நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்!
- மண்ணுக்குள் மூன்று மாத காலம் புதைந்திருந்த பிரம்மேந்திரர், தொடர் தியானத்தில் ஆழ்ந்து சமாதியில் இருந்திருக்கிறார் என்பதை அன்பர்கள் புரிந்து கொண்டார்கள்.
- புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவப் பிரம்மேந்திரரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அளவற்ற வியப்படைந்தான்.
சதாசிவப் பிரம்மேந்திரர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். ஆடையற்று உலவிய அத்வைத வேதாந்தி. தத்துவச் செறிவு நிறைந்த சமஸ்கிருதக் கீர்த்தனைகளால் கர்நாடக இசைத்துறைக்குப் பெரும் பங்களித்தவர்.
`பஜரே கோபாலம், சிந்தா நாஸ்திகிலா, பிபரே ராமரசம்` உள்ளிட்ட அவரது பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை. பற்பல அற்புதங்களை நிகழ்த்திய மகான் அவர்.
பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது திடீரென்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புற உணர்வின்றி தியானத்தில் ஒன்றியிருந்த அவர், தன் தலைக்குமேல் வெள்ளம் போனதை உணரவில்லை.
மூன்று மாதங்கள் கழிந்தன. வெள்ளம் வடிந்தது. ஆற்றில் மணல் அள்ளியவர்கள் மணலின் கீழ் ஒரு மனித உடல் தென்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
கண்டெடுத்த உடலை மெல்ல ஆற்றங்கரைப் படித்துறையில் வைத்து நீராட்டினார்கள். அவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான் என்பதை அன்பர்கள் கண்டுகொண்டார்கள்.
திடீரெனக் கண்விழித்து எழுந்தார் பிரம்மேந்திரர்! வலக்கரம் உயர்த்தி எல்லோருக்கும் ஆசி வழங்கி, எதுவுமே நடவாததுபோல் விறுவிறுவென்று நடந்து சென்றுவிட்டார்!
மண்ணுக்குள் மூன்று மாத காலம் புதைந்திருந்த அவர், தொடர் தியானத்தில் ஆழ்ந்து சமாதியில் இருந்திருக்கிறார் என்பதை அன்பர்கள் புரிந்து கொண்டார்கள். அவர் சென்ற திசைநோக்கிக் கீழே விழுந்து வணங்கினார்கள்.
சதாசிவப் பிரம்மேந்திரர் எத்தனையோ சித்துக்கள் கைவரப் பெற்றிருந்தார். அவற்றின் மூலம் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினார். எனினும் எதையும் தன் செயல் என்பதாக அவர் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.
தன்னை ஒரு மகான் என்று அவர் காட்டிக்கொள்ள முயன்றதே இல்லை. ஆடை அணிவதிலும் அக்கறை அற்றவராக, திகம்பர சன்னியாசியாகத் திரிந்து வந்தார்.
மனம் ஒன்றிய தியானத்தாலும் தவத்தாலும் அவரிடம் இயல்பாய் ஏற்பட்டிருந்த சக்திகள் தேவைப்பட்ட தருணங்களில் தானாகவே வெளிப்பட்டு வேலை செய்தன. அந்த அற்புதங்கள் தன்னால்தான் நிகழ்கின்றன என்றுகூட அவர் ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை.
ஒருமுறை நெற்குவியல் ஒன்றில் அமர்ந்தவர் அப்படியே இறைதியானத்தில் தோய்ந்து சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். நேரம் கடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த காவல்காரன் திடீரென அவரைப் பார்த்தான். அவர் நெல் திருட வந்த திருடன் என நினைத்துவிட்டான். ஒரு பிரம்பால் அவரை அடிக்க எண்ணிப் பிரம்பை ஓங்கினான்.
மறுகணம் அவன் தூக்கிய கை தூக்கியபடியே கீழே இறங்காமல் நின்றுவிட்டது. பிரம்மேந்திரர் சமாதி நிலை கலைந்து கண்விழித்து அவனை அருள்பொங்கப் பார்த்த பின்னர்தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது.
அவர் ஒரு மகான் என்பதைப் புரிந்துகொண்ட அவன் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அதற்குள் அவர் விரைவாக நடந்து அந்த இடத்தை விட்டே சென்றுவிட்டிருந்தார்.
அவர் அடிக்கடி இந்த உலகத்திற்கு வந்து போகிறவராகவும் ஆனால் அவர் உலகம் தனித்த வேறோர் உலகம் என்றும் அந்தக் காவலாளிக்குத் தோன்றியது. அவரை தரிசித்ததையே பெரும் பாக்கியமாகக் கருதினான் அவன்.
ஒருமுறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு விறுவிறுவென நடந்து போய்க் கொண்டிருந்தார் பிரம்மேந்திரர். வழியில் சிலர் ஒரு வண்டியில் மரக்கட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
உணர்வில்லாமல் கட்டைபோல் நடந்து போய்க் கொண்டிருந்த பிரம்மேந்திரரைத் தொட்டு நிறுத்தினான் ஒருவன். வண்டியில் ஏற்ற உதவியாகக் கட்டைகளை எடுத்துத் தருமாறு அதட்டினான்.
அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. கட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தார். பின் தொடர்ந்து நடக்கலானார்.
நிர்வாணமாகத் திரியும் ஒரு பைத்தியம் என்று அவர்கள் அவரை நினைத்தார்களே அன்றி அவர் ஒரு மகான் என்பதை அவர்கள் அறியவில்லை. தங்களுக்கு உதவிய அவரிடம் அவர்களுக்கு எந்த நன்றியுணர்ச்சியும் தோன்றவில்லை.
'இந்தக் கட்டை போகுமிடம் எதுவோ?' என்று அவரைச் சுட்டிக்காட்டி அவரிடமே ஏளனமாகக் கேட்டான் ஒருவன்.
பிரம்மேந்திரர் ஏதொன்றும் பேசாமல் கட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை ஒரு பார்வை பார்த்தார். அடுத்த கணம் வண்டியில் ஏற்றப்பட்டிருந்த கட்டைகள் அனைத்தும் தானே திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.
வெடவெடத்துப்போன அவர்கள் அப்போதுதான் அவர் ஒரு மாபெரும் மெய்ஞ்ஞானி என்பதைப் புரிந்து கொண்டார்கள். அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள்.
மறுபடி வண்டியையே உற்றுப்பார்த்தார் பிரம்மேந்திரர். நெருப்பு அணைந்தது. பாதங்களில் விழுந்தவர்கள் எழுந்து நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவர் தன் வழியே மிக வேகமாய் நடந்து சென்றுவிட்டார்.
ஒருமுறை அவர் நடந்துபோகும் வழியில் ஒரு நவாபின் அந்தப்புரம் குறுக்கிட்டது. தன் நினைவேயில்லாத பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் உள்ளே நடக்கலானார். நிர்வாணமாக ஒருவர் வருவதைப் பார்த்ததும் அந்தப்புரப் பெண்கள் அலறினார்கள். விவரமறிந்து ஓடிவந்த நவாப் சீற்றத்துடன் பிரம்மேந்திரரின் கரத்தை வெட்டினான். வெட்டிய கரம் கீழே கிடக்க பிரம்மேந்திரர் சலனமில்லாது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்!
நவாப் பயந்துவிட்டான். அவர் ஒரு பெரிய மகான் என்பதை உணர்ந்து கொண்டான். உடனே, வெட்டப்பட்ட அவரது கையைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து ஓடினான். அவரை நிறுத்தி உலுக்கி உலக நினைவுக்குக் கொண்டு வந்தான்.
நடந்ததைச் சொல்லி வலக்கரத்தை அவர் மறுபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குற்ற உணர்ச்சி தன்னை வாட்டும் என்றும் அழுதும் தொழுதும் விண்ணப்பித்தான். அப்படியா எனக் கலகலவென்று குழந்தைபோல் சிரித்த பிரம்மேந்திரர், அந்த வலக்கரத்தைத் தன் இடக்கரத்தால் வாங்கித் தன் தோள்பட்டையில் மறுபடி பொருத்திக் கொண்டார்.
ஆச்சரியம். உடனே கரம் ஒட்டிக்கொண்டு முன்பு போலவே ஆகிவிட்டது. கண்ணீர் விட்டுக் கரைந்த நவாப் அவரை விழுந்து வணங்கி நிமிர்ந்தபோது அவர் அங்கே இல்லை. மிக வேகமாக நடந்து எங்கோ சென்றுவிட்டார்.
ஒருவன் தன் கையை வெட்டியதைக் கண்டும் கூட அவரிடம் எள்ளளவு கோபமும் ஏற்படவில்லை. சாதாரணமான மனித உணர்வுகளையெல்லாம் அவர் என்றோ கடந்து விட்டிருந்தார். அவர் மனம் எப்போதும் கடவுளைப் பற்றிய சிந்தனையிலேயே தோய்ந்திருந்தது.
புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவப் பிரம்மேந்திரரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அளவற்ற வியப்படைந்தான். அவர் அருளைப் பெற விரும்பினான்.
அவர் இருக்குமிடம் அறிந்து அங்கே சென்று அவரை வணங்கிப் பணிந்தான். அவரைத் தன் அரண்மனைக்கு ஒருமுறை வந்துசெல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தான்.
மவுன விரதம் மேற்கொண்டிருந்த பிரம்மேந்திரர் பதிலெதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். அவர் அரண்மனைக்கெல்லாம் வர மாட்டார் என்பதை அவன் புரிந்து கொண்டான். தனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுமாறு பணிவுடன் வேண்டினான்.
மன்னனைப் பரிவு பொங்கப் பார்த்த பிரம்மேந்திரர், கீழேயிருந்த மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தை விரலால் எழுதிக் காண்பித்தார். பின் அவன் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து விட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார்.
அவர் மணலில் எழுதிக் காண்பித்த மந்திரத்தை ஓலைச்சுவடியில் எழுதிக் கொண்டான் மன்னன். பின்னர் மிக எச்சரிக்கையாக பிரம்மேந்திரர் தன் புனித விரல்களால் மந்திரம் எழுதிய மணலைத் தன் பட்டு அங்கவஸ்திரத்தில் கட்டி எடுத்துக் கொண்டான். அந்த மணலை அவன் தன் அரண்மனைப் பூஜை அறையில் வைத்து பூஜித்து வரலானான்.
இவ்விதம் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, பிரம்ம ஞானியாகவே வாழ்ந்த பிரம்மேந்திரர் சித்தி அடைய முடிவு செய்தார். அருகில் இருந்த தன் அன்பர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமராவதி ஆற்றங்கரையோரம் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.
பக்தர்கள் அவர் சித்தி அடையப் போவதை எண்ணிப் பெருந்துயரடைந்தனர். 'இனி யார் எங்களுக்கு வழி காட்டுவார்கள்?' என்று கண்ணீர் விட்டுக் கரைந்தனர். பிரம்மேந்திரர் தம் கடைசிக் கீர்த்தனையை மணலில் எழுதிக் காட்டினார். 'சர்வம் பிரம்ம மயம் ரே ரே சர்வம் பிரம்ம மயம்...'
'எல்லாமே கடவுள்மயம் தான். கடவுளை எங்கே தேட வேண்டும்? நம் மனத்தின் உள்ளே அல்லவா தேடவேண்டும்? அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்' என்று பொருள்படும் கீர்த்தனை அது.
1755-ல் பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்தார். அவர் ஒரே சமயத்தில் மூன்று உடல்கள் எடுத்து நெரூர், மானாமதுரை, கராச்சி ஆகிய மூன்று இடங்களில் ஜீவசமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.
நெரூரில் உள்ள அவரது ஜீவ சமாதி பெரும்புகழ் பெற்றது. அதை நிர்மாணிக்க புதுக்கோட்டை மன்னர் உதவியிருக்கிறார். அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் தொடர்ந்து சென்று பிரம்மேந்திரரை வழிபடுகிறார்கள்.
இசைக் கலைஞர்கள் அங்கு சென்று அவர் இயற்றிய பாடல்களைப் பாடி அவருக்கு அஞ்சலி நிகழ்த்துகிறார்கள். பிரம்மேந்திரரின் ஆன்மிக அதிர்வலைகள் நெரூர் ஜீவ சமாதியில் செறிந்திருப்பதை அன்பர்கள் உணர்கிறார்கள்.
'ஒரு யோகியின் சுயசரிதை' என்ற புகழ்பெற்ற தன்வரலாற்று நூலை எழுதிய பரமஹம்ச யோகானந்தர், நெரூர் சென்று பிரம்மேந்திரர் சமாதியில் வழிபட்டிருக்கிறார். தன் நூலில் சதாசிவப் பிரம்மேந்திரர் குறித்த சில அற்புதச் செயல்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சதாசிவப் பிரம்மேந்திரரின் தூய திருவடிகளை இதயத்தில் இருத்தித் தியானம் செய்வதன் மூலம் காமம், குரோதம் முதலிய மன மாசுகள் நீங்கி நாம் தூய்மை பெறலாம்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com