே முக்கியமானது. சந்தோஷமாக இருக்கும்போது இயற்கையின் அரிய உதவி மிக அதிகமாகக் கிடைக்கும். மனமே தான் எல்லாம். நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம்.